September 24, 2023

மருதம் கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தின் மூலம் ரூ.5.கோடி நிர்ணயம்.

கோயம்புத்தூர் மாவட்டம், நேரு விளையாட்டு அரங்கத்தின் அருகில் ரூ.1.50கோடி மதிப்பில் நவீனப்படுத்தப்பட்ட மருதம் கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தை திறந்து வைத்தும், தங்க மழைத் திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு தங்க நாணயத்தை (21.09.2018)  நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி  வழங்கினார்கள்.

பின்னர்  நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் அவர்கள் தெரிவிக்கையில்,
கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் 1935ம் ஆண்டு கைத்தறி நெசவாளர்களுக்கு வாழ்வளிக்கும் முயற்சியாக நிறுவப்பட்டது. தமிழக அரசின் கைத்தறி, துணிநூல், காதி, கிராமத்தொழில் மற்றும் கைவினைப் பொருட்கள் துறையினால் இவ்வமைப்பு நிர்வகிக்கப்படுகிறது. இதற்குச் சொந்தமான விற்பனை மையங்கள் இந்தியாவின் பலபகுதிகளில் மட்டுமல்லாது அயல்நாடுகளிலும் அமைக்கப்பட்டு பெருமளவிலான பொதுமக்களின் நம்பிக்கையை பெற்ற நிறுவனமாக செயல்பட்டு வருகின்றது. பல ஆண்டுகளாக நஷ்டத்தில் இயங்கி வந்த கோ-ஆப்டெக்ஸ் நிறுவனமானது மாண்புமிகு அம்மா அவர்களின் ஆட்சி காலத்தில் இலாபம் ஈட்டும் நிறுவனமாக மாற்றம் பெற்றது.
கைத்தறித் துணிகளின் விற்பனையைப் பெருக்கவும் சந்தையில் பிற நிறுவனங்களினால் ஏற்படக்கூடிய போட்டியைச் சமாளிப்பதற்கும், உற்பத்தியில் புதுப்புது வகை துணி ரகங்களை அறிமுகம் செய்து வெற்றி நடை போட்டு வருகின்றது. திருமணப் பட்டுப் புடவைகளில் திருமணம் செய்துகொள்ளும் மணமக்களின் உருவங்கள் நெய்து தரப்படுகின்றன. திருக்குறளும் அதற்கான ஓவியமும் கொண்ட படுக்கை விரிப்புகளும் குழந்தைகளுக்கான குட்டீஸ் என்ற சிறப்பு வகை படுக்கை விரிப்புகளும் கிடைக்கின்றன.

மேலும் பட்டுப்புடவைகளில் பாரம்பரிய வடிவங்கள், இலக்கியக் கதாபாத்திரங்களின் உருவங்கள் போன்றவையும் வாடிக்கையாளரரின் விருப்பத்திற்கேற்றாற் போல உருவாக்கப்படுகின்றன. டிசம்பர் 2013 இல் இந்நிறுவனம் கைத்தறி உற்பத்தியில் சிறப்புப் பங்களிப்பு மற்றும் மிகப் பெரிய கைத்தறி தயாரிப்பாளர் என்ற வகைப்பாட்டின் கீழ் இந்திய அரசின் விருதினைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
வாடிக்கையாளர்களின் பேராதரவினால் 2017-18 ஆம் ஆண்டில் இந்தியா முழுவதும் உள்ள கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் ரூ.316 கோடி என்ற அளவில் விற்பனை நடைபெற்றுள்ளது. விற்பனை நிலையங்களை மேம்படுத்தி வாடிக்கையாளர்கள் விரும்பும் வண்ணம் நவீனப்படுத்தி வருகின்றது. அதில் நமது மாவட்டத்திலுள்ள மருதம் கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையம் ரூ.1.50கோடி மதிப்பில் நவீனப்படுத்தப்பட்டுள்ளது.

நவீனப்படுத்தப்பட்டுள்ள இந்த விற்பனை நிலையத்தில் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ள சிறப்பு பட்டு சேலை பிரிவும், ஏற்றுமதி இரகங்களுக்கான தனி பிரிவும் உள்ளன. மேலும், புதிய வடிவமைப்பு மற்றும் வண்ணங்களில் எண்ணற்ற இரகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. மேலும், 2017-18 ஆம் ஆண்டு தங்கமழை பரிசுத் திட்டத்தின் கீழ் கோயம்புத்தூர் மண்டலத்தில் தேர்வு செய்யப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு முதல் பரிசாக 8 கிராம் தங்ககாசு வீதம் 5 வாடிக்கையாளர்களுக்கும், இரண்டாம் பரிசாக 4 கிராம் தங்ககாசு வீதம் 15 வாடிக்கையாளர்களுக்கும் தங்ககாசுகள் பரிசாக வழங்கப்பட்டுள்ளது.
தீபாவளி சிறப்புத் தள்ளுபடி விற்பனைக்காக அறிஞர் அண்ணா பிறந்த நாளான 15.09.2018 அன்று முதல் கைத்தறி இரகங்களுக்கு 30மூ சிறப்புத் தள்ளுபடி வழங்கப்படுகிறது. இவ்விற்பனை நிலையம் கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு ரூ.3.81கோடி விற்பனை செய்துள்ளது. நடப்பு ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு விற்பனை நிலையத்தின் விற்பனை இலக்கு ரூ.5 கோடி என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மேலும், அரசு ஊழியர்களுக்கு வட்டியில்லா கடன் வசதி உண்டு. வாடிக்கையாளர்கள் புதிய விற்பனை நிலையத்தை பார்வையிட்டு கைத்தறித் துணிகளை வாங்கி பயன்பெற்று நெசவாளர்களுக்கு வாழ்வாதாரம் பெருக்கிட உறுதுணையாக இருந்திட வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன், என மாண்புமிகு நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்தார்கள்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சித்தலைவர் த.ந.ஹரிஹரன் இ.ஆ.ப., சட்டமன்ற உறுப்பினர்கள் அம்மன் கே.அர்ச்சுனன், திரு.பி.ஆர்.ஜி.அருண்குமார், ஓ.கே.சின்னராஜ், திரு.வி.சிஆறுக்குட்டி, ஆர்.கனகராஜ், கோ-ஆப்டெக்ஸ் தலைவர் மனோகரன், முதன்மை பொது மேலாளர் அலோக்பப்லே, மண்டல பொது மேலாளர் சுரேஷ்குமார் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 
 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *