நடிகர் தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘வட சென்னை’.
இந்தப் படத்தில் நடிகர் தனுஷ் நாயகனாக நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ளார். மேலும் இயக்குநர் அமீர், ஆண்ட்ரியா, கிஷோர், சமுத்திரக்கனி, பவன், டேனியல் மற்றும் பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.
வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்தை இயக்குநர் வெற்றி மாறன் எழுதி, இயக்கியிருக்கிறார்.
இந்தப் படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நேற்று காலையில் பிரசாத் லேப் தியேட்டரில் நடைபெற்றது.
விழாவின் துவக்கத்தில் நடிகரும், இயக்குநருமான அமீர் பேசும்போது, “வட சென்னை படம் பார்த்தேன். படம் மிகவும் அருமையாக வந்துள்ளது. தனுஷின் நடிப்பு பிரமிக்க வைக்கிறது. வெற்றி மாறன் ஒரு தரமான படத்தினை இயக்கியுள்ளார். ஆண்ட்ரியாவை ‘தரமணி’ போன்ற படங்களில் வித்யாசமான கதாபாத்திரத்தில் நாம் பார்த்திருக்கிறோம் .இந்த படத்தில் அதையும் தாண்டி ஒரு வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படத்தில் நடித்த அனைவருமே மிகவும் அருமையாக நடித்துள்ளனர்…” என்றார்.
நடிகர் டேனியல் பாலாஜி பேசும்போது, “பொல்லாதவன்’ படத்திற்கு பிறகு மீண்டும் தனுஷுடன் இந்தப் படத்தில் நடித்துள்ளேன். வாய்ப்பளித்த வெற்றி மாறன் அவர்களுக்கு நன்றி. இந்தப் படத்தில் ஒரு வித்தியாசமான கதாபாத்திரத்தை எனக்குக் கொடுத்திருக்கிறார் இயக்குநர் வெற்றி மாறன். இந்தப் படம் அனைவருக்கும் பிடிக்கும் வகையில் இருக்கும்…” என்றார்.
இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் பேசும்போது, “இந்தப் படத்திற்கு இசையமைக்க வாய்ப்பு தந்த இயக்குநர் வெற்றி மாறன் அவர்களுக்கு எனது முதல் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
படத்தில் அனைவருமே மிகச் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். இந்த மாதிரி படங்களை வெற்றி மாறனால் மட்டுமே இயக்க முடியும். படத்தில் தனுஷ் பாடிய பாடல் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தனுஷ் கடின உழைப்பாளி. திறமையான நடிகர். படத்திற்கு பின்னணி இசையமைக்க நான் நீண்ட நாள் எடுத்துக் கொண்டேன். படத்தின் மேக்கிங் என்னை அந்த அளவுக்கு பாதித்தது..” என்றார்.
படத்தின் நாயகி நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் பேசும்போது, “இந்தப் படத்தில் வாய்ப்பளித்த இயக்குநர் வெற்றி மாறனுக்கு நன்றி. இந்த மேடையை பார்க்கும்போது ‘காக்கா முட்டை’ படத்தில் நடந்த விழா ஒன்று ஞாபகம் வருகிறது. இந்த படத்தில் ஒரு இனிமையான கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். தனுஷ் அவர்களுடன் முதல்முதலாக ஜோடியாக நடித்ததில் எனக்கு மிக்க மகிழ்ச்சி. படத்தின் முதல் சீனில் என்னைப் பார்த்தவுடனேயே லவ் பண்ணுவார் தனுஷ். படத்தில் அனைவருமே நன்றாக. நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசை அருமையாக வந்துள்ளது. படத்தில் நடித்துள்ள அனைவருக்குமே எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்…” என்றார்.
படத்தின் நாயகன் நடிகர் தனுஷ் பேசும்போது, “வெற்றி மாறனுடன் திரும்பவும் இந்த படத்தில் சேர்ந்து நடிப்பதை நினைக்கும்போது மிகவும் சந்தோஷமாக உள்ளது.
வரும் 17-ம் தேதி இந்த ‘வட சென்னை’ திரைப்படம் படம் ரிலீஸ் ஆகிறது. உங்கள் அனைவருக்கும் மிகவும் பிடிக்கும் வகையில் இருக்கும்.
இந்தப் படத்தின் கதையை 2013-லேயே வெற்றி மாறன் என்னிடத்தில் சொன்னார். நானும் சரியென்றேன். பின்பு நான் வேற, வேற பிராஜெக்ட்ல இருந்ததால உடனே ஆரம்பிக்க முடியலை. அப்போ ‘நான் சிம்புவை வைச்சு பண்ணப் போறேன்’னு வெற்றி மாறன் சொன்னார். ‘ஆல் தி பெஸ்ட்’டுன்னு சொல்லியனுப்புனேன்.
அப்புறம் கொஞ்ச நாள் கழிச்சு அவரே போன் செஞ்சு ‘இந்தப் படத்துல ஒரு வில்லன் கேரக்டர் இருக்கு. அதை நீங்க செய்றீங்களா?’ன்னு கேட்டார். சிம்பு படத்துல வில்லனா நானான்னு யோசிச்சேன். ‘அந்த அளவுக்கெல்லாம் பரந்த மனப்பான்மை எனக்கில்ல ஸார். வேண்டாம்..’ என்று சொல்லிவிட்டேன். இப்படி இந்தக் கதை அங்கே, இங்கே என்று சுத்தி கடைசியா திரும்பவும் என்கிட்டயே வந்து சேர்ந்திருச்சு..!
படத்தில் அமீர் சார் வேற லெவல நடிச்சிருக்கார். அவருக்கு என்னுடைய வாழ்த்துக்கள். மேலும் உடன் நடித்த ஆண்ட்ரியா, ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் அனைவருமே சூப்பரா நடிச்சிருக்காங்க.
சந்தோஷ் நாராயணன் பெரிய இசை படத்திற்கு பிளஸ். பாடல் அனைத்தும் அருமையாக உள்ளது .வேல்ராஜ் ராஜ் சார் அருமையாக ஒளிப்பதிவு செய்துள்ளார். இரவு பகல் பாராமல் படத்தில் உழைத்த அனைவருக்கும் நன்றி.
இந்தப் படம் மொத்தம் 3 பாகங்களாக வரும். இப்போதே 2-ம் பாகத்தின் 30 சதவிகிதக் காட்சிகள் படமாக்கப்பட்டுவிட்டன. அடுத்தப் பாகத்திற்கான படப்பிடிப்பு விரைவில் தொடங்கவிருக்கிறது..” என்றார்.
இயக்குநர் வெற்றி மாறன் பேசும்போது, “படத்திற்கு ஏ சர்ட்டிபிகேட் கிடைத்துள்ளது. எந்த ஒரு காட்சிகளும் நீக்கப்படவில்லை. முதல் பாகத்தின் வெளியீட்டைத் தொடர்ந்து படத்தின் இரண்டாம் மற்றும் அடுத்தடுத்த படங்கள் வெளிவரும்.
அந்தந்த காலகட்ட காட்சிகளுக்கு ஏற்ப தனுஷ் அவர்கள் அருமையாக நடித்துள்ளார். அவரின் பேச்சு.. நடிப்பு அனைத்திலும் அசத்தியுள்ளார். கலை இயக்குநர் ஜாக்கிங் ஜெயில் செட் மற்றும் வட சென்னை காட்சிகளை மிகப் பிரமாதமாக செய்துள்ளார். அவருக்கு மிகப் பெரிய நன்றி.
படத்தில் நடித்த ஆண்ட்ரியா மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ், டேனியல் பாலாஜி பவன், சமுத்திரகனி கிஷோர் அற்புதமாக நடித்துள்ளார்கள்,. மேலும் அமீரும், சமுத்திரகனியும் ஒரு இயக்குநர்களாகவும் எனக்கு பெரிய உறுதுணையாக இருந்தார்கள். படத்தில் நடித்த அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன்…” என்றார்.