
சர்வதேச யோகா தினம் மாண்புமிகு மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் சி. விஜயபாஸ்கர் அவர்கள் தலைமையில் அனுசரிக்கப்பட்டது
இன்று (21.06.2018) சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை வளாகத்தில் சர்வதேச யோகா தினம் மாண்புமிகு மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் சி. விஜயபாஸ்கர் அவர்கள் தலைமையில் அனுசரிக்கப்பட்டது. இதில் 300க்கும் மேற்பட்ட அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் மாண்புமிகு அமைச்சர் அவர்கள் பேசியதாவது ஐக்கிய நாடுகள் சபையின் அறிவுறுத்தலின்படி உலகம் முழுவதும் ஆண்டுதோறும் ஜீன் 21-ம் தேதி சர்வதேச யோகா தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. இன்று நான்காவது சர்வதேச யோகா தினமாக அனுசரிக்கப்படுகிறது. ஜுன் 21 வருடத்தின் நீண்ட பகல் கொண்ட தினம் என்பதாலும், யோகா நம் வாழ்வின் ஆயுளை நீட்டிப்பதனாலும் இந்நாளில் யோகா தினம் கொண்டாடப்படுகிறது. இந்த வருடத்திற்கான கருப்பொருள் “மன அமைதிக்கு யோகாசனம்” (Yoga for Peace). யோகா என்பது உடலையும் மனதையும் வலுவடையச் செய்யும் ஓர் எளிய பயிற்சியாகும். யோகா, சாதி, மதம், இனம், மொழி, நாடு போன்ற பல வேறுபாடுகளைக் கடந்து அனைவருக்கும் பொதுவானது. யோகா என்பது உடலையும், மனதையும் சமநிலையில் வைத்திருக்க உதவும் அறிவியல் பூர்வமான கலையாகும். இது ஆசனங்கள் மட்டும் கொண்டதல்ல. இயமம், நியமம், ஆசனம், பிராணாயாமம், பிரத்தியாகாரம், தாரணை, தியானம், மற்றும் சமாதி ஆகிய எட்டு அங்கங்களை கொண்டது. இரத்த அழுத்தம், நீரிழிவு, சுவாசக் கோளாறு, உடல்பருமன், தூக்கமின்மை போன்ற வாழ்வியல் நோய்களுக்கு ((Life Style Diseases) தீர்வு காண்பதற்கு யோகா பெரிதும் உதவுகிறது. மன அழுத்தம், மனச்சோர்வு, கவலை, பதற்றம் போன்றவற்றை குறைப்பதற்கு பெரிதும் உதவுகிறது. சூழ்நிலைகளை திறம்பட கையாள்வதற்கும், மன ஆரோக்கியத்திற்கும் அருமருந்து யோகாசனம்.நோயினால் பாதிக்கப்பட்டவரின் உடல் அமைப்பு, யோகா செய்யக்கூடிய திறன் போன்றவற்றை அறிந்து தனிப்பட்ட முறையில் தரும் சிகிச்சை முறையாகும். இச்சிகிச்சை முறைகளை முறையாக தேர்ச்சி பெற்ற யோகா மற்றும் இயற்கை மருத்துவரின் உதவியுடன் மேற்கொள்ள வேண்டும். யோகாவின் அவசியத்தையும், நன்மைகளையும் உலக மக்கள் அனைவரும் தெரிந்து கொள்வதும், யோகாவின் முழு பயன்களையும் பெறவேண்டும் என்பதே இந்த சர்வதேச யோகா தினத்தை அனுசரிப்பதற்கான முக்கிய நோக்கமாக உள்ளது.
தமிழகத்தில் 31 அரசு வட்ட மருத்துவமனையிலும் சென்னையில் 4 அரசு மருத்தவமனைகளிலும் யோகா மற்றும் இயற்கை மருத்துவ வாழ்வியல் மையம் (Life Style Clinic) தொடங்கப்பட்டு யோகா மற்றும் இயற்கை மருத்துவ சிகிச்சை முறைகள் வழங்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் 165 யோகா மற்றும் இயற்கை மருத்துவ நிலையங்கள் உள்ளன. இந்தியாவிலேயே அனைத்து இந்திய முறை மருத்துவம் மற்றும் ஓமியோபதிக்கு அரசு மருத்துவக் கல்லூரிகள் நிறுவப்பட்டுள்ளது என்ற சிறப்பு பெருமை தமிழ்நாட்டை மட்டுமே சாரும்.சென்னை அண்ணாநகரில் அமைந்துள்ள மருத்துவமனையில் இயற்கை வழியில் உடற்பருமனை குறைக்க சிறப்பு சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுகிறது. இச்சிகிச்சை முறையில் எவ்வித பக்க விளைவுகள் இல்லாத சிகிச்சைகளான நீராவி குளியல், வாழை இலை குளியல், மண் குளியல், இயற்கை உணவு, உண்ணா நோன்பு, இயற்கை மூலிகை சிகிச்சை மற்றும் யோகா சிகிச்சையும் எவ்வித கட்டணமுமில்லாமல் அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், அரசு மருத்துவமனைகளில் யோகா மற்றும் இயற்கை மருத்துவப் பிரிவில் 73 மருத்துவர்கள் விரைவில் நியமிக்கப்படவுள்ளனர். பொதுமக்கள் இவ்வசதிகளை முழுமையாக பயன்படுத்தி இயற்கை முறையில் தங்களை வாழ்க்கை முறை நோய்களில் இருந்து தற்காத்துக் கொள்ள வேண்டுகோள் விடுத்தார்.
இந்நிகழ்ச்சியில் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை முதன்மைச் செயலாளர் மரு. ஜெ. ராதாகிருஷ்ணன், இ.ஆ.ப., தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்க திட்ட இயக்குநர் மரு. கி. செந்தில்ராஜ், இ.ஆ.ப., தமிழ்நாடு சுகாதார திட்ட இயக்குநர் திருமதி பி.உமாமகேஸ்வரி, இ.ஆ.ப., மருத்துவக் கல்வி இயக்குநர் மரு. எட்வின் ஜோ மற்றும் உயர் அலுவலர்கள்உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.