அஜயன் பாலா
நாடகக் கலையின் ஆலமரம் நா.முத்துசாமியின் வாழ்வும் பங்களிப்பும் குறித்த குறுஞ்சித்திரம்
கூத்துப்பட்டறை நா. முத்துசாமி என்றால் உங்களில் பலர், யார் அவர் எனக் கேட்கலாம். ஆனால் விஜய் சேதுபதி, பசுபதி, விமல், விதார்த் என வெறுமனே பெயரைச் சொன்னதும் உங்கள் முகம் ஆயிரம் வாட்ஸ் பல்பாக விரியத் தொடங்குவதைப் பார்க்க முடிகிறது. அவர்கள் உருவாகக் காரணமாக இருந்த ஆசான்தான் கூத்துப்பட்டறை நா.முத்துசாமி. உங்களைச் சொல்லிக் குற்றமில்லை. தமிழ்நாட்டின் டிசைன் அப்படி. தமிழ்ப் பண்பாட்டுக்காகத் தன் வாழ்வை அர்ப்பணித்த ஒரு மகத்தான கலைஞனை அறிமுகப்படுத்த சினிமாதான் தேவையாக இருக்கிறது
நேற்று முன்தினம் (அக்டோபர் 24) காலை தன்னுடைய சுவாசப்பை சட்டெனத் தன் வேலையை நிறுத்திக்கொண்டதால் சடலமாகிப்போன நா.முத்துசாமி ஆறடிக்கும் அதிகமான உயரம் கொண்டவர். முறுக்கிக் கிடக்கும் நரைத்த மீசையின் நறுவிசும் பளிச்சென வசீகரிக்கும் கோழிமுட்டைக் கண்களும் யாரையும் ஒரு நிமிடம் நின்று பார்க்க வைக்கும். “வாங்க அஜயன் பாலா, சவுக்கியமா இருக்கீங்களா?” என உபசரிப்பைக்கூட கம்பீரமாக உரத்த குரலில் அவர் கேட்கும் பாங்கைத் தமிழ்நாட்டில் வேறு எவரிடமும் பார்க்கவே முடியாது
நடிகனுக்குக் குரல் அவசியம். எதையுமே அவன் உரக்கப் பேசி பழகினாதான் அட்டென்ஷனை உருவாக்க முடியும் என முதல் சந்திப்பின்போது அவர் என்னிடம் சொன்னது எனக்கு இன்னமும் நினைவிருக்கிறது.
புனைவுகளின் மூலம் கிடைத்த அறிமுகம்
நா. முத்துசாமி பழக்கமானது அவரது கதைகள் மூலமாகத்தான். நீர்மை தொகுப்பை முதன்முதலாக வாசித்தபோது அவரது மொழி ஆளுமையாலும் புனைவாற்றலாலும் வசீகரம் கொண்டேன். அவ்வப்போது நாடக நிகழ்வுகளில் அவரைச் சந்திக்க நேர்ந்தாலும் 2002 வாக்கில்தான் நெருங்கிப் பழகும் வாய்ப்பு கிட்டியது. பரத நாட்டியத்தைப் புதுமையான முறையில் உலகமெங்கும் கொண்டு சென்ற நடனமங்கை சந்திரலேகாவை குமுதம் தீராநதி இதழுக்காகப் பேட்டி காண தளவாய் சுந்தரம் அழைப்பின்பேரில் பெசன்ட் நகர் பீச்சில் இருக்கும் ஸ்பேசஸ் அரங்குக்கு இலக்கிய நண்பர்களோடு சென்றபோது எங்களோடு முத்துசாமியும் ஆட்டோவில் வந்தார். சந்திரலேகாவுடன் அவருக்குப் பல ஆண்டுகள் நெருங்கிய நட்பு இருந்த காரணத்தால் ஒரு வசதிக்கு அவரையும் அழைத்திருந்ததாக தளவாய் சுந்தரம் சொன்னார். வயதில் மிகவும் இளையவர்களான எங்களோடு அவரும் ஆட்டோவில் பயணித்து வந்தது மறக்க முடியாத அனுபவம்.
அந்தப் பயணத்தின் போதுதான் நான் அவரிடம் அசட்டுத்தனமாகப் பல கேள்விகள் கேட்க, அனைத்துக்கும் அவர் பொறுமையாக விடையளித்தார். அப்போதே அவருக்கு வயது எழுபது ஆகியிருந்தது. ஆனாலும், பேச்சிலும் தோற்றத்திலும் கம்பீரத்தில் குறைவில்லை.
தஞ்சை மாவட்டம் புஞ்சை கிராமத்தில் பிறந்த முத்துசாமி இலக்கியம் மீதான ஆர்வம் காரணமாகச் சென்னைக்கு வந்து டாஃபேயில் வேலைக்குச் சேர்ந்தார். வேலை நேரம் போக மீதி நேரங்களில் இலக்கியப் பித்து பிடித்து சிறு பத்திரிகையாளர்களுடன் சேர்ந்து பொழுதைக் கழித்தவருக்கு சி.சு.செல்லப்பாவின் நட்பு கிட்டியது. அப்போது அவர் நடத்திய ‘எழுத்து’ பத்திரிகையில் இவர் தொடர்ந்து சிறுகதைகளை எழுதிவந்தார். அப்போது சி.மணி, ஞானக்கூத்தன், வீராச்சாமி என மேலும் பலர் பழக்கமாகினர். இலக்கியத்தில் கறார் பேர்வழியான சி.சு.செல்லப்பா ஒருமுறை ஞானக்கூத்தன் கொடுத்த கவிதையை “இது குப்பை” என நிராகரிக்க, அந்தக் கோபத்தில் இந்த நண்பர்கள் அனைவரும் சேர்ந்து துவக்கிய பத்திரிகைதான் ‘நடை’.
நாடக உலகப் பிரவேசம்
சி.மணியை ஆசிரியராகக் கொண்ட இந்தச் சிறுபத்திரிகையில் மற்றவர்கள் கவிதை, கதை ஆகியவற்றை எழுதும் பொறுப்பு ஏற்க, முத்துசாமிக்கு நாடகம் எழுதும் பொறுப்பு தலையில் விழுந்தது. அவர் அதைச் சவாலாக ஏற்று 1967இல் ‘காலம் காலமாய்’ எனும் நாடகம் எழுத, நாடகம் எனும் கலை வடிவம் அவர் கையைக் கெட்டியாய் பிடித்துக்கொண்டது. அப்போது பிடித்த பிடி நேற்று முன்தினம்தான் முழுதாய் விட்டது.
அந்த நாடகத்தைப் படித்துவிட்டு நண்பர்கள் அபத்த வகை நாடகம் எனப் புகழ்ந்தனர். இலக்கியத்தில் அப்படியொரு வகைமை இருப்பது அப்போதுதான் அவருக்கே தெரிய வந்தது. வாழ்வின் அபத்தத்தைப் பிரதிபலிக்கும் வடிவில் எழுதப்படும் பிரதியை அபத்த வகை எழுத்து என எளிதாக இதைப் புரிந்துகொள்ளலாம். அந்தப் பாராட்டு தந்த உற்சாகத்தில் நாடகத்தின் பால் கவனம் செலுத்தத் துவங்கினார்.
இதனிடையே ‘கசடதபற’, ‘பிரக்ஞை’ போன்ற இதழ்கள் இலக்கியம் தவிர்த்து நவீன ஓவியம், நவீன நாடகம், சிற்பம் எனப் பல துறைகளில் தமிழில் புதிய மாற்றம் தேடிப் பயணிக்கத் தொடங்கின.
1975 வாக்கில் அண்ணா பல்கலைக்கழகத்தில் அவரது ‘நாற்காலிக்காரர்கள்’ நாடகம் ஆங்கிலத்தில் மேடையேற்றப்பட்டது. அதுவே தமிழின் முதல் நவீன நாடகம் என்ற பெயரைப் பெற்றது.
நம் பண்பாடு, கலாச்சாரம் ஆகியவற்றிலிருந்துதான் நமக்கான அசலான நாடகக் கலையை உருவாக்க முடியும் என நம்பிய முத்துசாமி அதற்கான தீவிரமான தேடலைத் தொடங்கினார் கன்னடத்தில் யக்ஷகானம், கேரளாவில் மோகினியாட்டம், கதகளி எனப் பல வடிவங்களைத் தேடிப் போனார். ஆனால் எதிலும் திருப்தி வரவில்லை.
கூத்துப்பட்டறை பிறந்த கதை
அப்போதுதான் அவருக்குக் கூத்து எனும் பாரம்பரியத் தமிழ்க்கலை பரிச்சயமானது. அதில் சிறந்து விளங்கிய புரிசை கிராமத்துக்கு (வட ஆற்காடு மாவட்டம் செய்யாறுக்கு அருகே உள்ள கிராமம் இது) சென்று கண்ணப்பத் தம்பிரான் எனும் கூத்துக் கலைஞரைச் சந்தித்து அக்கலையைக் கற்றுக்கொண்டார். இயல் இசை நாட்டியம் என மூன்றும் இணைந்த இக்கலையே தான் தேடியலைந்த நாடக வடிவம் எனக் கண்டுகொண்டார். சென்னைக்குத் திரும்பியதும், அதற்காக ஓர் இயக்கத்தை உருவாக்க வேண்டும் என நண்பர்களுடன் ஆலோசனை செய்கிறார். சி.மணி, சச்சிதானந்தம், ஞானக்கூத்தன், வீராச்சாமி, க்ரியா ராமகிருஷ்ணன் எனப் பலரும் ஆலோசித்த போது வீராச்சாமி எனும் நண்பர் கூத்துப்பட்டறை என்ற பெயரைச் சொல்ல, அதையே வைக்கலாம் என ஏகமனதாக அனைவரும் முடிவெடுக்கின்றனர். இப்படியாக 1981இல் தொடங்கப்பட்டதுதான் கூத்துப்பட்டறை எனும் நாடகத்துக்கான தனிப்பெரும் இயக்கம்.
தொடங்கிவிட்டாரே தவிர, இதில் நடிக்கத் தொழில்முறை நடிகர்கள் யாரும் வரவில்லை. என்னமோ கூத்தாம் பட்டறையாம்… இதெல்லாம் எதுக்கு என முகம் சுளித்தனர். முத்துசாமிக்கு அப்போது உதவி செய்தது அஞ்சல் அலுவலக ஊழியர்கள்தான்.அவர்களை வைத்து விடுமுறை நாட்களில் ஒத்திகையைத் தொடங்கினார். ஒத்திகைக்குத் தோதாக இடம் கிடைக்கவில்லை.இப்படியாக ஆரம்ப நாட்களில் அவர் பட்ட கஷ்டங்கள் பல.
ஒருநாள் கிருஷ்ண கான சபாவில் நாடகம் சம்பந்தமான விழா ஒன்றில் கூத்து எனும் நமது பாரம்பரியக் கலை பற்றிப் பேசப்போக, பேஷ் பேஷ் என் தொடை தட்டி சாஸ்திரீய சங்கீதத்தை ரசித்துப் பழக்கப்பட்ட மரபார்ந்த ரசிகர்களுக்கு அதிர்ச்சி, என்ன இது சபாவில் வந்து கூத்து, அது இதுன்னுட்டு என முகம்சுளித்து அவரை மேடையை விட்டுக் கீழிறங்கச் சொன்னார்கள். அந்த நேரத்தில் சட்டென மேடைக்கு வந்த பத்மஸ்ரீ நடன மணி பத்மா சுப்பிரமணியம், “அவர் சொல்ல வர்றது முக்கியமான விஷயம், அதை காதுகொடுத்து முதல்ல கேளுங்கோ” எனச் சொன்னபிறகுதான் அனைவரும் சமாதானமடைந்தனர்.
கூத்துப்பட்டறை காட்டிய வழியில்…
இப்படியாகப் பல போராட்டங்களுக்கிடையே கலாச்சார மாற்றங்களை நவீன நாடகத்தின் வழி முன்னெடுத்தார். சில நாடகங்களை அவரே எழுதினார் அவருடைய இலக்கியப் பின்புலம் அவரது நாடகங்களுக்கு வசீகரத்தையும் தீவிர புனைவம்சத்தையும் அளித்தது. சிலர் முத்துசாமியின் நாடகங்கள் புரியவில்லை என்றார்கள். ஏமாற்று என்றார்கள். நாடகமே இல்லை என்றார்கள். ஆனாலும் முத்துசாமி தன் நாடகங்களை ரசித்த சிறு கூட்டத்தினருக்காகத் தொடர்ந்து சோர்வில்லாமல் எழுதி இயக்கவும் செய்தார். சுவரொட்டிகள், உந்திச்சுழி, கட்டியக்கரான், நற்றுணையப்பன், தெனாலிராமன், படுகளம் என அவரது நாடகங்கள் படிப்படியாகத் தமிழ் சூழலில் புதிய ரசனையை உருவாக்கித் தமிழ் நாடக உலகில் அழுத்தமான தடம் பதித்தன. கூத்துப்பட்டறை பாணியில் பல புதிய நாடகக் குழுக்கள் உருவாகின.
பயிற்சியில் புதுமை
இப்படியாக நாடகத்தின் வழி தொன்மத்துக்கும் புதுமைக்கும் பாலமிட்ட முத்துசாமி தன் கூத்துப்பட்டறை நடிகர்களுக்காக சில விநோதமான பயிற்சிகளை ஆய்வின் வழி மேற்கொண்டார். நடிகனின் உடற்பயிற்சியாகக் கோலி, பம்பரம், கோலாட்டம், சிலம்பம், குத்து வரிசை போன்ற பாரம்பரிய விளையாட்டுக்களின் சூட்சுமங்களைப் பயன்படுத்தியபோது அனைவரும் அந்த விளையாட்டுக்குப் பின்னிருக்கும் உடல் பாவங்களைக்கண்டு ஆச்சரியமடைந்தனர். பறை இசை மற்றும் நானாவிதத் தாள வாத்தியப் பயிற்சி, நாட்டுப்புறக் கலைகளான தேவராட்டம், ஒயிலாட்டம்,போன்ற ஆட்டங்களிலிருந்தும் தனது நடிப்புக்கான பயிற்சிகளைக் கண்டறிந்து தனது பட்டறை மாணவர்களுக்குப் பயிற்றுவித்தார்
கூத்துப்பட்டறை எனும் பெயர் தீவிர இலக்கிய உலகில் மதிப்பு வாய்ந்த பெயராக மாறத் தொடங்கியது. தனது நடிகர்களை டெல்லி தேசிய நாடகப் பயிற்சிப் பள்ளிக்கும் இதர மாநிலங்களின் முகாமுக்கும் அனுப்பி நாடகக்கலையில் புதுமைகள் வளர மெனக்கெட்டார்
கூத்துப்பட்டறையின் அடுத்த கட்ட வளர்ச்சி
அவரது இந்த நடவடிக்கைகளால் கலையார்வம் மிக்க நடிகர்கள் அவரை தேடி வரத் துவங்கினர். கருணா பிரசாத், ராஜ்குமார், கலைராணி, பசுபதி, குமாரவேல், ஜார்ஜ், ஜெயக்குமார் என நடிப்புக் கலையின் மீது பேரார்வம் கொண்ட பெரும் படையே கூத்துப்பட்டறையில் முகாமிட்டது. அங்கேயே தங்கிப் பயிற்சிகளை அவர்கள் மேற்கொள்ளத் தொடங்க, நாளடைவில் செலவும் அதிகமாகியது. அன்றைக்கு மட்டுமல்ல; இன்றைக்கும் நவீன நாடகம் என்றால் காசுகொடுக்க ரசிக சமூகம் மூக்கில் அழும். ஒருகட்டத்தில் டாஃபே வேலையும் போனது.
இச்சமயத்தில் ஃபோர்டு பவுண்டேஷன் அவரது கலை முயற்சிகளுக்குத் தோள்கொடுக்க முன்வர, கூத்துப்பட்டறை முன்னிலும் சுறுசுறுப்பானது.
பசுபதி, கலைராணி, குமாரவேல், ஜார்ஜ் போன்றவர்கள் சினிமாவில் தலையெடுக்கத் தொடங்கினர். அவர்களது வித்திஅயாசமான நடிப்பால் ஈர்க்கப்பட்ட திரைத் துறைக்குக் கூத்துப்பட்டறை என்னும் பெயர் பரிச்சயமாகத் தொடங்கியது.
கூத்துப்பட்டறையில் பயிற்சிபெற்ற நடிகர்களுக்கென்று தனி அடையாளம் உருவானது. அதுவரையிலான நிதியுதவிகள் நிறுத்தப்பட, கூத்துப்பட்டறை நடிப்புப் பயிற்சி வகுப்புகளைத் தொடங்கியது. பல புதுமுகங்கள் புகுந்தனர் வெளியேறும்போது விமல், விதார்த், விஜய் சேதுபதி எனப் பெயர் பெற்றனர்.
இன்று கூத்துப்பட்டறை நடிப்புக் கலையின் கோயிலாகத் திரையுலகமே அண்ணாந்து பார்க்கும் அளவில் வளர்ந்திருக்கிறது.நாடகத் துறையில் ஜெயராவ், மீனாட்சி, சந்திரா, தம்பி சோழன் எனப் பல விழுதுகளை உருவாக்கி ஆலமரமாக விரிந்துகொண்டிருக்கிறது. அதை உருவாக்கிய நடிப்புக் கலையின் பீஷ்மர் தன் இறுதிப் பயணத்தை மேற்கொண்டிருக்கிறார்.
முத்துசாமியின் நாடகங்கள் அனைத்தையும் ஒரே தொகுப்பாக போதிவனம் பதிப்பகம் பதிப்பித்துள்ளது. நா.முத்துசாமியை இன்னும் கூடுதலாகப் புரிந்துகொள்வதற்கும் நாடகக் கலை சார்ந்த தேடல் உள்ளவர்களுக்கும் இந்த நூல் சிறந்த வழிகாட்டி.
(கட்டுரையாளர் அஜயன் பாலா எழுத்தாளர், திரைப்பட இயக்குநர், திரைக்கதை ஆசிரியர். இவரைத் தொடர்புகொள்ள: