September 30, 2023

ஊடகங்களுக்கு கடிதம் எழுதிய பாடலாசிரியர்

பாடலாசிரியரான மதன் கார்க்கி ஊடகங்களுக்கு நன்றி தெரிவித்து கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், “அன்புள்ள ஊடக நண்பர்களுக்கு, உங்களுக்கு நன்றி சொல்ல எழுதுகிறேன். பாடல் வெளியீட்டு விழாக்களிலும், பிற நிகழ்ச்சிகளிலும் உங்களில் பலரை நேரில் காணும்போதும் புன்னகை பரிமாற்ற மட்டுமே நேரமிருக்கும். ஒவ்வொரு ஆண்டின் இறுதியிலும் உங்களுக்கு நன்றி சொல்லாமல் மனம் நிறைவதில்லை.

இந்த ஆண்டு 36 படங்களில் பணிபுரிந்து 98 பாடல்கள் எழுதியுள்ளேன். டூபாடூவின் திரைப்படங்களுக்கான பாடல் வங்கிக்காக பல்வேறு இசைக்கலைஞர்களுடன் இணைந்து 58 பாடல்கள் இயற்றியுள்ளேன். பாடல்வரிகளையும் பாகுபலியில் என் வசனங்களையும் உங்கள் ஊடகங்களில் மேற்கோள் காட்டி புதிய முயற்சிகளை பாராட்டி மக்களுக்குக் கொண்டு சேர்த்த உங்களுக்கு என் நன்றி.

இந்த ஆண்டு வெளியான என் திரைப்பாடல்களுள் மக்களால் அதிகம் விரும்பிக் கேட்கப்பட்ட தரவரிசைகளில் இடம்பிடித்த சில பாடல்களை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி என்று தெரிவித்துள்ள அவர், விநோதன் படத்தின் பாலிண்ட்ரோம் பாடல் உட்பட காற்று வெளியிடை, பாகுபலி 2, வனமகன், சத்யா, ஸ்பைடர், சச்சின், அபியும் அனுவும், இப்படை வெல்லும், எந்திரன் 2.0, செய், வேலைக்காரன், டிக் டிக் டிக் போன்ற படங்களில் தான் எழுதிய பாடல்களைக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், “உங்கள் மூலமாக என் தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், இசையமைப்பாளர்கள் மற்றும் பாடகர்களுக்கு என் நன்றி. வரும் ஆண்டில் நல்ல பாடல்கள் மற்றும் வசனங்களுடன் உங்களைச் சந்திக்கிறேன். இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.” என்று கூறியுள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *