September 24, 2023

உத்தரவு மகாராஜா பத்திரிக்கையாளர் சந்திப்பு

ஜேஷன் ஸ்டுடியோஸ் சார்பில் நடிகர் உதயா வழங்க, உதயா, பிரபு, நாசர், ஸ்ரீமான், கோவை சரளா நடிப்பில்,

ஜி வி அய்யரிடம் உதவியாளராகப் பணியாற்றிய  ஆசிப் குரைஷி முதன் முதலாக எழுதி இயக்கி இருக்கும் படம் உத்தரவு மகாராஜா . படத்தின் முன்னோட்டத்துக்கு ஏகப்பட்ட வரவேற்பும் இசை வெளியீட்டு விழாவின் மூலம் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தி இருக்கும் ,

இந்தப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் படக் குழுவினர் கலந்து கொண்டு பேசினார்கள் . பேசிய எல்லோரும் தவறாமல் , உதயாவின் இனிய குணம் , நட்பான சுபாவம், , எளிமை , பிறருக்கு  உதவும் பண்பு, உழைப்பு  ஆகியவற்றோடு, 

 இந்தப் படத்தில் அவர் சிறப்பாக நடித்திருப்பதையும் குறிப்பிட்டு மனதாரப் பாராட்டிப் பேசினார்கள். 
இந்தப் படத்தின் மூலம் நடிகராக அறிமுகம் ஆகும் , நிகழ்ச்சித் தொகுப்பாளர் ஆடம்ஸ் , “என்னை நடிகராக அறிமுகப்படுத்தியதோடு ,
 
முதல் படத்திலேயே நல்ல கேரக்டரும் தந்த உதயாவுக்கு நன்றி .. சர்க்கார் போன்ற பெரிய படங்கள் மேல கேஸ் எல்லாம் வருது .
 
அப்படி இந்தப் படத்தின் மீதும் யாரவது கேஸ் போட்டால் நல்ல விளம்பரம் கிடைக்கும் ” என்றார் .
 

தயாரிப்பாளர் தனஞ்செயன் தன் பேச்சில் ,“இந்த மேடைக்கு  நான் தயாரிப்பாளராக வரவில்லை  . நடிகனாக வந்துள்ளேன்.

ஒரு நாள் உதயா எனக்கு போன் செய்து, ‘ சார் .. ஒரு முக்கிய கேரக்டர் . நடிக்க வரவேண்டியவர் வர முடியவில்லை . நீங்கள் நடித்துத் தர முடியுமா ?” என்று கேட்டார் .

போனேன் நடித்துக் கொடுத்தேன் . நிறைய வசனம் இருந்தது . 

படத்தில் என்னுடன் பத்திரிகையாளர் செந்தில் குமரனும் நடித்துள்ளார் . பல படங்களின் மூலம் நல்ல குணச்சித்திர நடிகராக அவர் வளர்ந்து வருகிறார் .

அவருக்கு என் வாழ்த்துகள் 

மிக முக்கியமாக உதயாவின் உழைப்பு அபாரமானது . அவர் எல்லாரையும் மதித்த விதமும் சிறப்பானது . படம் சிறப்பாக வந்துள்ளது ” என்றார் 

கதாநாயகி பிரியங்கா,“பிரபு சார் , உதயா சார் இப்படி பெரிய நடிகர்கள் நடிகர்கள் நடித்த — நல்ல கதையம்சம் உள்ள படத்தில் நானும் இருப்பது சந்தோசம் ” என்றார் . 

 ஸ்ரீமன் தனது பேச்சில் , ” நிறைய நடிகர்களை வைத்து மிக நல்ல கதையோடு இந்தப் படத்தை எடுத்து உள்ளார் உதயா .இது இரண்டு கரண்டி மாவை வைத்து  வி ஜி பி தோசை சுட்டதற்கு சமம்.  மிகவும் போராடி உள்ளார் . அவர் ஜெயிக்க வேண்டும்” என்றார் 

நாயகனும் தயாரிப்பாளருமான உதயா தனது பேச்சில், “இந்தப் படத்தின் ஹீரோ என்றால் பிரபு சார்தான் என்று சொல்லக் கூடிய அளவுக்கு தனது கேரக்டரை சிறப்பாக செய்துள்ளார் .

அவர் நடித்த திருநெல்வேலி படத்தில்தான் நான் நடிகனாக அறிமுகம் ஆனேன். அவரிடம் இருந்துதான் நேரம் தவறாமையை கற்றுக் கொண்டேன். 

 இது சவுண்டுக்கு முக்கியத்துவம் உள்ள ஒரு படம் 

மிகுந்த சிரமங்களுக்கு இடையே இந்தப் படத்தை எடுத்துள்ளேன் . நவம்பர் 16 ஆம் தேதி வெளியீடு என்று, 

எப்போதோ முடிவு செய்து, தயாரிப்பாளர் சங்கத்தில் அனுமதியும் வாங்கி , விளம்பரம் செய்து வருகிறேன் . 

ஆனால் இப்போது சொல்கிறார்கள்…விஜய் சேதுபதியின் சீதக்காதி படமும் , ஜெயம் ரவியின் அடங்க மறு படமும் அதே தேதியில் வெளிவர திட்டமிடுகின்றனர் என்று .

அவை வந்தால் என் படத்துக்கு தியேட்டர் கிடைக்காது . நான் வெகு நாட்களாக ‘ நவம்பர் 16 ஆம் தேதி வெளியீடு’ என்று, செலவு செய்து விளம்பரமும் செய்து விட்டேன் .

எனவே அவர்கள் தங்கள் வெளியீட்டை தள்ளிப் போட்டு எனக்கு உதவ வேண்டும் ” என்றார் 

பிரபு பேசும்போது,” இந்தப் படத்தில் மிக நல்ல கதை திரைக்கதையில் ஆசிப் குரைஷி சிறப்பான இயக்கத்தில் மிக அட்டகாசமாக நடித்துள்ளார் உதயா .

உயிரைக் கொடுத்து டப்பிங் பேசி உள்ளார் . படம் கண்டிப்பாக வெற்றி பெறும். அவர் பெரிய ஹீரோவாக உயர்வார் ” என்றார் 

படம் பற்றி இயக்குனர்  என்ன சொல்கிறார் ?”ஒரு காலத்தில் பள்ளிகளில் நீதி போதனை வகுப்புகள் இருந்தன . எது  நல்லது எதுகேட்டது என்று சொல்லித் தரும் வழக்கம் இருந்தது .

இன்று அவை இல்லாமல் போனதால் , சுயநலத்துக்காக என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற எண்ணம் உருவாகிவிட்டது . அது தப்பு.

மனம் நல்லதை சொல்லும்போது பணிந்து கேட்டுக்கொள்ள வேண்டும் என்பதை இந்தப் படம் சொல்லும் ” என்கிறார் 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *