ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களின் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய காவல்துறையின் செயல் மண்ணிக்க முடியாதது- இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 50லட்சம் நிவாரணத்தொகை வழங்க வேண்டும் – படுகொலைக்கு பொறுப்பேற்று எடப்பாடி அரசு பதவி விலக வேண்டும் – எஸ்.டி.பி.ஐ கட்சி வலியுறுத்தல்..!
இது தொடர்பாக சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் நடைபெற்ற பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம்.தெஹ்லான் பாகவி கூறியதாவது;
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராடிவரும் தூத்துக்குடி மாவட்ட மக்கள் கூட்டமைப்பு, பல்வேறு அரசியல் கட்சிகள், வணிக சங்கங்கள், மீனவ சங்கங்கள், தாய்மார்கள், குழந்தைகள் உட்பட ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் போராட்டத்தை 100 நாட்களாக நடத்தி வருகின்றனர் இன்று அரசின் கவனத்தை ஈர்ப்பதற்கு மாவட்ட ஆட்சியர் அலுவலக முற்றுகைப் போராட்டத்தை அறிவித்திருந்தனர்.
இந்நிலையில் நேற்றைய தினம் மாவட்ட ஆட்சித்தலைவர் 144 தடை உத்தரவு பிறப்பித்தார். எனினும் தடை உத்தரவை மீறி தங்களின் எதிர்கால வாழ்க்கைக்காக போராடிய தூத்துக்குடி அப்பாவி மக்கள் மீது காவல்துறை துப்பாக்கிச் சூடு நடத்தி 10க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டு இருப்பது தமிழக காவல்துறையும் அரசும் செய்த மிகப்பெரிய வரலாற்றுப்பிழை ஆகும் மண்ணிக்கமுடியாத குற்றமாகும்
மேலும் பலர் படுகாயமுற்றுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் ஊடகத்தைச் சார்ந்தவர்கள் மீதும், அவர்களின் ஒளிபரப்பு சாதனங்களையும் காவல்துறையினர் சேதப்படுத்தியுள்ளனர்.
தூத்துக்குடி மக்களின் நியாயமான கோரிக்கைக்கு முறையாக செவி கொடுக்காத அரசு சொந்த மக்களையே சுட்டுக்கொல்வது அரக்கத்தனம், இது சர்வாதிகாரத்தின் உச்சம் ஆகும். இச்செயல் ஒருபோதும் ஏற்றுக் கொள்ளக்கூடியதல்ல.
மக்களுக்காகத்தான் அரசே தவிர, மக்களை நசுக்கி நாசமாக்கிக் கொல்வது அரசின் பணியல்ல. தூத்துக்குடி மக்களின் உணர்வை மதிக்கத் தவறி அடக்குமுறை என்ற தவறான முடிவை எடுத்த எடப்பாடி அரசுக்கும், இறக்கமற்ற முறையில் எதிர்கால உரிமைகளுக்காக போராடிய வெகுஜன மக்கள் மீது காட்டுமிராண்டித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்திய காவல்துறைக்கும் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சார்பாக எனது கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்வதோடு, கொந்தளிக்கும் மனநிலையில் உள்ள தூத்துக்குடி மக்களின் இப்பிரச்சினைக்கு ஒரே தீர்வு மக்களுக்கு பாதகத்தை ஏற்படுத்தும் ஸ்டெர்லைட் ஆலையை இந்த அரசு நிரந்தரமாக மூடுவதுதான்.
மேலும் இந்த கொடூரச் செயலுக்கு காரணமானவர்களை விசாரிக்க கமிசன் அமைக்க வேண்டும். அதன் மூலம் துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும் தூத்துக்குடியில் நடைபெற்ற சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து மாநிலம் முழுவதும் பல்வேறு அமைப்புகள் சார்பில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இந்த போராட்டங்களில் ஈடுபடுபவர்கள் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது என்ற செய்திகளும் வந்த வண்ணம் உள்ளது. நீதிக்காக போராடும் போராட்டக்காரர்களையும், தலைவர்களையும் உடனடியாக விடுவிப்பதோடு அவர்கள் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை திரும்பப்பெற வேண்டும் என தமிழக காவல்துறையை கேட்டுக் கொள்கிறேன்.
துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சார்பாக ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதோடு இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.50லட்சம் இழப்பீட்டுத்தொகை வழங்க வேண்டும் என அரசை வலியுறுத்துகிறேன். இப்படுகொலைக்கு பொறுப்பேற்று தமிழக அரசு உடனடியாகப் பதவி விலக வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன்.
இந்த பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில பொதுச்செயலாளர் நிஜாம் முகைதீன், மாநில செயலாளர்கள் அமீர் ஹம்ஸா, அச.உமர் பாரூக், மாநில செயற்குழு உறுப்பினர் ஏ.கே.கரீம், மத்திய சென்னை மாவட்ட தலைவர் முஹம்மது ஹுசைன், பொதுச்செயலாளர் ஜுனைத் அன்சாரி, செயலாளர் முஹம்மது இஸ்மாயில் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.