இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக இனக்கலவரம்!
சென்னையில் இலங்கை தூதரத்தை முற்றுகையிட்டு எஸ்.டி.பி.ஐ. போராட்டம்!
இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக சிங்கள பெளத்த பேரினவாதிகள் நடத்திவரும் கலவர தாக்குதலை கண்டித்தும், சிறுபான்மை மக்களுக்கு எதிராக தொடரும் கலவரங்களை இலங்கை அரசு தடுத்து நிறுத்த வலியுறுத்தியும், இன்று (மார்ச்.10) சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இலங்கை தூதரகத்தை முற்றுகையிட்டு எஸ்.டி.பி.ஐ. கட்சி போராட்டம் நடத்தியது.
எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மத்திய சென்னை மாவட்ட தலைவர் ஜூனைத் அன்சாரி தலைமையில் நடைபெற்ற இந்த முற்றுகை போராட்டத்தில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில செயலாளர்கள் அமீர் ஹம்சா, ரத்தினம், வர்த்தகர் அணி மாநில தலைவர் முகைதீன், மாநில செயற்குழு உறுப்பினர்கள் முகமது பாரூக், ஏ.கே.கரீம் மற்றும் சென்னை மண்டல நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.
முற்றுகை போராட்டத்தில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம். தெகலான் பாகவி, கட்சியின் மாநில செயலாளர் அச.உமர் பாரூக் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம். தெகலான் பாகவி பேசுகையில்; இலங்கையில் அம்பாறை, கண்டி, திகண மற்றும் தெல்தெனிய பகுதிகளில் முஸ்லிம்களுக்கு எதிராக பெளத்த பேரினவாதிகள் வன்முறைகளை கட்டவிழ்த்துவிட்டுள்ளனர். முஸ்லிம்களின் வழிபாட்டு தலங்கள், வர்த்தக நிறுவனங்கள் மற்றும் சொத்துக்கள் தீக்கிரையாக்கப்பட்டு வருகின்றன.
கால் நூற்றாண்டு காலமாக ஈழத் தமிழர்களுக்கு எதிராக இலங்கை அரசாங்கம் நிகழ்த்திய இன அழிப்புக்கு பின்னால் தற்போது சிங்கள பேரினவாத அமைப்புகள் மூலம் அங்கு வாழும் சிறுபான்மை முஸ்லிம்கள் மீது கலவரத் தாக்குதல்கள் நடைபெற்று வருகின்றன. முன்னர் ஈழத் தமிழர்களுக்கு எதிராகக் கையாண்ட இனவெறித் தாக்குதலை, தற்போது முஸ்லிம் மக்களுக்கு எதிராகப் பிரயோகிக்கத் தொடங்கியிருக்கிறார்கள் சிங்கள பேரினவாத பெளத்த அமைப்புகள்.
குடிபோதையில் இரு நபர்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதல் மற்றும் முஸ்லிம்களுக்கு எதிராக போலியான பிரச்சாரங்கள் மூலம் பொதுபல சேனா உள்ளிட்ட சிங்கள பேரினவாதிகள் திட்டமிட்டு முஸ்லிம்கள் மீது கலவரத் தாக்குதலை நடத்தி வருகின்றனர். இதன் பின்னணியில் முன்னாள் அதிபர் ராஜபக்ஷேவின் கொடுங்கரங்கள் இருப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
காவல்துறை, ராணுவத்தின் முன்னிலையே முஸ்லிம்களின் சொத்துக்கள் தீக்கிரையாக்கப்படுகின்றன. இந்த சம்பவத்தில் முஸ்லிம் இளைஞர் ஒருவர் பெட்ரோல் குண்டு வீசி கொல்லப்பட்டுள்ளார். பாதுக்காப்புக்கு நிறுத்தப்பட்ட ராணுவத்தினரின் முன்னிலையிலேயே பெளத்த பேரினவாத புத்த பிக்குகள் கலவரத்தை தூண்டி வருகின்றனர்.
இந்த சூழலில் இலங்கையில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. எனினும் முஸ்லிம்களுக்கு எதிராக அங்கு வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து நிகழ்த்தப்பட்டு வருகின்றன.
கடந்த 2014 ஆம் ஆண்டு சிங்கள பேரினவாத பெளத்த அமைப்பான பொதுபல சேனாவினர் முஸ்லிம்கள் அதிகமாக வசிக்கும் பகுதிகளுக்குள் ஊர்வலமாக வந்து தாக்குதலை ஆரம்பித்ததும், அரசு ஊரடங்குச் சட்டம் விதித்து முஸ்லிம் மக்களை வீடுகளுக்குள் முடங்கச் செய்தது. ஆண்கள் பள்ளிவாசலிலும், பெண்களும் குழந்தைகளும் வீடுகளுக்குள் சிறைப்படுத்தப்பட்ட பின்னர், ஓர் இடம்கூட விடாமல் தேடிப் பிடித்துத் தாக்கினார்கள் பொதுபல சேனா அமைப்பினர். அந்தத் தாக்குதல்கள் காவல்துறை முன்னிலையிலேயே நடைபெற்றது. நான்கு பேர் படுகொலை செய்யப்பட்டனர். தற்போது அது போன்றதொரு சூழல் மீண்டும் இலங்கையில் ஏற்பட்டுள்ளது.
ஈழத்தமிழர்கள் மீதான இன அழிப்பிற்கு பிறகு, சிறுபான்மை முஸ்லிம்கள் மீது திட்டமிட்டு சிங்கள பேரினவாதிகள் மூலம் வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்படுள்ளன.
இலங்கையில் சிறுபான்மை மக்களுக்கு எதிராக தொடரும் இத்தகைய கலவரங்களை இலங்கை அரசு தடுத்து நிறுத்த வேண்டும். இலங்கையில் தொடர்ந்து தமிழர்கள் மற்றும் முஸ்லிம்களுக்கு எதிராக நடக்கும் இனவெறி வன்முறைகளை கட்டுப்படுத்த தவறிய இலங்கை அரசிற்கு ஐ.நாவும், இந்தியா மற்றும் சர்வதேச நாடுகளும் அழுத்தம் தந்து இனவெறி வன்முறைகளை தடுத்து நிறுத்த முன்வர வேண்டும். என தெரிவித்தார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பெண்கள், குழந்தைகள் உள்பட 500க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.