May 31, 2023

என்னைத் தூண்டிவிட்டதே விஷால்தான்…” – பொதுக்குழுவில் நடிகர் நாசர் பேச்சு..!

“என்னைத் தூண்டிவிட்டதே விஷால்தான்…” – பொதுக்குழுவில் நடிகர் நாசர் பேச்சு..!

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 65-வது பொதுக் குழுக் கூட்டம் இன்று சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது.

மதியம் 2.30 மணிக்கு தமிழ்த் தாய் வாழ்த்துடன் பொதுக் குழுக் கூட்டம்  ஆரம்பமாகியது.  மூத்த பெண் உறுப்பினர்களான ராஜஸ்ரீ, லதா, ரோகிணி, ‘பசி’ சத்யா, கோவை சரளா, சங்கீதா, சோனியா போஸ், குட்டி பத்மினி, லலிதகுமாரி, ஸ்ரீலேகா ஆகியோர் குத்து விளக்கு ஏற்றி நிகழ்ச்சியை துவக்கி வைத்தனர்.

siaa meeting

நிகழ்ச்சியின் துவக்கத்தில் மறைந்த மூத்த ஆயுட்கால உறுப்பினர், தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர் மு.கருணாநிதி, நடிகை ஸ்ரீதேவி உட்பட மறைந்த  48 சங்கத்தின் உறுப்பினர்களுக்கும் மற்றும் கேரளாவில் இயற்கை பேரிடலில் உயிர் இழந்தவர்களுக்கும் ஓரு நிமிட  மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

பின்பு தென்னிந்திய நடிகர் சங்கத்தின் துணை தலைவரான பொன்வண்ணன் வரவேற்புரை ஆற்றினார்.

ponvannan

அவர் பேசும்போது, “மலேசியாவில் நடைபெற்ற கிரிக்கெட் மேட்ச் பற்றிய ஐடியாவை முதலில் தெரிவித்தது நமது செயற்குழு உறுப்பினர்களான நந்தாவும், ரமணாவும்தான்.

அப்போது நாங்கள் இவர்களிடம் சொன்னது ‘இப்போதைக்கு நாங்கள் காசு தர முடியாது. நீங்கள்தான் தி்ட்டம் பற்றித் தயாரிக்க வேண்டும்’ என்றோம். அதற்கும் அவர்கள் எங்களிடத்தில் பைசா காசு வாங்காமல் தங்களுடைய சொந்த செல்வில் மலேசியாவிற்குச் சென்று அங்கே தங்கி ஏற்பாடுகளைக் கவனித்து வந்து, வந்து சென்று திரும்பி எத்தனை பெரிய கஷ்டம்.. யோசித்துப் பாருங்கள். இதையும் நமக்காக செய்தார்கள்.

அப்படியும் எத்தனையோ எதிர்ப்புகள் நமக்கு வந்து.. அங்கேயும்கூட அந்த விழாவுக்கு எதிர்ப்புகள் வந்தன. அத்தனையையும் சமாளித்துதான் அந்த நிகழ்ச்சியை நடத்தினோம்…” என்றார்.

தொடர்ந்து தென்னிந்திய நடிகர் சங்கத்தின் துணை தலைவரான கருணாஸ்  2017-2018-ஆம் ஆண்டின் தணிக்கை செய்யப்பட்ட வரவு செலவுகளை வாசித்து ஒப்புதல் பெற்றார்,

அடுத்து தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொருளாளரான நடிகர் கார்த்தி, சங்கத்தின் எதிர்கால பொருளாதார திட்டமிடல் பற்றி உறுப்பினர்களுக்கு எடுத்துரைத்தார்.

0J3A5443

கார்த்தி பேசும்போது, “கணக்கு வழக்கில்ஒரு பைசா மாறியிருந்தால்கூட மறுபடியும் கரெக்ட் செய்யச் சொல்வாங்க. அப்படி திருத்தம் செய்துதான் கடந்த எட்டு வருட கணக்கை உங்கள் முன்னாடி வைத்திருக்கிறோம். கருணாஸ் படித்த கணக்குக்கு உங்களிடம் முதலில் ஒப்புதல் கேட்டுக் கொள்கிறேன்.

7 கோடியும் செலவாயிருச்சு. கடந்த 4 மாதங்களில் மட்டும் 5 கோடியே 29 லட்சத்து 11 ஆயிரம் ரூபாய் செலவாகியிருக்கு. மீதமாக 40 லட்சம் ரூபாய் மட்டுமே உள்ளது என்பதை இங்கே தெரிவித்துக் கொள்கிறேன்.

சங்க உறுப்பினர்களின் பிள்ளைகளான 413 பேரின் படிப்பு செலவுக்காக சுமார் 30 லட்சம் ரூபாய் அளவுக்கு நிதியுதவி செய்திருக்கிறோம்.

எத்தனையோ எதிர்ப்புகள் தொடர்ந்து வந்தாலும் அத்தனையும் கடவுள் புண்ணியத்தில் கடந்து போய்க் கொண்டே வந்தோம். அந்த இடத்தில் எத்தனையோ வழக்குகள் போட்டார்கள். அத்தனையையும் சரி செய்து.. ஏக்கர் கணக்கில் கணக்கிட்டு ஒப்பிட்டுப் பார்த்து.. அது ரோடே இல்லை என்று நீதிமன்றத்திலேயே சொல்லிவிட்டார்கள். நிச்சயமாக கட்டிடம் அங்கே வரும்…” என்றார்.

பின்பு சங்கத்தின் பொதுச் செயலாளரான நடிகர் விஷால் சங்க நிர்வாகத்தின் இரண்டாண்டு செயல்பாடுகளை விளக்கி உறுப்பினர்களிடையே ஒப்புதல் பெற்றார்.

vishal

நடிகர் விஷால் பேசும்போது, “எத்தனை வழக்குகள் வேண்டுமானாலும் போடுங்கள். இது எம்.ஜி.ஆர். ஐயா, சிவாஜி ஐயா ஆகியோரின் ஆவிகள் இருக்குற இடம். இங்கே தவறுகள் நடக்காது. நடக்கவும் முடியாது.

19 கிரவுண்டு நிலம் சங்க உறுப்பினர்களுடையது. அவர்கள் எடுத்துக் கொடுத்த செங்கல்லை வைத்து உருவாக்கப்படும் கட்டிடத்தை எத்தனை தடைகள் வந்தாலும் அதை நாங்கள் தடுத்து கட்டிடத்தை உருவாக்குவோம். தடைகளை நாங்கள் பார்த்துக் கொள்வோம். அந்தத் தடைகளைத் தாண்டித்தான் கட்டிடத்தை பார்க்கணும்ன்னா அதையும் தாண்டியே பார்ப்போம்.

நீங்கள் அனைவரும் நன்றாக இருக்க வேண்டும் என்பதுதான் எங்களுடைய ஆசை. எங்களால் முடிந்த அளவுக்கு உங்களுக்கு உதவி செய்ய முயற்சி செய்கிறோம். இனியும் செய்வோம். எந்தவொரு காழ்ப்புணர்ச்சியும் இல்லாமல், எந்தவொரு கெட்ட எண்ணமும் இல்லாமல் உங்களுக்காக நாங்கள் செயல்படுகிறோம். இந்த நாற்காலியில் அமர்ந்து என்றில்லை.. கீழே அமர்ந்துகூட செயல்படுவோம்..” என்றார்.

மேலும், “கட்டிடம் கட்டும் பணி இன்னமும் நிறைவடையவில்லை. கட்டிடம் கட்டி முடிக்க இன்னமும் கூடுதலாக 20 கோடி ரூபாய் பணம் தேவை. அதற்காக மேலும் இரண்டு கலை நிகழ்ச்சிகள் நடத்த வேண்டியிருப்பதால் சங்கத்தில் தற்போது தேர்தல் நடத்தாமல் மேலும் ஆறு மாதங்களுக்கு தள்ளிப் போட வேண்டும்..” என்று கோரி இதற்காக பொதுக் குழுவின் ஒப்புதலை கேட்டார் நடிகர் விஷால்.

இதற்கு பொதுக்குழு உறுப்பினர்கள் கை தட்டி அத்தீர்மானத்தை வரவேற்றதையடுத்து, ‘தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தேர்தல் ஆறு மாதங்களுக்கு ஒத்தி வைக்கப்படுகிறது’ என்கிற தீர்மானம், சங்கத்தின் பொதுக் குழுவில் நிறைவேறியதாக அறிவிக்கப்பட்டது..!

siaa meeting

நடிகர் கருணாஸ் பேசும்போது, “தென்னிந்திய நாடக நடிகர் சங்கத்தின் உறுப்பினர்களும் நமது தென்னிந்திய நடிகர் சங்கத்தின் கட்டிட நிதிக்கு தங்களுடைய சார்பாக பெரும் தொகையை வழங்க ஆர்வத்துடன் இருக்கிறார்கள்.

இதற்காக மதுரை தமுக்கம் மைதானத்தில் அனைத்து நாடக நடிகர் சங்கங்களும் இணைந்து ஒரு கலை நிகழ்ச்சி நடத்தி அதன் மூலம் கிடைக்கும் தொகையை தென்னிந்திய நடிகர் சங்கம் கட்டி வரும் கட்டிடத்திற்காக வழங்க ஒரு வாய்ப்பை தரும்படி கேட்டுக் கொள்கிறேன்..” என்றார்.

இதனை தொடர்ந்து கூட்டத்தில் கலந்து கொண்ட உறுப்பினர்கள் தங்கள் கருத்துக்களை பதிவு செய்தனர்.

நிறைவாக தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவரான நாசர் ஏற்புரை மற்றும் நன்றி உரை ஆற்றினார்.

0J3A5440

நடிகர் நாசர் பேசும்போது, “தற்போது நமது அண்டை மாநிலமான கேரளத்தில் பெரும் துயரம் நடந்து கொண்டிருக்கிறது. நமது சென்னையில் ஏற்பட்ட சேதத்தைவிடவும் ஆயிரம் மடங்கு அதிகமான சேதம் கேரளாவில் இப்போது நடந்திருக்கிறது.

அவர்களும் நமது சகோதரர்கள்தான். அங்கேயிருக்கும் சங்கத்தில் இருப்பவர்கள் நமது சங்கத்திலும் இணைந்திருக்கிறார்கள். ‘உடுக்கை இழந்தவன் கைபோலே ஆங்கே இடுக்கண் களைவதாம் நட்பு’ என்பதை போல நாம் கேட்காமலேயே அவர்கள் நமது சென்னை வெள்ளத்திற்கு பல உதவிகளைச் செய்தார்கள்.

நடிகர் சங்கம் அவர்களுக்கு உதவி செய்து கொண்டிருக்கிறது. நீங்களும் சங்கம் சார்பாக இல்லையென்றாலும், தனிப்பட்ட முறையிலும் உங்களால் எந்தவிதத்தில் உதவிகளைச் செய்ய முடியுமோ என்னவெல்லாம் செய்ய முடியுமோ.. அவற்றையெல்லாம் செய்யும்படி தென்னிந்திய நடிகர் சங்கத்தின் சார்பாக கேட்டுக் கொள்கிறேன்.

எனக்கு இன்று அதிகம் வேலையில்லை. எல்லாம் விஷால்தான். என்னைத் தூண்டிவிட்டது விஷால்தான். தேர்தலில் நிற்கும்போதே ‘தம்பி.. வேண்டாம்டா. எனக்கு ஒரு மாதிரி இருக்கு. வேற மாதிரி நடந்திரும்’ என்றேன். ‘என்ன வேற மாதிரி நடந்திரும். அதையும் பார்த்திருவோம்..?’ என்றார் விஷால். ஒரே ஒரு தூண்டுதல்.. அது விஷால்தான்.

தூண்டி.. தூண்டி.. தூண்டி.. தூண்டி.. ‘என்ன பண்ணிரப் போறாங்க.. அதான் சொல்லிட்டாங்கள்ல.. நாமளும் உறுப்பினர்கள்தான.. பண்ணிப் பார்ப்போம். இப்பக்கூட சீரியஸா எடு்த்துக்கலைன்னா எப்படி..?’ என்று என்னைத் தூண்டிவிட்டவர் விஷால்தான்..” என்றார்.

இறுதியாக  தேசிய கீதத்துடன் பொதுக் குழுக் கூட்டம் நிறைவடைந்தது,

0J3A5402

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் செயற்குழு உறுப்பினரான நடிகர் பசுபதி, இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

பொதுக்குழுக் கூட்டத்தில் கலந்து கொண்ட உறுப்பினர்களுக்கு  மதிய உணவு வழங்கப்பட்டது. இதற்கான செலவினை ஏற்றுக் கொண்ட நடிகர்கள் விக்னேஷ், சூரி, மனோபாலா, சதிஷ், யோகி பாபு, சாம்ஸ் ஆகியோருக்கு கூட்டத்தில் நன்றி தெரிவிக்கப்பட்டது. 

இந்தப் பொதுக் குழுக் கூட்டத்தில்  அறங்காவலர் குழு உறுப்பினர்கள் பூச்சி முருகன், ஐசரி கணேஷ், ராஜேஷ், செயற்குழு உறுப்பினர்கள் ஸ்ரீமன், பசுபதி, A.L. உதயா, ரமணா, நந்தா, பிரேம்குமார், விக்னேஷ்,T.P. கங்கேந்திரன், M.A.பிரகாஷ், தளபதி தினேஷ், அயூப்கான், பாலதண்டபாணி, கோவை சரளா, சிவகாமி, சங்கீதா, சோனியா, மற்றும் நியமன செயற்குழு உறுப்பினர்கள் மனோபாலா, சரவணன், அஜய் ரத்தினம், லலிதா குமாரி, ஹேமச்சந்திரன், மருது பாண்டியன், ஜெரால்டு மில்டன், வாசுதேவன், பழ.காந்தி, காளிமுத்து, ரத்தினசபாபதி, K.K.சரவணன், காமராஜ், காலிலுல்லா, சங்கத்தின் பொது மேலாளர் பாலமுருகன்…

நடிகர்கள் விஜயகுமார், K.பாக்யராஜ், G.K.ரெட்டி, S.Ve.சேகர், ஆனந்தராஜ், விஜய் சேதுபதி, ஜீவா, ஜெகன், சதிஷ், யோகி பாபு, அருண் விஜய், நட்டி நடராஜ், ஜே.பி., ஹரிஷ் உத்தமன், பிரேம்ஜி, ‘கயல்’ சந்திரன், சந்தானபாரதி, கஞ்சா கருப்பு, மன்சூரலிகான், முன்னா, ரவி மரியா, ஆன்சன், ரியாஸ்கான், சௌந்தர்ராஜன், ‘பிளாக்’ பாண்டி, மகேந்திரன், ராமகிருஷ்ணன்… 

நடிகைகள்  காஞ்சனா, சரோஜாதேவி, பாரதி, ராஜஸ்ரீ, ஷீலா, லதா, ஜெயமாலா, ஹேமா சௌத்திரி, சுகாசினி, ரோகிணி, பூர்ணிமா பாக்யராஜ், சத்யபிரியா, ‘பசி’ சத்யா, ஊர்வசி, ஆர்த்தி கணேஷ், ஷாலு, ஸ்ரீலேகா, மற்றும்…

சேலம், நாமக்கல், மதுரை, திருச்சி, கோயம்பத்தூர், வேலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ஆகிய ஊர்களை சேர்ந்த உறுப்பினர்களான நாடக நடிகர்களும் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *