June 1, 2023

ஒரே படத்தில் சூப்பர் ஸ்டாரை உருவாக்கியவர் கலைஞர் ”- ரஜினிகாந்த் புகழாரம் !

ஒரே படத்தில் சூப்பர் ஸ்டாரை உருவாக்கியவர் கலைஞர் ”- ரஜினிகாந்த் புகழாரம் !

தமிழக முன்னாள் முதலமைச்சர்  டாக்டர் கலைஞர் மு.கருணாநிதியின்  மறைவிற்கு, திரையுலகத்தின் சார்பில் ,

அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி சென்னை காமராஜர் அரங்கில் நடைபெற்றது . 

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம், தென்னிந்திய நடிகர் சங்கம், தென்னிந்திய திரைப்பட தொழிலாளார்கள் சம்மேளனம் (FEFSI),

தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கம், தென்னிந்திய திரைப்பட வர்த்தக சங்கம்,  தமிழ்நாடு சின்னத்திரை கலைஞர்கள் கூட்டமைப்பின் ,

அனைத்து சங்கங்கள் ஆகியவை இணைந்து கலைஞர் மறைவிற்கு 2 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினார்கள்.பிறகு தமிழ்நாடு திரைப்பட நடிகர் சங்கத்தின் தலைவர் நாசர், தமிழ்நாடு திரைப்பட நடிகர் சங்கத்தின் துணைத் தலைவர் பொன்வண்ணன், சரண்யா பொன்வண்ணன்,

தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால், தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கப் பொருளாளர் கார்த்தி, 

 இயக்குநர் விக்ரமன்,  நடிகர் நடிகைகள் சுஹாசினி, ரேவதி, லிஸி, குஷ்பூ, ஷீலா, காஞ்சனா, அம்பிகா, பாக்யராஜ், பூர்ணிமா பாக்யராஜ், ஸ்ரீப்ரியா, விக்ரம் பிரபு,

ராதாரவி, குட்டிபத்மினி, ஜீவா, கணேஷ், ஆர்த்தி, மற்றும் அனைத்து சங்கங்களைச் சார்ந்தவர்களும், 

மறைந்த மாண்புமிகு கலைஞர் அவர்களின் புகைப்படத்திற்கு மெழுகுவர்த்தி ஏற்றி, மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.

நிகழ்வில் நாசர் பேசும்போது, ” ஒரு தனி மனிதரின் மரணத்தில்ஒரு தலைமுறை முடிந்திருக்கிறது, ஒரு சகாப்தம் முடிந்திருகிறது.தொண்ணுறு ஆண்டுகளிலேயே இருநூறு ஆண்டுகள் வாழ்ந்தது போல் செயல்கள் செய்திருக்கிறார். பாடம் நடத்தியிருக்கிறார் என்பதை விட,

பாடமாக இருந்திருக்கிறார் என்பதே பொருந்தும். சினிமா இந்தளவுக்கு தழைத்திருகிறது என்றால் அதற்கு கலைஞர் அவர்கள் தான் காரணம்.”

ரஜினிகாந்த் பேசும்போது, “கலைஞர் இல்லாத நாட்டை என்னால் நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை. தமிழ்நாடு பெரிய அடையாளத்தை இழந்திருக்கிறது.

தமிழ்நாட்டில் ஒரு பெரிய விழா என்றால் இனி யாரை அழைப்பார்கள் என்று தெரியவில்லை.

தமிழ்நாட்டிற்கு யார் வந்தாலும் பெரிய மனிதர் என்று இனி யாரை சந்திக்கப் போகிறார்கள் என்று தெரியவில்லை.

மேலும், நாற்பத்தைந்து வயதில் ஒரு கட்சிப் பொறுப்பை ஏற்று எத்தனை சோதனைகள், எத்தனை சூழ்ச்சிகள், எத்தனை துரோகங்கள்,எல்லாவற்றையும் தாண்டி கழகத்தை கட்டிக் காப்பாற்றி ஐம்பது ஆண்டு காலங்கள் தலைமை தாங்கிய பெருமை தலைவர் கலைஞர் அவர்களுக்கு உண்டு.

ஐம்பது ஆண்டுகளில் அரசியலில் தன்னந்தனியாக மேடையில் நின்று அரசியல் களத்தில் யாராவது வந்தால் என்னோடு நட்புகொள் அல்லது என்னை எதிர்கொள்;

அப்போதுதான் தமிழ்நாட்டில் அரசியல் செய்ய முடியும் என்று அரசியல் சதுரங்கத்தில்புகுந்து விளையாடியவர் கலைஞர்.

அவரால் அரசியலுக்கு வந்தவர்கள் பல லட்சம் தொண்டர்கள், முழுமையாக அரசியலுக்கு வந்தவர்கள் பல ஆயிரம் பேர்கள், அவரால் தலைவரானவர்கள் பல நூறு பேர்கள்.

யாரும் தவறாகக் கொள்ளக் கூடாது, அ.தி.மு.க. வின் ஆண்டு விழா புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் புகைப்படம் வைக்கப்படுகிறது.

பக்கத்திலேயே கலைஞர் புகைப்படமும் வைக்க வேண்டும். அ.தி.மு.க. உருவானதே கலைஞரால்தான். அவர் கட்சியில் இருந்து தூக்கப்பட்டார்.அதற்கு பின்னால் யார் யார் இருந்தார்கள், யார் யாருடைய சூழ்ச்சி இருந்தது என்பது வரலாறு தெரிந்தவர்கள் நன்கு அறிவார்கள்.

அத்தனை வஞ்சனைகளையும் தாண்டி தன் உடன்பிறப்புகளுக்காக வாழ்ந்தார். அவரது  அரசியல் பயணங்களைப் பற்றிப் பேச இன்னும் நிறைய நேரம் இருக்கிறது.

இன்னும் நிறைய சந்தர்ப்பங்கள் வரும். இலக்கியம் பார்த்தால் அதில் அவர் செய்யாத சாதனை இல்லை.

இருட்டில் இருந்த சரித்திர நாயகர்கள் சேரர், சோழர், பாண்டியர், பல்லவர்கள், சிற்றரசர்கள், போன்ற வெளிச்சம் படாத வீரர்களையெல்லாம் தன் சொல்லாலும்,

எழுத்தாலும், பாமரர் முதல் பண்டிதர் வரை கொண்டுபோய்ச் சேர்த்தவர் கலைஞர். சினிமா பயணம் பற்றி பேசவேண்டிய அவசியம் இல்லை.

இரண்டு பெரிய இமயங்களை உருவாக்கியது கலைஞர். நடிகராக இருந்த எம்.ஜி.ஆரை ஸ்டாராக்கியது மலைக்கள்ளன் படத்தில். சிவாஜி கணேசனை ஒரே படத்தில் சூப்பர் ஸ்டார் ஆக்கியதும் கலைஞர்தான். கலைஞர் மறைந்தார் என்ற செய்தி கேட்டவுடனே என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

அவருடன் நான் கழித்த நேரங்கள் என் நினைவில் வந்துகொண்டே இருந்தது. டிவியில் பார்த்தேன் மக்கள் கூட்டம், இருந்தாலும் பரவாயில்லை என்று சென்றேன்.

ஆனால் என்னால் பார்க்கமுடியாமல் திரும்பி வந்துவிட்டேன். மீண்டும் அதிகாலையிலேயே காலையில் சென்றேன்.

பல ஆயிரம் கூட்டங்கள் மட்டுமே இருந்ததைக் கண்டு அதிர்ச்சியுற்றேன். எங்கே அவரது உடன் பிறப்புகள், அவர்களுக்காக எவ்ளோ உழைத்திருக்கிறார்.

தமிழக மக்கள் மீது எனக்கு  கோபம் வந்தது. ஆனால் அதன் பிறகு அலை அலையாய் கட்டுகடங்காத கூட்டத்தைப் பார்த்து வியந்தேன்.

தமிழக மக்கள் என்றுமே நன்றி மறவாதவர்கள். பதவியில் இல்லை, வயது முதிர்வு, ஆனாலும் முப்படை வீரர்களும் தகுந்த மரியாதைக் கொடுத்தார்கள்.

இருப்பினும் ஒரு குறை எனக்கு, அண்டை மாநில முதலமைச்சர்கள், அத்தனை தலைவர்கள் இருக்கும்போது தமிழ்நாட்டு முதல்வர் இருக்க வேண்டாமா?

மந்திரி சபையே இருக்க வேண்டாமா? இதைப் பார்த்து மற்றவர்கள் என்ன நினைப்பார்கள். நீங்கள் என்ன எம்.ஜி.ஆரா? ஜெயலிதாவா?

இருப்பினும் அவருக்கு மெரினாவில் மேல்முறையிட்டுக்கு போகாமல் இடம் கொடுத்தது ஆறுதல். 

போயிருந்தால் நானே கலைஞருக்கு ஆதரவாக போராட்டத்தில் இறங்கி இருப்பேன் . மெரினாவில் அடக்கம் செய்ய அனுமதி கிடைத்தபோது, 

ஸ்டாலின் குழந்தைப் போல் கண்ணீர் வடித்தது பார்த்தும் என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. கவலை வேண்டாம்.

அந்த மாமனிதரின் ஆத்மா உங்களுக்கு வழிகாட்டும். அவருடன் நிறைய நாட்கள் செலவழித்திருக்கிறேன்,நிறைய  விஷயங்களை பகிர்ந்து கொண்டேன் என்பதில் மகிழ்ச்சி. ” என்றார். 

எஸ்.பி.முத்துராமன் பேசும்போது,”அதுபோல இந்த காலத்தில் கலைஞர் வசனம் என்று பெயர் போட்டால்தான் படம் பார்க்கவே வருவார்கள். கலை, பத்திரிக்கை, அரசியல், சினிமா மற்றும் எழுத்து போன்ற ஐந்து துறைகளிலும் ஜொலித்தவர் கலைஞர்” என்று கூறினார்.

விஷால் பேசும்போது,”மாமனிதருக்கு மரியாதை செய்ய வேண்டியது நமது கடமை. பொது வாழ்க்கை, சினிமா, அரசியல், போன்ற எதுவாக இருந்தாலும்,கலைஞர் அவர்களை மறக்க முடியாது. இந்தியாவிலேயே விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் கொண்டு வந்த முதல் தலைவர் கலைஞர் .

அவரைப் பற்றி பேச வாய்ப்பு கிடைத்தது பெரும் பாக்கியமாக கருதுகிறேன்” என்றார்.

ராதாரவி பேசும்போது,”கலைஞர் என்ற பட்டப் பெயர் கொடுத்ததே எனது தந்தை எம்.ஆர்.ராதா அவர்கள்தான் என்பதை பெருமையுடன் கூறிக்கொள்கிறேன்.எந்த இடத்திலும், எந்த நேரத்திலும் எல்லோரிடமும் பேசக்கூடிய ஒரு தலைவர். ஐம்பது ஆண்டு காலம் ஒரு கட்சிக்கு தலைவராக இருந்தவர்.

தமிழ் மொழி, கலாச்சாரம், தமிழர்கள் இவையாவும் இருக்கும் வரை கலைஞர் இறக்க மாட்டார்”என்றார்.

தென்னிந்திய நடிகர் சங்கப் பொருளாளர் கார்த்தி,துணை தலைவர் பொன்வண்ணன்,  செயற்குழு & நியமன செயற்குழு உறுப்பினர்களான பூச்சி முருகன்,

குட்டி பத்மினி,லலிதா குமாரி,சிவகாமி,சோனியா,சங்கீதா, A.L.உதயா, நந்தா, ரமணா, ஸ்ரீமன்,ஹேமச்சந்திரன்,பிரேம்,ஆயுப் கான், மருது பாண்டியன்,வாசுதேவன்,பசுபதி,அஜய் ரத்தினம்,M.A.பிரகாஷ் 

மற்றும் நடிக நடிகையர்களான ரேவதி,ப்ரபா,ஷீலா,சுகாசினி, ஜீவிதா ராஜசேகரன், ஸ்ரீபிரியா,குஷ்பு, அம்பிகா,லிஸ்ஸி,ஜோதி மீனா,காஞ்சனா,

பசி சத்யா,ஆர்த்தி கணேஷ்,சஞ்சிதா செட்டி,சஞ்சனா சிங், காயத்திரி, வசுந்தரா, மீனாள் ,சரண்யா பொன்வண்ணன்,

விஜயகுமார்,மயில் சாமி,விக்ரம் பிரபு, நட்டி நடராஜ், ஜீவா,பாபி சிம்ஹா,கிருஷ்ணா,உதயநிதி ஸ்டாலின்,நிழல்கள் ரவி,  J.P,ராமகிருஷ்ணா, ப்ளாக் பாண்டி,கிர்ஸ்,ஆனந்த ராஜ்,Dr.ராஜசேகர்,மாரிமுத்துசோபி மற்றும் 

தயாரிப்பாளர்கள் செயலாளர் கதேரேசன்  k.ராஜன், KR, சோழா  பொன்னுரங்கம், R.B.சௌத்திரி, K.T.குஞ்சுமோன், மயிலை குருபாதம்,ராஜேஸ்வரி, S.V.தங்கராஜ், எடிட்டர் மோகன், மிட்டாய் அன்பு ,K.பார்த்திபன், கலைப்புலி தாணு, K.பாக்யராஜ், திருமலை, பழனிவேல், சண்முகம், அசோக் 

மற்றும் இயக்குனர்கள் ரமேஷ் கண்ணா,P.வாசு,பேரரசு,சந்தன பாரதி,சித்ரா லக்ஷ்மன்,சின்னத்திரை கூடம்மைப்பு தலைவர் தளபதி, செயலாளர் சிவன் ஸ்ரீநிவாசன்,  பிலிம் சேம்பர் L.சுரேஷ், காட்ர கட்ர  பிரசாத்  மற்றும் பலர் கலந்துகொண்டனர்   .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *