September 30, 2023

சென்னை எழும்பூர் அரசு கண் மருத்துவமனையில் கண்புரைநோய் மற்றும் ஒளிவிலகல் அறுவை சிகிச்சை

சென்னை எழும்பூர் அரசு கண் மருத்துவமனையில் கண்புரைநோய் மற்றும் ஒளிவிலகல் அறுவை சிகிச்சை!

 

நேரடியாக இணையதளம் மூலமாக சென்னையில் இருந்து மாஸ்கோவிற்கு ஒளிபரப்பு!
அமைச்சர் டாக்டர் சி. விஜயபாஸ்கர் அவர்கள் துவக்கி வைத்தார்!!

இன்று (11.10.2018) சென்னை எழும்பூர் அரசு கண் மருத்துவமனையின் 200வது ஆண்டையொட்டி  இந்திய ரஷ்யா அறிவுத்திறன் பரிமாற்றுத் திட்டத்தின் கீழ் (Indo –Russian Exchange of Knowledge Programme – Satellite Symposium) கண்புரைநோய் மற்றும் ஒளிவிலகல் அறுவை சிகிச்சை (Cataract & Refractive Live Surgery Webcast) நேரடியாக இணையதளம் மூலமாக சென்னையில் இருந்து ரஷியாவின் மாஸ்கோவிற்கு ஒளிபரப்பப்படுவதை மாண்புமிகு மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் சி. விஜயபாஸ்கர் அவர்கள் துவக்கி வைத்தார்.

பின்னர் பேசிய மாண்புமிகு அமைச்சர் அவர்கள், சென்னை எழும்பூர் அரசு கண் மருத்துவமனை 200 ஆண்டுகளை கடந்து தொடர்ந்து சிறப்பான சேவையாற்றி சென்னை மாநகருக்கு பெருமை சேர்க்கும் மருத்துவமனையாக உள்ளது. மண்டல கண் மருத்துவ இயல் நிலையத்தில் அமைந்துள்ள அருங்காட்சியகம் மிகவும் தொன்மையானது மற்றும் உலகளவில் புகழ்பெற்றது. மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்களால் 2015ஆம் ஆண்டு College of Optometry  துவக்கி வைக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கண் பார்வை இழப்புக்கு முக்கியக்காரணம், சரிசெய்யப்படக்கூடிய கண் புரை (Cataract) நோய். 1985 முதல் இதுவரை 2.60 இலட்சம் கண்புரை அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

பதினொன்றாவது அனைத்து ரஷ்ய கண் மருத்துவர்கள் மன்றம், மாஸ்கோ ஹெல்ம்ஹால்ஸ் கண் மருத்துவமனை ஆராய்ச்சி நிறுவனம் மூலமாக இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அரசு கண் மருத்துவமனையிலும் புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சிறுதுளை கண்புரை அறுவை சிகிச்சை (Phacoemulsification) மூலம் எல்லாத் தூரத்திற்கும் ஏற்ற extended depth of focus IOL  பொருத்தப்படுகிறது. இதன் மூலம் அறுவைச் சிகிச்சைக்குப் பிறகு நோயாளிகள் கண்ணாடி இல்லாமல் கிட்டப்பார்வை, இடை நிலைப் பார்வை, மற்றும் தூரப்பார்வை குறைபாடுகள் நிவர்த்தி செய்யப்படும்.

ஒளிவிலகல் பிழை (Refractive error) இரண்டாவது முக்கிய பார்வைக் குறைபாடு காரணமாக  உள்ளது. இதனை சரி செய்வதற்கு பின்வரும் முறைகள் உள்ளன- கண்ணாடி அணிதல் (spectacles), கான்டாக்ட் லென்ஸ் (Contact lens), LASIK அறுவை சிகிச்சை மற்றும் உள்விழி கண்ணாடி வில்லை (phakic IOL). இவற்றுள் உள்விழி கண்ணாடி வில்லை (Phakic IOL) தற்போது அதிநவீன சிகிச்சையாக உள்ளது.  இந்த அறுவைச் சகிச்சைக்குப் பின் கிட்டப்பார்வை குறைபாடு (High Myopia) உள்ளவர்கள் தடிமனான கண்ணாடி அணியாமல் தெளிவாகப் பார்க்க இயலும். இன்று இந்த ஒளிவிலகல் அறுவைச் சிகிச்சை நேரடியாக ஒளிபரப்பப்பட்டுள்ளது.

நுண்ணோக்கிக் கருவி (Microscope), phacoemulsification கருவி, உள் விழி கண்ணாடி வில்லை ((phakic IOL) போன்ற கருவிகள் நமது இந்தியாவிலேயே  உருவாக்கப் படுகின்றன. மேலும் இந்த அறுவைச்சிகிச்சையினை  www.appasamy.com என்ற இணைய தளத்தில் காணலாம்.

இவ்விரு அறுவைச்சிகிச்சைகளும் அரசு கண்மருத்துவமனை இயக்குநர் மரு எம்.ஆனந்தபாபு, அவர்களால் செய்யப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் ரஷிய கூட்டமைப்பின் தூதர் திரு. அலேக் என். அவ்தேவ், மருத்துவக் கல்வி இயக்குநர் மரு. எட்வின் ஜோ, அரசு சென்னை மருத்துவக் கல்லூரி முதல்வர் மரு. ஜெயந்தி, எழும்பூர் அரசு கண் மருத்துவமனை இயக்குநர் மரு எம்.ஆனந்தபாபு மற்றும் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *