December 1, 2023

மக்களை விலைக்கு வாங்க நினைக்கும் அரசியல்வாதிகள் வெற்றி பெறக்கூடாது’ கமல்ஹாசன் பேச்சு

மக்களை விலைக்கு வாங்க நினைக்கும் அரசியல்வாதிகள் வெற்றி பெறக்கூடாது’ கமல்ஹாசன் பேச்சு

தர்மபுரி, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் மக்களுடனான பயணம் என தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இதன் ஒரு பகுதியாக தர்மபுரி மாவட்டத்தில் நேற்று கமல்ஹாசன் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி பஸ் நிறுத்தத்தில் தனது பயணத்தை தொடங்கிய அவர், பாப்பாரப்பட்டி, பாலக்கோடு, காரிமங்கலம், பெரியாம்பட்டி ஆகிய இடங்களில் மக்களை சந்தித்து பேசினார். அப்போது அங்கு திரண்டிருந்த மக்கள் மத்தியில் கமல்ஹாசன் பேசும் போது கூறியதாவது:-

பொதுவாக உங்கள் பகுதியில் தேர்தல் நேரம் வந்தால் அரசியல் கட்சியினர் வருவார்கள். ஆனால் நாங்கள் அப்படி அல்ல. உங்களுடைய அடிப்படை தேவைகள் என்ன? என்பதை அறிந்து கொண்டு இங்கு வந்துள்ளோம். உங்களில் ஒருவராக இருந்த எங்களுக்கு ஏற்பட்ட கோபத்தின் வெளிப்பாடாக இப்போது அரசியலுக்கு வந்துள்ளோம்.

நல்லம்பள்ளி பகுதியில் அரசு பள்ளிகள் போதிய அளவில் இருக்கிறதோ, இல்லையோ, டாஸ்மாக் மதுக்கடைகள் அதிகமாகவே இருக்கின்றன. தமிழகத்தில் அரை நூற்றாண்டு கால சாதனையாக சாராயம் ஆறாக ஓடுகிறது. மதுக்கடைகளை ஒருநாளில் முழுமையாக மூடிவிட முடியாது. அதற்கு இன்னும் ஒரு தலைமுறை ஆகும்.

ஓட்டு என்பது அனைவருக்கும் முக்கியமான ஒன்று. உங்கள் ஓட்டுகளை 5-க்கும் 10-க்கும் விற்றுவிடக்கூடாது. அவ்வாறு செய்தால் ஒரு சமுதாயமே அழியும் நிலை ஏற்படும்.

ஓட்டுரிமையின் அடிப்படையை உணர்ந்து தேர்தல் களில் தவறாமல் வாக்களித்து நல்லவர்களை உங்கள் பிரதிநிதிகளாக தேர்வு செய்ய வேண்டும். தற்போது அரசு செய்ய வேண்டிய வேலைகளை தனியாரும், தனியார் செய்ய வேண்டிய வேலைகளை அரசும் செய்துகொண்டிருப்பது அநியாயமாகும். சில ஆயிரம் ரூபாய்களை கொடுத்து 5 ஆண்டுகளுக்கு மக்களை விலைக்கு வாங்கி விடலாம் என்று நினைக்கும் அரசியல்வாதிகள் வெற்றி பெற்றுவிடக்கூடாது.

ஓட்டுக்கு காசு கொடுப்பவர்களின் கைகளை தட்டிவிட்டு எங்கள் கைகளுடன் நீங்கள் இணைய வேண்டும். மாற்றத்தை மக்களால் மட்டுமே முன்னெடுக்க முடியும். எனவே நீங்கள் சரியான முடிவை எடுத்தால் நாளை நமதே.

இவ்வாறு கமல்ஹாசன் பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *