November 30, 2023

நீதிபதிகள் நேர்மையாக இருக்க வேண்டும் : கவிஞர் வைரமுத்து பேச்சு

நீதிபதிகள் நேர்மையாக இருக்க வேண்டும் : கவிஞர் வைரமுத்து பேச்சு

நீதிபதிகள் நேர்மையாக இருக்க வேண்டும் என்று கவிஞர் வைரமுத்து ஒரு மருத்துவமனை திறப்பு விழாவில் பேசினார். இது பற்றிய விவரம் வருமாறு:

சென்னை கோடம்பாக்கத்தில் ‘மெட்வே’ மருத்துவமனையின் திறப்பு விழா இன்று காலை நடைபெற்றது. மருத்துவமனையைக் கவிப்பேரரசு வைரமுத்து திறந்து வைத்தார். ‘நீயா நானா’ புகழ் கோபிநாத் , நடிகர் பிரபு

ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.
விழாவில் மருத்துவமனையைத் திறந்து வைத்துக் கவிப்பேரரசு வைரமுத்து பேசினார். அவர்
பேசும் போது ,

“டாக்டர் பழனியப்பன் அவர்களின் வளர்ச்சியை வெறும் பொருளாதார வளர்ச்சி என்று கூறிவிட முடியாது . பொருளாதார வளர்ச்சி என்பது தனி மனிதனுடன் நின்று விடுவது. பொருளாதார வளர்ச்சி என்பது தனியுடைமை. மருத்துவ வளர்ச்சி என்பது தான் பொதுவுடைமை. அவர் இந்த இரண்டும் இணைந்த வளர்ச்சியைப் பெற்றிருக்கிறார்.
அவர் இரண்டு வெற்றிகளைப் பெற்றிருக்கிறார்.

ஒன்று அவரது அறிவு வெற்றி பெற்றுள்ளது; இரண்டு அவரது மனிதாபிமானம் வெற்றி பெற்றுள்ளது.

அவரது அறிவுடன் கூடிய மனிதாபிமானம் வெற்றி பெற்றுள்ளது. அவரது மனிதாபிமானத்துடன் கூடிய அறிவும் வெற்றி பெற்றுள்ளது.
மனிதாபிமானத்துடன் கூடிய அறிவு தான் மனிதனை மேம்படுத்தும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

காரைக்குடியில் செல்வந்தர் குடியில் பிறந்த தங்கள் மகனை பணத் தொழிலில் விட்டு விடாமல் , பதிப்புத்தொழிலில் விட்டு விடாமல் , கலைத்துறைக்கு விட்டு விடாமல் ஆயிரக்கணக்கான உயிர்களைக் காப்பாற்றும் பெரும் பணியான மருத்துவத் துறைக்கு அனுப்பிய அவரது பெற்றோர்களை நான் பாராட்டுகிறேன். அவர் தன் பெற்றோரிடமிருந்து பண்பாடு , அறிவு . சமூக ஒழுக்கம் மூன்றையும் கொண்டு வந்திருப்பது அவர் பெற்ற பேறு.

ஒரு நோயாளி மருத்துவர் மீது நம்பிக்கை வைக்க வேண்டும்.
ஒரு மருத்துவர் நோயாளி மீது நம்பிக்கை வைக்க வேண்டும்.
நம்பிக்கை இருவருக்கும் பரஸ்பரமானது.
நாட்டில் நான்கு பேர் சரியாக இருக்க வேண்டும். நீதிபதிகள் , டாக்டர்கள் , காவல் துறைத் தலைவர்கள் , கல்வித்துறை தலைவர்கள் என்கிற இந்த நான்கு பேரும் சரியாக இருந்தால் நாட்டு ஒழுக்கம் சரியாக இருக்கும்.

அதோ போகிறாரே நீதிபதி அவர் நேர்மையானவர் , அந்த மருத்துவர் ஒழுக்கமானவர் , அந்த கல்வி போதிக்கும் ஆசிரியர் மிகவும் உயர்ந்தவர் என்கிற கருத்து இருக்கிற சமூகத்தில் ஒழுக்கத்தின் நிழல் படியும் .

இந்திய மருத்துவத்துறை பற்றி மதிக்கத்தக்க தகவல் என்னிடம் இல்லை. இந்தியாவில் 2000 பேருக்கு ஒரு மருத்துவர் தான் இருக்கிறார்.ஆனால் மேலை நாடுகளில் 1000 பேருக்கு ஒரு மருத்துவர் இருக்கிறார்.

இன்னும் ஐந்தாண்டுகளில் இந்தியாவில் ஆறுலட்சம் மருத்துவர்கள் தேவை . 200 மருத்துவக் கல்லூரிகள் தேவை.

மருத்துவமனைகளில் ஏழு லட்சம் படுக்கைகள் தேவை.
இந்தியத் தேவையை ஈடுகட்டும் வகையில் பழனியப்பன் தன் பங்காக இந்திய மருத்துவத் துறைக்கு இந்த மருத்துவமனையை அளித்துள்ளார்.

இம் மருத்துவ மனையின் திறப்பு விழாவில் நோயாளிகள் பெருகி அதிகம் வந்து வாழ்க என்று வாழ்த்தலாமா? முடியாது. இங்கே வந்தவர்கள் அனைவரும் நலம் பெற்று வாழ்க என்று வாழ்த்துகிறேன்.” என்று வாழ்த்திப் பேசினார்.

விழாவில் , நடிகர் பிரபு பேசும் போது ,
” இந்த மூன்றாவது மருத்துவமனையை டாக்டர் பழனியப்பன் திறந்திருப்பது முன்னேற்றத்தைக் காட்டுகிறது என்பதை விட அவர்களின் சேவை அர்ப்பணிப்பு உணர்வைக் காட்டுகிறது என்று சொல்ல வேண்டும்.

நான் இன்று ஆரோக்கியமாக இருக்கிறேன் என்றால் அதற்குக் காரணம் டாக்டர் பழனியப்பன் தான் என்பேன். எனக்கிருந்த பல பிரச்சினைகளைச் சரி செய்தவர் அவர். இந்த மருத்துவமனை சிறந்து விளங்க வாழ்த்துகிறேன்.” என்று வாழ்த்தினார்.

‘நீயா நானா’ புகழ் கோபிநாத் பேசும் போது,
” டாக்டர் பழனியப்பன் எனக்கு ஒரு சகோதரர் மாதிரி இருப்பவர். எது பற்றியும் பேச , கேட்க , பகிர , கருத்து கேட்க என்று இருக்கும் நமக்கான சிறு வட்டத்தில் உள்ள மிகச் சிலரில் அவரும் ஒருவர். ஒரு டாக்டர் எப்பொழுதும் நம்பிக்கை தருபவராக இருக்க வேண்டும். அப்படி நம்பிக்கை தருபவர் அவர். இவர் பலருக்கு குடும்ப டாக்டராக இருப்பவர். குடும்ப டாக்டர் என்றதும் குடும்பத்திலுள்ள அனைவருக்கும் மருத்துவம் பார்க்கும் டாக்டராக இருப்பவர் என்று மட்டுமல்ல அவர்களின் குடும்பத்தில் ஒருவராகவும் இருப்பவர். இவரது மருத்துவ மனைக்கு வந்த அனைவரையும் சம மரியாதையுடன் நடத்துவார் . இவர் இன்னும் வளர்ந்து உயரம் தொட வேண்டும். ” என்று வாழ்த்தினார்.

டாக்டர் பழனியப்பன் நிறைவாக நன்றியுரையாற்றினார். அவர் தனது நன்றியுரையில் “இம் மருத்துவமனை என்பது

எனது தனி மனித சாதனையல்ல. இதில் பணியாற்றும் 350 பேரின் உழைப்பால் சேவையால்தான் இது சாத்தியப்பட்டுள்ளது. அந்தக் குழுவில நானும் ஒருவன் அவர்களின் பிரதிநிதியாகவே இங்கு வந்து நன்றி கூறுகிறேன்.நன்றி!” என்றார்.

விழாவில்திருமதி பிரபு , திருமதி விசாலாட்சி திருப்பதி , திருமதி ஏகம்மை பழனியப்பன் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றினார்கள்,
முன்னதாக “மெட்வே” மருத்துவமனையின் சி.ஓ.ஓ. நரேஷ் அனைவரையும் வரவேற்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *