அஜீத் நடித்த ‘ஆரம்பம்’, ‘என்னை அறிந்தால்’, விஜய் நடித்த ‘திருப்பாச்சி’, ‘கத்தி’ மற்றும் சமீபத்தில் வெளியான விஜய் சேதுபதியின் ‘விக்ரம் வேதா’, நயன்தாராவின் ‘அறம்’உள்ளிட்ட 400-க்கும் மேற்பட்ட படங்களை விநியோகம் செய்தவர் தயாரிப்பாளர் ஆர்.ரவீந்திரன்.
மேலும் தன்னுடைய சொந்த தயாரிப்பு நிறுவனமான டிரைடண்ட் ஆர்ட்ஸ் டிஜிட்டல் நிறுவனத்தின் மூலமாக ‘வெற்றிவேல்’, ‘சிவலிங்கா’ போன்ற படங்களையும் தயாரித்திருக்கிறார்.
இப்போது திரையுலகத்தில் தனது புதிய பயணத்தை துவங்கவிருக்கிறார் தயாரிப்பாளர் ஆர்.ரவீந்திரன். இப்போது பரபரப்பாக பேசப்படும் வெப் சீரிஸ் தயாரிப்பில் இறங்கியிருக்கிறார் ரவீந்திரன். இந்த முயற்சியில் இவருக்குக் கை கொடுத்து இணை தயாரிப்பாளராகியிருக்கிறார் பிரபல ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா.
1988-1989-களில் தமிழகத்தையே கலக்கிய விபச்சார தாதா ஆட்டோ சங்கரின் வாழ்க்கை வரலாற்றைத்தான் இந்த மினி சீரிஸில் படமாக்குகின்றனர். படத்திற்கு பெயரையும் ‘ஆட்டோ சங்கர்’ என்றே வைத்துள்ளனர்.
பிரபல மலையாள நடிகர் ஷர்த் அப்பனி இதில் கதாநாயகனாக நடிக்கின்றார். மேலும் ஸ்வயம், அர்ஜூன், வசுதா உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர்.
தயாரிப்பு நிறுவனம் – டிரைடண்ட் ஆர்ட்ஸ் டிஜிட்டல்ஸ் – தயாரிப்பாளர் ஆர்.ரவீந்திரன், இணை தயாரிப்பு – மனோஜ் பரமஹம்சா, இயக்குநர் – ரங்கா, எழுத்து, கிரியேட்டிவ் ஹெட் – மணிஜி, ஒளிப்பதிவு – மனோஜ் பரமஹம்சா, கலை இயக்கம் – ஜி.துரைராஜ், படத் தொகுப்பு – நிக்கில், சண்டை பயிற்சி – ஸ்டன்னர் சாம், நிர்வாகத் தயாரிப்பு – முரளி கிருஷ்ணன், நிகில். உடை வடிவமைப்பு – கார்த்திக், ஒப்பனை – மாலிக், மக்கள் தொடர்பு – நிகில்.
இயக்குநர் அஹமத்திடம் ‘மனிதன்’ படத்தில் உதவி இயக்குநராகப் பணியாற்றிய அறிமுக இயக்குநர் ரங்கா இந்த ‘ஆட்டோ சங்கர்’ மினி சீரிஸை இயக்குகிறார்.
இந்த மினி சீரிஸின் துவக்க விழா இன்று காலை நடைபெற்றது. இந்த விழாவில் தயாரிப்பாளர் ஆர்.ரவீந்திரன், ஒளிப்பதிவாளரும், இணை தயாரிப்பாளருமான மனோஜ் பரமஹம்சா, இயக்குநர் ரங்கா, எழுத்தாளர் மணிஜி மற்றும் படத்தில் பங்கு பெறும் அனைத்து தொழில் நுட்பக் கலைஞர்களும் கலந்து கொண்டனர்.