May 31, 2023

தயாரிப்பாளர் சங்கத்தில் விஷால் குழுவினர் மீது தயாரிப்பாளர் பி.எல்.தேனப்பன் கடும் குற்றச்சாட்டு..!

தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் பதவியிலிருந்து பிரபல தயாரிப்பாளர் பி.எல்.தேனப்பன் விலகியுள்ளார்.

இது தொடர்பாக அவர் தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவரான விஷாலுக்கு எழுதிய கடிதத்தில், விஷால் தலைமையிலான நிர்வாகிகள் மீது கடுமையான குற்றச்சாட்டுக்களையும் கண்டனங்களையும் தெரிவித்திருக்கிறார்.

தேனப்பன் எழுதியுள்ள ராஜினாமா கடிதம் இதுதான் :

“நான் இதுவரை தமிழ் தயாரிப்பாளர் சங்கத்தின் செயலாளராக ஒரு முறையும், துணைத் தலைவராக ஒரு முறையும், பல முறை செயற்குழு உறுப்பினராகவும்  பணியாற்றியுள்ளேன்.

இப்பொழுது இருக்கும் நிர்வாகத்தில் எதிர்க்கட்சி அணியிலிருந்து செயற்குழுவிற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட வெகு சில உறுப்பினர்களில் நானும் ஒருவன்.

இதுவரை என்னால் முடிந்த அளவிற்கு இந்த நிர்வாகத்திற்கு என்னுடைய ஒத்துழைப்பை அளிக்கத் தவறியதில்லை.

இப்போது நான் தற்போதைய நிர்வாகத்தின் கீழ் செயற்குழு உறுப்பினராகத் தொடர விரும்பாததால் அப்பதவியை ராஜினாமா செய்ய முடிவெடுத்துள்ளேன்.

என் ராஜினாமா முடிவுக்கான காரணங்களை கீழே குறிப்பிட்டுள்ளேன் :

1. முதலில் தி.நகா் அலுவலகம் தனியாக அமைக்கப்பட்டு அதற்கு தனியாக ஊழியர்களை நியமித்து பெரும் பண விரயம் செய்யப்படுவதில் எனக்கு உடன்பாடில்லை. இதற்கான என் எதிர்ப்பினை  ஆரம்பத்தில் நடந்த செயற்குழு கூட்டங்களிலேயே பதிவு செய்துள்ளேன்.

அப்படி தனி அலுவலகம் அமைக்கப்பட வேண்டுமென்றால் சிட்டியில் உள்ள திரையரங்கம் (உதாரணம் – கிருஷ்ணவேனி திரையரங்கம்) எதையாவது லீஸுக்கு எடுத்து நடத்தினால் அதன் மூலம் வருவாயும் ஈட்டலாம். மற்றும் அதையே அலுவலகமாகவும் உபயோகப்படுத்திக் கொள்ளலாம் என்கிற யோசனையையும் கூட்டங்களில் பதிவு செய்துள்ளேன்.

vishal team-tfpc-union

2. சில மூத்த வயதான தயாரிப்பாளர்களுக்கான பென்சன் பணத்தை தராமல் நிறுத்தி அவர்களை கஷ்டப்படுத்துவதில் எனக்கு சிறிதளவும் உடன்பாடில்லை.

3. சமீபத்தில் நடந்த வேலை நிறுத்தத்தின்போது சிலருக்கு மட்டும் சலுகைகள் வழங்கப்பட்டு அவர்கள் மேல் ஒழுங்கு நடவடிக்கைகள் எடுக்கப்படாததில் எனக்கு உடன்பாடில்லை.

4. திரு.ஞானவேல்ராஜா அவர்களின் மீதும் திரு.பவித்ரன் அவர்களிள் மீதும் விதிமீறல்களை காரணம் காட்டி ஒழுங்கு நடவடிக்கை (Disciplinary Action) எடுப்பது என்று செயற்குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டு உடனே திரு.ஞானவேல்ராஜா அவர்களின் ‘நோட்டா’ படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.

ஆனால் வேலை நிறுத்தம் முடிவுற்றவுடன் படப்பிடிப்பிற்கான முதல் அனுமதியே திரு.ஞானவேல்ராஜா அவர்களின் ‘நோட்டா’ படத்திற்குத்தான் அளிக்கப்பட்டது. ஆனால், அவர் மேல் நிலுவையில் இருந்த ஒழுங்கு நடவடிக்கை (Disciplinary Action) செயற்குழுவின் அனுமதியில்லாமல் தன்னிச்சையாக விலக்கிக் கொள்ளப்பபட்டது.

அந்த நடவடிக்கையை நியாயப்படுத்த திரு.பவித்ரன் அவர்கள் மீதும் நிலுவையில் இருந்த ஒழுங்கு நடவடிக்கையும் (Disciplinary Action) விலக்கிக் கொள்ளப்பட்டு வரலாற்றில் இல்லாத வகையில் அவருடைய இன்ஸூரன்ஸ் கார்டு அவரது வீட்டிற்கே சென்று நேரடியாக வழங்கப்பட்டுள்ளது. இது செயற்குழுவை கடுமையாக அவமதிக்கும் செயலாகவே நான் கருதுகிறேன்.

5. அதேபோல் செயற்குழுவின் ஒப்புதல் இல்லாமலேயே இன்சூரன்ஸ் காப்பீட்டுத் தொகை 4 லட்சத்திலிருந்து 2 லட்சமாக குறைக்கப்பட்டதில் எனக்கு உடன்பாடில்லை.

6. வேலை நிறுத்தம் எந்தக் காரணத்திற்காக நடததப்பட்டதோ அவை நிறைவேறாமலேயே (சிண்டிகேட் ஒழிப்பு, ஆன் லைன் டிக்கெட் கட்டண ஒழிப்பு) வேலை நிறுத்தம் தன்னிச்சையாக வாபஸ் பெறப்பட்டு 48 நாட்கள் தேவையில்லாமல் தயாரிப்பாளர்களுக்கு கடும் நஷ்டத்தை ஏற்படுத்தியதில் எனக்கு உடன்பாடில்லை.

7. வேலை நிறுத்தத்தினால் QUBE Cinema-வின் VPF கட்டணம் குறைக்கப்பட்டதாக சொன்னாலும் முன்பு இருந்த கட்டண முறையை மாற்றி வாரம் ரூ.5000 (Flat Rate) முறையில் வசூலிக்கப்படுகிறது. 4 வாரங்கள் ஓடும் படங்களுக்கு மொத்த கட்டண அடிப்படையில் கணக்கிடும்பொழுது, இவை முன்பு இருந்த கட்டணத்தைவிடவும் அதிகம் என்பது தெரிகிறது.

இதற்காகவா 48 நாட்கள் வேலை நிறுத்தம் நடந்தது என்பதை நினைத்தால் வேதனை மட்டுமே மிஞ்சுகிறது.

8. வேலை நிறுத்தத்தின் பொழுது அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக அமைக்கப்பட்ட கமிட்டி, பெப்சி படப்பிடிப்பு அனுமதி கமிட்டி, மற்றும் Release Regulation கமிட்டி ஆகியவை செயற்குழுவின் ஒப்புதல் பெறாமலேயே தன்னிச்சையாக அமைக்கப்பட்டது செயற்குழுவை அவமதிப்பதான செயலாகவே பார்க்கிறேன்.

9. வேலை நிறுத்தம் வாபஸ் பெறப்பட்டவுடன் சொல்லப்பட்ட வாரம் மூன்று படங்கள் என்னும் Release Regulation என்பதை இன்றுவரை நடைமுறைப்படுத்த முடியாமல் தயாரிப்பாளர் சங்கம் திணறுவதை பார்க்கும்பொழுது வேதனையாக இருக்கிறது.

இதற்காக தனி கமிட்டி அமைக்கப்பட்டதையும், அந்தக் கமிட்டிதான் ரிலீஸ் தேதிகளை வரைமுறைபடுத்தும் பொறுப்பில் இருப்பதையும் கேள்விப்படுகிறேன்.

இதைப் பற்றி என் சக தயாரிப்பாளர்களும், எனக்கு ஓட்டளித்த நண்பர்களும் கேட்கும் பொழுது செயற்குழு நிர்வாகத்தின் அங்கமாக இருக்கும் எனக்கே எதுவும் தெரியவில்லை என்று சொல்ல வெட்கமாக இருக்கிறது.

செயற்குழு உறுப்பினராக உள்ள எனக்கே இந்த நிலை என்றால் மற்ற தயாரிப்பாளர்களின் நிலையை நினைத்தால் பரிதாபமாக இருக்கிறது.

10. அதேபோல் பெரிய நடிகர்களின் திரைப்படங்கள் வெளியாகும்போது அவை அதிக திரையரங்குகளில் அதாவது 400, 500 திரையரங்குகளில் வெளியாகாமல் 300 திரையரங்குகளுக்குள் வெளியாகும்படி வரைமுறைப்படுத்தப்படும் என்று அறிவித்துவிட்டு ‘இரும்புத் திரை’ படம் மட்டும் வெளியீட்டு அறிவிப்புக்கு மாறாக அதிகத் திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. இது தலைவரின் அறிவிப்புக்கு முரணான செயலாகவே கருதுகிறேன்.

11. பெப்சியிடம் அக்ரிமெண்ட் காப்பியைக் கொடுத்துவிட்டுத்தான் படப்பிடிப்பிற்கு அனுமதி பெற வேண்டும் என்பதை எதிர்க்கிறேன். இந்த விதிமுறை முதல் படம் தயாரிக்கும் தயாரிப்பாளர்களுக்கு வேண்டுமானால் நடைமுறைப்படுத்தலாமே தவிர, பல படங்களைத் தயாரித்த தயாரிப்பாளர்களை இந்த நிபந்தனைகளுக்கு கட்டாயப்படுத்துவது அவர்களின் அனுபவத்தையும், தொழில் அறிவையும், அவமதிப்பதாகவே கருதுகிறேன். இந்தக் கருத்தை செயற்குழுக் கூட்டத்திலும் பதிவு செய்துள்ளேன்.

12. கேபிள் டி.வி.ஆபரேட்டர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களிடத்தில் மாதாமாதம் பணம் வசூலிக்கப்படும் என்று கடந்த 14 மாதங்களாக நடந்த ஒவ்வொரு செயற்குழுவிலும் அறிவிக்கப்பட்ட நிலையில் இதுவரையிலும் கேபிள் டிவி ஆபரேட்டர்களிடமிருந்து ஒரு ரூபாய்கூட வசூலிக்க முடியவில்லை என்பது நிர்வாகிகளின் நிர்வாகத் திறமையை சந்தேகத்துக்குள்ளாக்குகிறது.

13. அதேபோல் திருட்டு விசிடி, தமிழ் ராக்கர்ஸ் போன்றவை ஒழிக்கப்படும் என்று 14 மாதங்களாக எல்லா கூட்டங்களிலும் அறிவிக்கப்பட்டு பண விரயம் நடந்ததே தவிர, திருட்டு விசிடி, தமிழ் ராக்கர்ஸ் இரண்டுமே எந்தவிதத்திலும் கட்டுப்படுத்தப்படவில்லை.

14. எல்லாவற்றுக்கும் மேலாக தயாரிப்பாளர் சங்கம் என்பது தயாரிப்பாளர்களின் நலன் சார்ந்து செயல்பட வேண்டுமே தவிர, நடிகர்களின் நலன் சார்ந்து செயல்படக் கூடாது என்பதை என்னால் குறிப்பிடாமல் இருக்க முடியவில்லை.

உதாரணத்திற்கு சிம்பு, ஜெயம் ரவி, வடிவேல், பழைய கார்த்திக் ஆகியோர் மீது கொடுக்கப்பட்ட புகார்களை விசாரிக்க அவர்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்த பின்பும், அவர்கள் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் அழைப்பைப் பொருட்படுத்தவில்லை.

தயாரிப்பாளர் சங்க நிர்வாகம் இந்த விஷயத்தில் மெளனமாக இருப்பதும், புகார் கொடுத்த தயாரிப்பாளர்களின் சிரம நிலையை உணராமல் இருப்பதும் இந்த நிர்வாகம் இனியும் தயாரிப்பாளர் நலன் சார்ந்து செயல்படும் என்கிற நம்பிக்கையை இழந்துவிட்டேன்.

15. தயாரிப்பாளர் சங்கத்தில் ஓட்டளித்து தேர்ந்தெடுக்கப்பட்ட திரு.பிரகாஷ்ராஜ், மற்றம் திரு கெளதம் மேனன் அவர்களும் கடந்த 9 மாதங்களாக தயாரிப்பாளர் சங்கக் கூட்டங்களில், நடவடிக்கைகளில் கலந்து கொள்வதில்லை. இதனால் ஒட்டு மொத்த தயாரிப்பாளர் சங்கத்தின் முடிவுகளும், ஓரிரு நிர்வாகிகளால்(Office Bearers) தன்னிச்சையாக எடுக்கப்படுவதாக உணர்கிறேன்.

இந்த நிர்வாகத்தில் அனுபவம் வாய்ந்த மூத்தத் தயாரிப்பாளர்களை ஆலோசிக்காமல் தன்னிச்சையாக முடிவகள் எடுக்கப்படுவதால் எனக்கு ஓட்டளித்த தயாரிப்பாளர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து இந்த நிர்வாகத்தின் அங்கமாக நான் தொடர விரும்பவில்லை.

எனவே என் செயற்குழு உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ய முடிவு எடுத்துள்ளேன்.

எனவே என் ராஜினாமாவை ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

 இப்படிக்கு

பி.எல்.தேனப்பன்

செயற்குழு உறுப்பினர்

தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *