March 31, 2023

ஆணவக் கொலைகள் பற்றிய திரைப்படம் ‘குட்டி தேவதை

  • ஆணவக் கொலைகள் பற்றிய திரைப்படம் ‘குட்டி தேவதை’

     

    ஆணவக் கொலைகள் பற்றிய திரைப்படம் ‘குட்டி தேவதை’

    ஜெய்சக்தி மூவீஸ் நிறுவனம் சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள படம் ‘குட்டி தேவதை’.

    இந்தப் படத்தில் சோழவேந்தன் கதாநாயகனாகவும், தேஜா ரெட்டி கதாநாயகியாகவும், இன்னொரு கதாபாத்திரத்தில் அறிவரசும் அறிமுகமாகின்றனர்.

    மேலும் எம்.எஸ்.பாஸ்கர், வேல ராமமூர்த்தி, வாசு விக்ரம், காயத்ரி, சத்யஜித், ராஸ்மி, டாக்டர் சங்கர் கணேஷ், இவர்களுடன் குழந்தை நட்சத்திரம் சவி ஆகியோரும் நடித்துள்ளார்கள்.

    மு.மேத்தா, பிறைசூடன் இருவரும் பாடல்கள் எழுத அமுதபாரதி இசையமைத்திருக்கிறார். நெளசத்-சூரியன் இருவரும் ஒளிப்பதிவையும், லான்சி – மோகன் இருவரும் படத் தொகுப்பையும், சதீஷ் நடன பயிற்சியையும், ஸ்பீடு மோகன் சண்டை பயிற்சியையும், சந்தோஷ் கலையையும், ஆறுமுகம் – கார்த்திக் ராஜ் இருவரும் தயாரிப்பு நிர்வாகத்தையும் சி.செல்லன் தயாரிப்பு மேற்பார்வையையும் செய்துள்ளனர்.

    ராணியம்மாள் ராஜா, ராஜம்மாள் செல்லன், அனிதா ஸ்டாலின், யோக விக்னேஷ்வர் நால்வரும் இணை தயாரிப்பையும், பி.அறிவரசன் தயாரிப்பு பொறுப்பையும் ஏற்றுள்ளனர்.

    பல முன்னணி இயக்குநர்களிடம் வெற்றிப் படங்களில் பணியாற்றிய அறிமுக இயக்குநர் கே.அலெக்சாண்டர் இந்தப் படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார்.

    படம் பற்றி இயக்குநர் அலெக்சாண்டர் கூறுகையில், “இந்த 21-ம் நூற்றாண்டிலும் தமிழகத்தில் சாதிக் கொடுமைகள் இருந்து கொண்டுதான் இருக்கின்றது. கலப்புத் திருமணம் புரியும் காதலர்களுக்கு இன்னமும் பாதுகாப்பு இல்லை. சமூகம் அவர்களை வாழ விடுவதும் இல்லை.

    அப்படி ஒரு கிராமத்தில் சாதி விட்டு சாதி திருமணம் புரிந்த காதலர்களை பஞ்சாயத்து தலைவர் ஆணவக் கொலை செய்ய ஆயத்தமாகிறார்.

    ஊர் பரபரப்பாகிறது. ஆணவக் கொலை நடைபெற்றதா..? தப்பித்தார்களா..? என்பதை மண்ணின் மனம் மாறாமல் விறுவிறுப்பான திரைக்கதையில் சொல்லியிருக்கிறோம்.  

    சமீபத்தில் கோவையில்கூட அப்படி ஒரு ஆணவக் கொலை நடைபெற்றது. அந்த சம்பவம்தான் இந்த படம் பண்ணுவதற்கு தூண்டுகோலாக இருந்தது..” என்று கூறினார்.

    தற்போது படத்தின் படப்பிடிப்பு முழுவதும் நிறைவடைந்து பின்பணி வேலைகள் நடைபெற்று வருகின்றன.  விரைவில் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *