September 30, 2023

நீட் தேர்விற்கான வயது உச்சவரம்பிற்குத் தடை

மருத்துவப் படிப்புகளுக்கான நீட் பொது நுழைவுத் தேர்வு எழுதுவதற்கு வயது உச்சவரம்பினை இந்திய மருத்துவக் கவுன்சில் நிர்ணயம் செய்துள்ளது. இதுதொடர்பாக சி.பி.எஸ்.இ. கடந்த மாதம் வெளியிட்டுள்ள அறிவிக்கையில் பொதுப் பிரிவினருக்கு 25 வயதும், இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 30 வயதாகவும் நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

இந்த உச்சவரம்பு அறிவிக்கைக்கு தடை விதிக்கக் கோரி கேரளாவைச் சேர்ந்த 2 பேர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். நீட் தேர்வு எழுத வயது உச்சவரம்பு நிர்ணயிக்கக் கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும், அதற்கு மாறாக தற்போது வயது உச்சவரம்பு நிர்ணயிக்கப்பட்டிருப்பதாக மனுதாரர்கள் தங்கள் மனுவில் கூறியிருந்தனர்.

இந்த வழக்கை இன்று விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம், நீட் தேர்வு வயது உச்ச வரம்பு தொடர்பான சிபிஎஸ்இ அறிவிக்கைக்கு இடைக்கால தடை விதித்தது. இதன்மூலம் பொதுப் பிரிவில் 25 வயதுக்கு மேற்பட்டவர்களும் நீட் நுழைவுத் தேர்வை எழுத முடியும்.

இந்த ஆண்டுக்கான நீட் நுழைவுத் தேர்வு மே மாதம் 6-ம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க மார்ச் 9-ம் தேதி கடைசி நாள் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *