தரமற்ற உணவுப் பொருட்கள் பயன்படுத்தியதே இல்லை…
ஆசிப் பிரியாணி உரிமையாளர் பேட்டி!
சென்னை: தங்கள் நிறுவனத்தில் தரமற்ற உணவுப் பொருட்கள் பயன்படுத்தவில்லை என ஆசிப் பிரியாணி நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
தமிழகம் முழுவதும் பல கிளைகளை வைத்துள்ள நிறுவனம் ஆசிப் பிரியாணி உணவகம். இந்த உணவகத்தில் பிரியாணி உள்ளிட்ட உணவுப் பொருட்கள் தரமற்ற முறையில் தயாரிக்கப்படுவதாகவும், கெட்டுப்போன உணவுகளை விற்பனை செய்வதாகவும் உணவுப் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தொடர் புகார்கள் வந்தன.
ஆசிப் பிரியாணி கடைகளில் உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை நடத்தினர். சென்னை கிண்டியில் உள்ள ஆசிப் பிரியாணி கடை, சமையற்கூடத்தில் உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை நடத்தி தரமற்ற முறையில் இயங்கியதாகக் கூறி சமையல் கூடாரத்திற்கு சீல் வைக்கப்பட்டது.
இந்நிலையில் தங்கள் நிறுவனத்தில் தரமற்ற மற்றும் கெட்டுப்போன இறைச்சிகள் பயன்படுத்துவது கிடையாது என ஆசிப் பிரியாணி நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அந்நிறுவனத்தின் உரிமையாளர் ஆசிப் அகமது, தன்னுடைய வளர்ச்சி பிடிக்காத சிலர் திட்டமிட்டு சதி செய்து வருவதாகக் கூறினார்.
செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது, “ஆசிப் பிரியாணி நிறுவனம் பெரிய பின்புலத்தோடு ஆரம்பிக்கப்பட்ட நிறுவனம் அல்ல. தள்ளு வண்டியில் இருந்து இன்று பெரிய ஓட்டலாக உயர்ந்திருக்கும் நிறுவனம். எங்கள் நிறுவனத்துக்கு இப்போது 40 கிளைகள் இருக்கின்றன. அடிப்படையில் நான் ஒரு சமையல்காரன். இன்று வரை பாரம்பரிய முறையில் விறகடுப்பில் தான் சமைத்து வருகிறோம். எங்களுடைய தரம் தான் வாடிக்கையாளர்களை பெற்று தந்தது. தரத்தில் நாங்கள் ஒருபோதும் சமரசம் செய்து கொண்டது கிடையாது. எங்கள் நிறுவனத்தில் தரமற்ற உணவுப் பொருட்கள் மற்றும் கெட்டுபோன இறைச்சி பயன்படுத்தியதற்காக, சமையல் கூடத்துக்கும், கடைக்கும் சீல் வைத்ததாக வெளியான தகவல் முற்றிலும் தவறானது. சமையல் கூடத்தில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் தான் பயன்படுத்துகிறோம்.
பொதுவாக விறகடுப்பு பயன்படுத்தும் சமையல் கூடம் எப்படி இருக்கும் என்பது அனைவருக்கும் தெரியும். ஒரு சில கட்டமைப்பு பிரச்சினையினால் தான் சீல் வைக்கப்பட்டதே தவிர, தரமற்ற உணவுக்காக இல்லை. இப்போது சமையல் கூடத்தை நவீனமயமாக்கி இருக்கிறோம். விறகடுப்பு பயன்படுத்தக் கூடாது, கேஸ் அடுப்பு தான் பயன்படுத்த வேண்டும் என்று உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கூறியதால் அதை இப்போது செய்துள்ளோம். மற்றபடி நாங்கள் ஒருபோதும் இறைச்சியை இருப்பு வைப்பதில்லை. தேவைக்கு ஏற்ப தினந்தோறும் தான் இறைச்சி வாங்குகிறோம்.
எனவே தவறாக பரப்பப்பட்ட தகவலை யாரும் நம்ப வேண்டாம் என வாடிக்கையாளர்களை கேட்டுக்கொள்கிறேன். எங்களுடைய வளர்ச்சி பிடிக்காமல் சிலர் திட்டமிட்டு சதி செய்திகின்றனர். அது யார் என விரைவில் கண்டுபிடிப்போம்”, என அவர் கூறினார்.