September 25, 2023

டீன் ஏஜில் கேமராமேன் ஆன கவின் ராஜ்!

பதின்பருவத்திலேயே ஒளிப்பதிவாளராகிவிட்ட  கவின் ராஜ்!*
 
சமீபத்தில் திரைக்கு வந்திருக்கும்  ‘இஸ்பேட் ராஜாவும் இதயராணியும்’ இப்படத்தின் ஒளிப்பதிவு  ஊடகங்களால் அடையாளம் கண்டு பாராட்டப்பட்டது.
 
படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார் கவின் ராஜ். இவர் டீன் ஏஜிலேயே ஒளிப்பதிவாளர் ஆகியுள்ளவர். இவர் தனது 19 வயதிலேயே ‘தீதும் நன்றும்’ என்கிற முதல் படத்திற்கு ஒளிப்பதிவு செய்தவர் .இவரது இரண்டாவது படம் தான் ‘இஸ்பேட் ராஜா’. இப்போது வயது 22
 
இவரது அனுபவம் விசித்திரமானது. கேமராவைத் தொட்டுக் கூட  பார்க்காமல்  இருந்த இவருக்கு முதல் பட வாய்ப்பு வந்தது. தனது ஆர்வத்தாலும்  திறமையாலும் வாய்ப்பு அளித்தவர்களின்  நம்பிக்கையைக் காப்பாற்றித் தன் தகுதியை நிரூபித்துக் கொண்டுள்ளார்.
 
இனி அவருடன் பேசலாம்!
 
“நான் பிளஸ் டூ முடித்தவுடன் மேற்கொண்டு என்ன படிப்பது ?எந்தத் துறையில் ஈடுபடுவது ?என்று எந்த தெளிவும் இல்லாமல் இருந்தேன். ஆனால் ஓவியம் கலை சினிமா என்று ஆர்வமாக இருந்தேன் ஆனால்  இதில் எதில்  முழு ஈடுபாடு காட்டுவது என்று தெரியவில்லை .நான் சினிமா நிறைய பார்ப்பேன்.
 
பலவகையான படங்களையும்  பார்ப்பேன் iஇந்த ஆர்வத்தைக் கவனித்த என் அப்பா உனக்கு சினிமாவில் ஈடுபட விருப்பம் இருக்கிறதா என்றார் .சினிமா ஆர்வம்  என்பதை அவரிடம் கூறினேன். அவர் கேந்திரீய வித்யாலயா பள்ளியில்  ஓவிய ஆசிரியர் . கலை ஈடுபாடு இருப்பதால் அப்பா  என் ஆர்வத்தை கண்டு கொண்டார்.
 
அப்படி என்றால் பிலிம் இன்ஸ்டிடியூட்டில் சேரலாம் என்று சொன்னார் .டைரக்ஷன் துறையில் சேர்ந்தால் சினிமா பற்றி ஆழமான அறிவு கிடைக்கும் என்று கருதினோம். ஆனால் ஒளிப்பதிவு கூடக் கிடைக்கவில்லை.கடைசியில்  கிடைத்த எடிட்டிங்கில்  சேர்ந்தேன்.
 
எடிட்டிங் சம்பந்தப்பட்ட அறிவும் சினிமா உருவாக்கத்தில் தேவை என்பது புரிந்தது. இன்ஸ்டிடியூட்டில்  படித்துக்கொண்டே நிறைய புத்தகங்கள் படித்தேன். இணையதளத்தில் தேடிப் பார்த்தபோது ஒளிப்பதிவு என்னை மிகவும் ஈர்த்து விட்டது .அதன்பிறகு ஒளிப்பதிவு சார்ந்த தேடலில் இறங்கினேன் .ஒளிப்பதிவாளர் ஆவது என்பதை முடிவு செய்து கொண்டேன் .
 
நாளைய இயக்குநர் சீசன் 5 -ல்  குறும்படம் உருவாக்கத்தில்  இணைந்து பணியாற்றினோம். எங்கள் குழுவுக்கு வெற்றி கிடைத்தது. அந்த நட்பு வளர்ந்துதான் முதல் படம்’ தீதும் நன்றும்’ என்ற படத்தில் ஒளிப்பதிவு செய்தேன் .இந்த படம் இன்னும் வெளிவரவில்லை .
 
சொன்னால் நம்ப மாட்டீர்கள் தீதும் நன்றும் திரைப்படத்தில் நான் ஒளிப்பதிவு செய்த போது அதற்கு முன் சினிமா கேமராவை நான் தொட்டதே இல்லை .ஆனால் கேமரா சம்பந்தமான அனைத்து தொழில்நுட்ப விஷயங்களும் எனக்குத் தெரியும். இந்த பலவீனத்தை படக்குழுவிடம் சொல்லிவிட்டுத்தான் வேலையில் இறங்கினேன்.
அந்த வாய்ப்பை பயன்படுத்தினேன். அவர்களும் என் ஆர்வத்தை மதித்து என் மீது நம்பிக்கை வைத்து கொடுத்தார்கள் .வெற்றிகரமாகச் செய்து முடித்தேன் .
 
அடுத்த படம்தான்’ இஸ்பேட் ராஜா’ இயக்குநர் ரஞ்சித் எனக்கு அவர் வாய்ப்பு கொடுத்த போது சில நாட்கள் அவகாசம் கேட்டேன் .அவரிடம் கதையும் கேட்டேன் .அதில் நான் என் சார்ந்த என் தரப்பு பங்களிப்பு என்ன செய்ய முடியும் என்பதற்காக சில நாள் அவகாசம் கேட்டேன். சில தினங்களுக்குப் பிறகு என் தரப்பு எண்ணங்களைக் கூறினேன். அவர்களுக்கு நம்பிக்கை வந்து விட்டது .அதன்படி புறப்பட்டு விட்டோம்.
 
இந்த படத்தை பொறுத்தவரை இவன் சின்ன பையன்  இவன் புதியவன்  என்று யாரும் நினைக்கவில்லை. ஆரம்பத்தில் ஒரு மாதிரியாக  இருந்தது .போகப் போகப்  என்னை தங்களில் ஒருவராக ஏற்றுக் கொண்டார்கள் .மரியாதை கொடுத்தார்கள். அன்பு காட்டினார்கள்.படத்தில் நடித்த நடிகர் ஹரீஷ் கல்யாண் மற்றும் நடிகை . கலைஞர்கள், படக்குழுவினர் அனைவருமே ஒரே குழுவாக இயங்கினோம்.
 
படத்தின் க்ளைமாக்ஸ் காட்சி மலை  உச்சியில் உயரமான இடத்தில் எடுக்க வேண்டியிருந்தது. பலருக்கும் உயரம் சார்ந்த பிரச்சினையால் உடல் பிரச்சினை ஏற்பட்டது. எங்கள் உதவியாளர் ஒருவருக்கு இதயப் பிரச்சினை ஏற்பட்டது.
இருந்தாலும் வெற்றிகரமாக எடுத்து முடித்தோம்.” என்கிறவர் படத்தில் தான் சிரமப்பட்டுப் பணியாற்றியதைப் பற்றி இப்படிக் கூறுகிறார்.
 
“நான் இந்தப் படத்தை ஒரு  வாய்ப்பாகப் பார்க்கவில்லை. வாழ்க்கையாகத்தான் பார்த்தேன் கேமராவை ட்ரை பேடில் போட்டு ஸ்டாண்டில் பொருத்தி காட்சிகளை எடுப்பதைப் பெரும்பாலும் தவிர்த்தேன் .கையில் தூக்கிக் கொண்டு தோளில் சுமந்து கொண்டு, நகர்ந்து கொண்டு ,அசைந்து கொண்டு, ஊர்ந்து கொண்டு இருக்கும் படி தான் காட்சிகள் எடுத்தோம்.. அதுதான் பார்ப்பவர்களின் கவனத்தை ஈர்க்கும் என நினைத்தோம். இதை படம் முழுக்க பெரும்பாலான காட்சிகளில் செய்திருக்கிறேன். படப்பிடிப்பு  முழுதும் handheld கேமராவாகவே எடுத்தேன். 
 
 ஒரு காட்சி எடுக்கும் போதும் நம்மால் எப்படி அதை மேம்படுத்த முடியும் ,வலு சேர்க்க முடியும் என்பதாகவே யோசித்தேன். அப்படித்தான் என் உழைப்பினைப் போட்டேன்.
 
 இந்தப் படத்தில் இரண்டு நீளமான முக்கியமான காட்சிகளை ஒரே ஷாட்டில் எடுத்தோம். காபி ஷாப்பில் காதலர்கள் பிரியும் காட்சி ஒன்று.மற்றொன்று தாராவின் வீட்டில் நடக்கும் காட்சி.
 
 இரண்டு காட்சியிலும் ஒரு வினாடி கூட இடைவெளி கொடுக்கக்கூடாது என்று ஒரே ஷாட்டில் எடுப்பது என்று முடிவெடுத்தோம், அதற்குள் கட் செய்வது என்பது பார்வையாளர்களின் கவனத்தை மாற்றிவிடும் என்று நினைத்து இயக்குநருடன் பேசி அப்படி எடுத்தேன் .இந்த இரண்டு காட்சிகளும் விமர்சகர்களால் இனம் கண்டு கொள்ளப்பட்டுப்  பாராட்டப்பட்டன.
 
 அதே போல் இன்னொரு முக்கியமான விஷயம். இந்தப்படத்தில் நான் மூன்று லென்ஸ்களை பயன்படுத்தி இருப்பேன். கெளதம் என்ற பாத்திரம் தனிமையில் இருக்கும்போது  அனபா பிக் லென்ஸ் பயன்படுத்தியிருக்கிறேன் .
 
சென்னை நினைவுகளுக்கு ஸ்பிரிக்கல் லென்ஸைப் பயன்படுத்தி இருக்கிறேன். பிளாஷ்பேக் காட்சிகளுக்கு  1950 ஆம் ஆண்டுகளில் பயன்படுத்தப்பட்ட விண்டேஜ் லென்ஸைத் தேடிப்பிடித்து பயன்படுத்தினோம்.அதுமட்டுமல்ல படத்தில் காட்டப்படும் நிறங்களுக்கும் புது அர்த்தம் இருக்குமாறு பயன்படுத்தி இருக்கிறேன் .
கெளதம் தனக்குள்  கோபத்தை மறைத்து வைத்திருக்கும் ஒரு பாத்திரம். அது எந்த நேரத்திலும் வெடிக்கலாம் என்று உணரும் போது சிவப்பு நிறம் வரும் .வேறு காட்சிகள் வந்து மனநிலை மாறும் போது பச்சை நிறமாக மாறும்.
 
 இப்படி வண்ணங்களையும் உணர்வுகள் ஆக்கிக் காட்டியிருப்பேன்.சூரியன் மறைகிற செம்மாலை நேரத்தில் முக்கியமான காட்சியைப் பரபரப்பாக எடுத்து முடித்தோம். இன்று ஊடகங்கள் என் ஒளிப்பதிவைப் பாராட்டுகிற போது நான் கதைப் போக்கிற்கு ஏற்ப கையாண்டுள்ள நிற மாற்றங்களை அடையாளம் கண்டு பாராட்டுகிற போது பட்ட கஷ்டங்கள் ஒன்றுமில்லை என்று தோன்றுகிறது.” என்று முடிக்கிறார் கவின் ராஜ்.
 
இப்போது புதிய பட வாய்ப்புகள் கவின் ராஜை வட்டமிட்டு வருகின்றன.இவர் விளையும் பயிர் என்பதை நிரூபித்து விட்டார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *