மம்மூட்டியின் ‘மாஸ்டர் பீஸ்’ தமிழில் ‘பேராசிரியர் சாணக்யனாக’ வருகிறார்..!
மெகா ஸ்டார் மம்மூட்டியின் நடிப்பில் சென்ற ஆண்டு கிறிஸ்துமஸ் ஸ்பெஷலாக கேரளாவில் வெளியான மலையாள திரைப்படம் ‘மாஸ்டர் பீஸ்’.
இந்தப் படத்தில் மம்மூட்டியுடன். உன்னி முகுந்தன், முகேஷ், வரலட்சுமி, மஹிமா நம்பியார், பூனம் பஜ்வா ஆகியோர் நடித்திருந்தனர்.
தயாரிப்பாளர் சி.எச்.முகம்மது இந்தப் படத்தைத் தயாரித்திருந்தார். தீபக் தேவ் இசையமைத்திருந்தார். வினோத் இளம்பள்ளி ஒளிப்பதிவு செய்திருந்தார். ஜான் குட்டி படத் தொகுப்பு செய்துள்ளார். மலையாள இயக்குநர் அஜய் வாசுதேவ் இயக்கியிருந்தார்.
15 கோடியில் தயாரிக்கப்பட்டு 35 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது இத்திரைப்படம்.
இப்போது இத்திரைப்படம் தமிழில் மொழி மாற்றம் செய்யப்பட்டு வெளியாகவுள்ளது. ‘பேராசிரியர் சாணக்யன்’ என்று தமிழ்ப் பதிப்பிற்கு பெயர் சூட்டியுள்ளார்கள். மலையாளத்தில் தயாரித்த தயாரிப்பாளர் சி.எச்.முகம்மதுவே, தமிழிலும் மொழி மாற்றம் செய்து படத்தை வெளியிடுகிறார். பிரபல வசனகர்த்தாவான பிரபாகர் தமிழ்ப் பதிப்பிற்கு வசனங்களை எழுதியுள்ளார்.
கல்லூரி மாணவ, மாணவியரின் வாழ்க்கையை மையப்படுத்தி இப்படத்தை எடுத்துள்ளனர். கல்லூரி மாணவர்களுக்கு வெளி நபர்களால் ஏற்படும் பிரச்சினைகளை அதே கல்லூரியின் பேராசிரியர் எப்படி முறியடிக்கிறார் என்பதுதான் படத்தின் கதை.
மம்மூட்டி பேராசிரியராகவும், வரலட்சுமி போலீஸ் அதிகாரியாகவும், மஹிமா நம்பியார் மாணவியாகவும் நடித்துள்ளனர். மம்மூட்டிக்கும், வரலட்சுமிக்கு நடக்கும் மோதல் காட்சிகள் படத்தின் ஹை லைட்ஸ்.
படத்தில் 5 பாடல்கள் மற்றும் 5 அதிரடி ஆக்சன் காட்சிகள் உள்ளது. ஆக்சன் காட்சிகளை ஸ்டண்ட் சில்வா, பீட்டர் ஹெயின் உள்ளிட்ட 5 சண்டை பயிற்சி இயக்குநர்கள் வடிவமைத்துள்ளனர். அதேபோல் 5 பாடல்களையும் 5 நடன இயக்குநர்கள் வடிவமைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்ப் பதிப்பின் டீசர், ட்ரைலர் மற்றும் பாடல்களை, செப்டம்பர் 2-வது வாரத்தில் வெளியிடவுள்ளனர்.
செப்டம்பர் கடைசி வாரத்தில் இத்திரைப்படம் வெளியாகவுள்ளது.