June 1, 2023

மிரட்டல் அஞ்சாத ‘டிராஃபிக் ராமசாமி

சமூகப் போராளியான டிராஃபிக் ராமசாமி அய்யாவின்  வாழ்க்கையை உள்ளூக்கமாகக் கொண்டு உருவாகியிருக்கும் படம் ‘டிராஃபிக் ராமசாமி’ . 

டிராஃபிக் ராமசாமியாக இயக்குனர் எஸ்.ஏ. சந்திரசேகரன் நடித்துள்ளார். அவரிடம் உதவி இயக்குநராக இருந்த விக்கி படத்தை  இயக்கியுள்ளார்.
படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும் டீஸர் திரையீட்டு விழா  விழாவில்  இயக்குனர் எஸ்.ஏ. சந்திரசேகரன்,  இயக்குநர் விக்கி ,

நடிகர் ஆர்.கே. சுரேஷ் , நடிகைகள் ரோகிணி , நடிகை உபாசனா ,ஒளிப்பதிவாளர் குகன் ஆகியோர் கலந்துகொண்டார்கள்.

நிகழ்ச்சியில் பேசிய ஆர் கே சுரேஷ்,
” டிராஃபிக் ராமசாமி அவர்களை பெருமைப் படுத்தும் இந்தப் படத்தில் என்னை நடிக்க அழைத்த போது, சந்தோஷமாக வந்து நடித்தேன் .
 
கரடு முரடான ஆனால் மனசுக்குள் ஈரம் உள்ள ஒருவரின் பாத்திரம் அது . சமூக அக்கறையை மையமாகக் கொண்டு வரும் இந்தப் படம் எல்லோருக்கும் பிடிக்கும் ” என்றார் . 
 
நடிகை ரோகினி தன் பேச்சில் ,
” இந்தப் படத்தில் டிராஃபிக் ராமசாமியாக நடிக்கும் எஸ் ஏ சி சார் என்னை  டிராஃபிக் ராமசாமியின் மனைவி கதாபாத்திரத்தில் நடிக்க ,  ஹீரோயின் என்று சொல்லி அழைத்த போது ,
 
‘ஏன்  சார் விஜயகாந்த் சாரை வைத்து படம் எடுத்தபோது எல்லாம்  என்னை ஹீரோயினாக நடிக்க அழைக்கவில்லை’ என்று கேட்டேன் . ஆனால் அவர் இயக்கத்தில் தெலுங்கில் சிரஞ்சீவியின் தங்கையாக நடித்துள்ளேன் . 
 
இந்தப் படத்தில் சந்தோஷமாக நடித்தேன் அதற்கு முக்கிய காரணம், டிராஃபிக் ராமசாமி என்ற ஒரு மாமனிதர் பற்றிய படத்தில் நாம் முக்கிய பாத்திரமாக இருக்கிறோம் என்பதால்தான் . 
வாழ்க்கையே போராட்டம் என்றால் அது இயல்பு . ஆனால் இப்போது நமக்கு போராட்டமே வாழ்க்கை என்று ஆகி விட்டது . இந்த நேரத்தில் டிராஃபிக் ராமசாமி போன்றவர்களை போற்றிப் பின்பற்றினால் நல்லது நடக்கும் .
 
அப்படி இருக்க ஒரு படைப்பில் அவரை  நாங்கள் தூக்கிப் பிடிப்பது குறித்து பெருமைப் படுகிறோம் ” என்றார் 
 
இயக்குனர் விக்கி பேசும்போது,” எஸ் ஏ சி சாரிடம் எட்டு ஆண்டுகள் உதவியாளராக இருந்தேன் .  ஒரு நாள் டிராஃபிக் ராமசாமியின் வாழ்க்கை வரலாற்றுக்  கதையை  அவரிடம் கொடுத்தேன் .
 
‘டிராஃபிக் ராமசாமின்னா…..?  இந்த போஸ்டர்லாம்  கிழிப்பாரே அவரா ?’ என்றார் . ‘இல்ல சார்… அவர் அதுக்கு மேலயும் நிறைய கிழிச்சு இருக்காரு . படிங்க’ என்றேன் . படித்தார். மிகவும் பாராட்டினார் .
 

 அவரே நடித்து தயாரிக்கவும் செய்தார் .  டிராஃபிக் ராமசாமி பற்றி பலரும அறியாத, ஆனால் அறிய வேண்டிய விஷயங்கள் இந்தப் படத்தில் இருக்கும் ” என்றார் 

இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகரன்  பேசும் போது, ” இந்தப் படத்தை இயக்கியுள்ள விக்கி என்னைப் பற்றியோ என் படங்கள் பற்றியோ எதுவுமே தெரியாமல் என்னிடம் வந்து சேர்ந்தார் .

ஒரு கட்டத்தில்  நான் இனி படம் எதுவும் இயக்கப் போவதில்லை என்று கூறி நான் என்னிடம் இருந்த ஐந்தாறு உதவி இயக்குநர்களை எல்லாம் வெளியே அனுப்பி விட்டேன்.

 
ஆனால் விக்கி போகாமல் ‘எனக்கு உங்கள் கூட இருந்தால் போதும் சம்பளமே வேண்டாம்’ என்று இருந்தார்.  ஒரு நிலையில் நான் மனசு கேளாமல் சம்பளம் கொடுக்க ஆரம்பித்தேன். ஒரு நாள் அவர் என்னிடம் ஒரு புத்தகம் கொடுத்துப் படிக்கச் சொன்னார். அது டிராஃபிக் ராமசாமியின் “ஒன் மேன் ஆர்மி “என்கிற வாழ்க்கைக் கதை .

படித்தேன். அதைப் படமாக எடுக்கலாம் என்று விக்கி கூறிய போது என்னால் மறுக்க முடியவில்லை.கதையைப் படித்து முடித்த போது டிராஃபிக் ராமசாமியும்  என்னைப் போலவே சமூக அநியாயம் கண்டு பொங்குகிற மனிதராக இருந்தது புரிந்தது.

 
தவறு நடந்தால் கோபப்படுவேன் என்ற அவரது குணம் எனக்குப் பிடித்தது.அவரை வெறும் போஸ்டர் கிழிப்பவராக நினைத்திருந்த எனக்கு அவர் பெரிய போராளியாகத் தெரிந்தார்.
 

அவர் வாழ்க்கையில்தான் எவ்வளவு போராட்ட அனுபவங்கள் என  வியந்து போனேன் .

நான் 45 ஆண்டுகளில் 69 படங்கள் இயக்கி விட்டேன். நான் விட்டுச் செல்லும்  பெருமையான அடையாளமாக என்ன செய்திருக்கிறோம்? என யோசித்த போது, 

 
 இப்படத்தை அப்படி ஒரு அடையாளமாக எடுக்க நினைத்தேன் . நாங்களே எதிர்பாராத வகையில் பல நல்ல உள்ளங்கள் இதில்  இணைந்தார்கள், எனக்கு ஜோடியாக ரோகிணி  இணைந்தார் .
கதாநாயகன் போன்ற பாத்திரத்தில் ஆர்.கே.சுரேஷ்  வந்தார். ஒரே காட்சி என்றாலும்  நடிக்க ஒப்புக் கொண்ட  விஜய் ஆண்டனியை மறக்க முடியாது.
இப்படியே குஷ்பூ, சீமான்  எல்லாம் படத்துக்குள் வந்தார்கள் .சில காட்சிகளுக்கு ஒப்புக் கொண்டார் பிரகாஷ்ராஜ் .
 
இப்படியே பலரும் படத்துக்குள் வந்து பலம் சேர்த்துள்ளனர்.
 
இப்படம் டிராஃபிக் ராமசாமியின் வாழ்க்கை சம்பவங்களை  ஒரு மாடல் ஆகக் கொண்டு  உருவாக்கப்பட்டது . முழுக்க முழுக்க அவராது வாழ்க்கை வரலாறு அல்ல .
சர்ச்சைகள் கொண்ட கதைதான் இது . ஆனால் இதனால்   எந்த மிரட்டல் வந்தாலும் பயமில்லை.
 
ஏனென்றால் என் முதல் படம் ‘சட்டம் ஒரு இருட்டறை ‘படத்திலேயே மிரட்டல்களைப் பார்த்தவன் நான்.
 
நீதிக்குத் தண்டனை படத்துக்குப் பிறகு ராமாவரம் தோட்டத்துக்கு அழைக்கப் பட்டவன் நான் .
 
அங்கே எனக்கு என்ன நடந்து இருக்கும் என்பதை சொல்லித்தான் தெரிய வேண்டும் என்பதில்லை . எனவே இப்போது எந்த மிரட்டலுக்கும் அஞ்சப் போவதில்லை ”  என்றார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *