September 24, 2023

மார்பக புற்றுநோய் வராமல் தடுக்கும் வழிகள்

பெண்களுக்கு 30 வயதுக்கு பின் மார்பக புற்றுநோய் வராமல் தடுக்க வழிகள் என்ன வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்பதை கீழே பார்க்கலாம்.

மார்ப்பகப் புற்று நோய், 40 வயதைக் கடந்த பெண்களுக்கு வர வாய்ப்புகள் அதிகம். மார்பகத்தில் கட்டி அல்லது மாற்றங்கள் ஏதேனும் தென்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகி பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். மார்பகத்தில் கட்டி உள்ளதா என்பதை மாதத்துக்கு ஒரு முறையாவது சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.

மார்பகத்தில் தொடர்ந்து வலி, அசௌகரிய உணர்வு ஏற்படுதல்.

மார்பகத்தின் அளவு, வடிவத்தில் திடீர் மாற்றம் ஏற்படுதல்.

மார்புக்காம்பு அல்லது வெளிச்சதை பகுதி சிவந்து போகுதல். உட்பக்கமாக இழுத்துக் கொள்ளுதல் அல்லது வீக்கமடைதல்.

சிலருக்கு மேற்கண்ட அறிகுறிகள் தென்பட்டாலும் வலி மட்டும் இருக்காது. வலி இல்லையென்று அலட்சியமாக இருக்காமல், அறிகுறிகளில் ஒன்றிரண்டு தென்பட்டாலும் உடனே மருத்துவரிடம் செல்ல வேண்டும். மருத்துவர் மேமோகிராம், பயாப்ஸி உள்ளிட்ட சில பரிசோதனைகளை செய்து அது புற்றுநோய்தானா என்பதை உறுதி செய்வார்.

மார்பக புற்றுநோய் வராமல் தடுக்க :-

30 வயதுக்கு பிறகு ஆண்டுக்கு ஒருமுறை மருத்துவப் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.

தாய்மார்கள் குழந்தைகளுக்கு குறைந்தது ஓராண்டு வரை கட்டாயம் பாலூட்ட வேண்டும்.

உயரத்துக்கு ஏற்ற எடை என்பதற்கு கவனம் கொடுக்க வேண்டும்.

மாதவிலக்குக்கு இடைப்பட்ட நாட்கள், கர்ப்பகாலம், பாலூட்டும் காலம் ஆகிய காலங்களில் ஏற்படும் இயல்பான மாற்றங்களைத் தெரிந்துவைத்துக் கொண்டால்தான், இயல்புக்கு மாறான மாற்றங்கள் தோன்றினால் அதை உடனே உணர முடியும்.

தக்காளி, கேரட், கருப்பு திராட்சை, மாதுளை, குடமிளகாய், முட்டைக்கோஸ் பப்பாளி, புரொகோலி, பூண்டு ஆகிய ஆன்டிஆக்ஸிடன்ட் நிறைந்த புற்றுநோய்க்கு எதிரான உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.

தினமும் உணவில் குறைந்தது மூன்று வகையான, ரசாயனக் கலப்பில்லாத காய்கறி, பழங்கள் அவசியம் இடம் பெற வேண்டும்.

பெண் குழந்தைகளுக்கு பதப்படுத்தப்பட்ட, பாக்கெட் உணவுகள், துரித உணவுகளைத் தவிர்த்தாலே, அவர்கள் அதிவிரைவாகப் பூப்பெய்துவதை தவிர்க்க முடியும்.

மிளகாய்த் தூள், மசாலா வகைகளில் சிவப்பு நிறத்தை கூட்டசூடான் ரெட் டை கலக்கப்படுகிறது. இது புற்றுநோயை ஏற்படுத்தக்கூடியது. எனவே, வீட்டிலேயே மசாலாப் பொருட்களைத் தயாரித்து பயன்படுத்துவது நல்லது.

ஒருமுறை சமையலுக்குப் பயன்படுத்திய எண்ணெயை மீண்டும் சமையலுக்குப் பயன்படுத்தக் கூடாது.

தினசரி உடற்பயிற்சி செய்ய வேண்டும். இதனுடன் யோகா, தியானம் செய்வது உடலை ஃபிட்டாகவும், ஹார்மோன்களை சீராக சுரக்கவும் வைக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *