December 5, 2023

எனக்காக இல்லாவிட்டாலும், அவருக்காக இந்தப்படம் வெற்றிபெற வேண்டும் – பிரபுதேவா!

பல நாட்களாக அல்ல, பல வருடங்களாக கிடப்பில் கிடந்த தங்கர் பச்சானின் “களவாடிய பொழுதுகள்” ஒருவழியாக திரைக்கு வர இருக்கிறது. பிரபுதேவா, பூமிகா, பிரகாஷ் ராஜ் மற்றும் பல முன்னணி நடிகர்கள் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். சமீபத்தில் இந்தப் படத்தின் ட்ரைலர் வெளியாகி பரவலாக பாராட்டுகளை பெற்றது. இதுகுறித்து நடிகர் பிரபுதேவா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு,

“இந்தப் படம் முடிந்து வெகுநாட்கள் ஆகிவிட்டது. முதன் முதலில் இந்தப் படத்தில் நான் ஒப்பந்தமாகும் போது, பலரும் உங்களுக்கும் தங்கருக்கும் ஒத்து வருமா? என்று கேள்வி எழுப்பினார்கள். ஆனால் எனக்கும் அவருக்கும் நன்றாக ஒத்துப் போனது. இந்தப் படத்தை எடுப்பதற்காக மிகவும் கஸ்டப்பட்டிருக்கிறார் தங்கர் பச்சான். பணத்தாலும், மனதாலும் இந்தப் படத்திற்காக அவர் பட்ட கஷ்டம் கொஞ்சம் நஞ்சமல்ல. எனக்காக இல்லாவிட்டாலும் தங்கருக்காக இந்தப் படம் கண்டிப்பாக வெற்றிபெற வேண்டும். படம் எடுத்து முடித்த இடைப்பட்ட காலங்களிலும் நானும் தங்கரும் அடிக்கடி பேசிக்கொள்வோம், மாதம் ஒருமுறையாவது என்னிடம் பேசிவிடுவார் தங்கர் பச்சான்.

இந்தப் படத்தை பொறுத்தவரை, இது போல ஒரு கதையில் இதுவரை நான் நடித்ததில்லை. தங்கர் சார் என்ன சொன்னாரோ அதை மட்டுமே செய்திருக்கிறேன். இந்தப்படத்திற்காக அவர் நிறைய உழைத்திருக்கிறார். நிச்சயமாய் “களவாடிய பொழுதுகள்” வெற்றி பெற வேண்டும்” என்று தெரிவித்திருகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *