June 10, 2023

அமிதாப்பச்சன், எஸ்.ஜே.சூர்யா இணைந்து நடிக்கும் ‘உயர்ந்த மனிதன்’ திரைப்படம்..!

இயக்குநர், நடிகர், இசையமைப்பாளர், தயாரிப்பாளர் என பன்முகத் திறமைகளை கொண்டவர் எஸ்.ஜே.சூர்யா.

கடந்த ஆண்டு ‘ஸ்பைடர்’, ‘மெர்சல்’ என இரண்டு பெரிய படங்களிலும் வில்லத்தனத்தில் மிரட்டிய எஸ்.ஜே. சூர்யா நடித்துள்ள ‘இறவாக்காலம்’, ‘நெஞ்சம் மறப்பதில்லை’ ஆகிய படங்கள் தற்போது ரிலீஸுக்கு தயாராக உள்ளன.

இந்நிலையில் தனது அடுத்த படம் பற்றிய அறிவிப்பை நேற்று மாலை ஜி.ஆர்.டி. கிராண்ட் ஹோட்டலில் நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் வெளியிட்டார் நடிகர் எஸ்.ஜே.சூர்யா.

ஸ்ரீதிருச்செந்தூர் முருகன் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் கே.சுரேஷ்கண்ணன் மற்றும் ஃபைவ் எலிமெண்ட்ஸ் என்று இரண்டு பெரிய நிறுவனங்களும் இணைந்து இந்தப் புதிய படத்தைத் தயாரிக்கின்றனர். இந்தப் படத்தில்தான் நடிகர் எஸ்.ஜே.சூர்யா அடுத்து நடிக்கவிருக்கிறார். படத்திற்கு ‘உயர்ந்த மனிதன்’ என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.

படத்தின் தலைப்புக்கு ஏற்றவகையில் இந்தியாவிலேயே உயர்ந்த நடிகரும், இந்தியாவின் சூப்பர் ஸ்டாருமான ‘பிக் பி’ எனப்படும் அமிதாப்பச்சனும் இந்தப் படத்தில் சூர்யாவுடன் நடிக்கவிருக்கிறார் என்பதுதான் இந்தப் படத்தின் ஹைலைட்.

நடிகர் அமிதாப்பச்சன் தனது இத்தனையாண்டு கால சினிமா வரலாற்றில் ஒரு நேரடி தமிழ்ப் படத்தில் நடிப்பது இதுதான் முதல் முறையாகும்.

இந்த ‘உயர்ந்த மனிதன்’ படத்தின் தலைப்பை தென்னக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வெளியிட்டு பெருமைப்படுத்தியுள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை எஸ்.ஜே.சூர்யா, இயக்குநர் தமிழ்வாணன், தயாரிப்பாளர் சுரேஷ் கண்ணன் ஆகியோர் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளனர். அப்போது படத்தின் தலைப்பையும், போஸ்டரையும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வெளியிட்டார். அந்தக் காணொளியை பத்திரிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சியோடு திரையிட்டு காண்பித்தார் எஸ்.ஜே.சூர்யா.

uarndha manithan-movie-team-1

இந்த விழாவில் படம் பற்றிப் பேசிய நடிகர் சூர்யா, “எத்தனையோ தருணங்களில் நாம் சந்தித்திருக்கிறோம். ஆனால் இந்த சந்திப்பு எனக்கு மிகவும் ஸ்பெஷல். நேற்று ட்விட்டரில் ‘என் அடுத்த படம் பற்றிய அறிவிப்பு பிரம்மாண்டமானதாக இருக்கும்’ என பதிவிட்டதற்கு மிகப் பெரிய ரெஸ்பான்ஸ் கிடைத்தது.

நான் அடுத்து நடிக்கும் படம் ‘உயர்ந்த மனிதன்’. தமிழ் மற்றும் இந்தி ஆகிய இரு மொழிகளிலும் இத்திரைப்படம் உருவாகிறது. இந்தியாவின் சூப்பர் ஸ்டாரான அமிதாப்பச்சன் சார் முதன்முறையாக இந்தத் தமிழ் படத்தில் நடிக்கிறார். நான் இந்தியில் நடிகனாக அறிமுகம் ஆகிறேன். இதற்காக நான்  நன்றி சொல்ல வேண்டியது இயக்குநர் தமிழ்வாணன் மற்றும் தயாரிப்பாளர் சுரேஷ் கண்ணன் ஆகியோருக்குத்தான்.

இயக்குநர் கொண்டு வந்த கதைதான் அமிதாப் சார்வரைக்கும் இந்த படத்தை கொண்டு சென்றிருக்கிறது. இரண்டு  வருடங்களுக்கும் மேலாக இந்தப் படத்துக்கான வேலைகள் நடந்தன. படத்தின் திரைக்கதைக்காக மட்டும் ஒரு வருடம் எடுத்துக் கொண்டார் இயக்குநர்.

படத்தின் ஸ்கிரிப்டை அமிதாப்பச்சன் சாரிடம் கொண்டுபோய்  கொடுத்தோம்.  படித்து முடித்த பிறகு அவர் எங்களை நேரில் அழைத்தார். “கதை எனக்கு ரொம்ப பிடித்திருக்கிறது, சில சந்தேகங்கள் இருக்கின்றன, அவற்றை விளக்க வேண்டும்…” என்றார். அவர் கேட்ட கேள்விகளுக்கு நாங்கள் விளக்கமளித்த பிறகு “இந்தப் படத்தில் கண்டிப்பாக நான் நடிக்கிறேன்…” என்றார்.

அமிதாப்பச்சன் சார் தன்னுடைய 2019 காலண்டரை காட்டும்போது நானே வியந்து போனேன், 5 நாட்கள்கூட எங்கள் படத்துக்கு அதிகமாக ஒதுக்க முடியாது என்ற நிலையில் மிகவும் பிஸியாக இருக்கிறார். 2019-ல் மட்டும் 6 படங்கள், கூடுதலாக கோன் பனேகா க்ரோர்பதி டிவி ஷோ, மற்றும் விளம்பரப் படப்பிடிபிப்புகள் என இந்த வயதிலும் அவ்வளவு பிஸியாக இருக்கிறார் அமிதாப் ஸார். அவர் நமக்கெல்லாம் மிகப் பெரிய இன்ஸ்பிரேஷன்.

இந்த அற்புதமான நிகழ்வை யார் அறிவிக்க முடியும் என்றால் அது நம்ம சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சாரால்தான் முடியும். அவருக்கு தகவல் சொன்ன பிறகு, அவரும் உடனடியாக ஷூட்டிங் ஸ்பாட்டுக்கே எங்களை அழைத்து, எங்களை வாழ்த்தி பட அறிவிப்பை வெளியிட்டார். அவருக்கும் எங்களது நன்றி..!

இந்தப் படம் இந்தியா முழுக்க மட்டுமின்றி சைனாவரை போகும். கதை அப்படி அமைந்திருக்கிறது. இந்தப் படத்துக்கு மிக பொருத்தமான தலைப்பு நடிகர் திலகம் சிவாஜி சார் நடித்த ‘உயர்ந்த மனிதன்’ டைட்டில்தான். இந்தத் தலைப்பை ஏ.வி.எம். நிறுவனத்திடம் இருந்து வாங்கியிருக்கிறோம்.

இந்த படத்துக்கு மிகப் பெரிய ஆதரவை கொடுத்த ஏ.ஆர்.முருகதாஸ் அவர்களுக்கும் நன்றி. கஷ்டத்தில் இருக்கும்போது இயக்குநர் சொன்ன வார்த்தைகளே எங்களுக்கு தெம்பை கொடுத்தது. நான் ஏதோ சாதனை செய்து விட்டது போல பேசுவதாக நினைக்க வேண்டாம். இந்த படத்தை ஒருங்கிணைத்ததே எனக்கு ஒரு பெரிய சாதனைதான்…” என்றார் நடிகர் எஸ்.ஜே.சூர்யா.

படத்தின் இயக்குநரான தமிழ்வாணன் பேசும்போது, “இந்தக் கதையை எழுதி முடித்தபோதே எஸ்.ஜே.சூர்யா சாரிடம் சொன்னேன். இந்த படத்தை ஆசைப்பட்டது மட்டும்தான் நான், இதை இந்த அளவுக்கு கொண்டு போனது சூர்யா சாரும், தயாரிப்பாளர் சுரேஷ் கண்ணன் சாரும்தான்.

அமிதாப்பச்சன் சார், சூர்யா சார் என இரண்டு ஹீரோக்கள் நடிக்கும் கதை இது. படத்தை பற்றிய மற்ற தகவல்களை அவ்வப்போது தெரிவிக்கிறோம்…” என்றார் இயக்குநர் தமிழ்வாணன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *