September 25, 2023

சர்கார் படத்தில் இடம்பெற்ற சர்ச்சை காட்சிகள் நீக்கம்

சர்கார் படத்தில் இடம்பெற்ற சர்ச்சை காட்சிகள் நீக்கம்

நடிகர் விஜய் நடித்த “சர்கார்” திரைப்படம் தீபாவளி தினத்தன்று தமிழ்நாடு முழுவதும் வெளியிடப்பட்டது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வெளிவந்துள்ள இந்த படம் முதல் நாளே வசூலில் சாதனை படைத்தது.

“சர்கார்” திரைப்படத்தில் அ.தி.மு.க.வை விமர்சனம் செய்யும் வகையில் வசனங்களும், காட்சிகளும் அமைந்துள்ளதாக சர்ச்சை எழுந்தது. ஜெயலலிதாவின் இயற்பெயரான “கோமளவல்லி” எனும் பெயர் வரலட்சுமி நடித்துள்ள வில்லி வேடத்துக்கு வைக்கப்பட்டிருப்பதால் அ.தி.மு.க.வினர் கோபம் அடைந்துள்ளனர்.

மேலும் தமிழக அரசின் இலவச திட்டங்களை குறை கூறுவது போன்றும், மிக்சி, கிரைண்டர், மின் விசிறி உள்ளிட்ட இலவச பொருட்களை அள்ளிப் போட்டு தீ வைப்பது போன்ற காட்சிகளும் இடம் பெற்றதால் அ.தி.மு.க. அமைச்சர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் கடும் அதிருப்தி அடைந்தனர். சர்ச்சைக்குரிய வசனங்கள், காட்சிகளை நீக்க வலியுறுத்தி, நேற்று மாலை தமிழகம் முழுவதும் சர்கார் படத்தை எதிர்த்து அ.தி.மு.க.வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திரை அரங்குகளின் வளாகங்களில் வைக்கப்பட்டிருந்த பேனர்கள் கிழித்து எறியப்பட்டன. நடிகர் விஜய்யின் கட்-அவுட்கள் உடைக்கப்பட்டன. இதையடுத்து சர்கார் படம் திரையிடப்பட்டிருந்த திரை அரங்குகளில் பாது காப்புக்காக போலீசார் நிறுத்தப்பட்டனர்.
இதைத் தொடர்ந்து சர்கார் படத்தில் இடம் பெற்றுள்ள கோமளவல்லி என்று அழைக்கப்படும் காட்சியையும், தமிழக அரசின் இலவச திட்டங்களை குறை கூறி மிக்சி, கிரைண்டர் தீ வைக்கப்படும் காட்சியையும் மறு தணிக்கையில் தணிக்கை குழுவினர் நீக்கியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *