March 31, 2023

மீண்டும் புரூஸ்லி … இப்போது தமிழில்

S.K. அமான் பிலிம் புரடக்ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் வந்தவாசி கே.அமான் மற்றும் ஸ்ரீ திண்டுக்கல் வெங்கடேஸ்வரா பிக்சர்ஸ் தயாரிக்க,

புது முகங்கள் புருஸ் சான் – ரஸியா நடிக்க , கை தென்னவன் , ஐஸ்வர்யா ஆகியோர் உடன் நடிக்க ,

முளையூர் சோனை கதை திரைக்கதை வசனம் பாடல்கள் எழுதி இயக்கி இருக்கும் படம் ‘புதிய புரூஸ்லீ’.

மக்கள் தொடர்பு – பெரு. துளசி . பழனிவேல் , ஒளிப்பதிவு – சிவசங்கர், இசை – செளந்தர்யன், நடன இயக்கம் – ராபர்ட், மனோஜ், படத் தொகுப்பு – தங்கவேல்.

கராத்தே குங்க்பூ மன்னனான  ‘புரூஸ்லீ’ மாதிரியான தோற்றத்தில் இந்தப் படத்தின் நாயகன் புரூஸ் சான் நடித்திருக்கிறார்.

படத்தின் டிரெயிலர் வெளியிட்டூ விழாவில் படத்தின் முன்னோட்டமும் பாடல்களும் திரையிடப்பட்டன .

பாடல்கள் தெளிவாக காதில் விழுந்தன . ஓர்  ஒழுங்கான இசை வடிவமும் இருந்தது .

புரூஸ் ஷான் புரூஸ் லீ மாதிரி இருப்பதோடு புரூஸ் லீ போலவே சண்டையும் போடுகிறார் .

திரையிடப்பட்ட ஒரு சண்டைக்காட்சி மிக சிறப்பாக இருந்தது

நிகழ்ச்சியில் முளையூர் சோனை பேசும்போது “புரூஸ்லீ’யின் தீவிர ரசிகனான எனக்கு அவரைப் போன்ற தோற்றத்தில் நாயகன் ‘புரூஸ் சானை’ பார்த்ததுமே புரூஸ்லீ படம் போல ஒரு படம் எடுக்க வேண்டும் என்ற ஆசை பிறந்தது.

மேலும் சான், ஏற்கெனவே கராத்தேயில் இரண்டு பிளாக் பெல்ட் பதக்கங்கள் பெற்றவர் என்று தெரிந்ததும் என் ஆசை பலப்பட்டது கதையை உருவாக்கினேன்.கிராமத்தில் இருக்கும் நாயகன் ஒரு பாதிப்பால் தன் குடும்பத்தை இழக்கிறான். மன ஆறுதலுக்காக நகரத்தில் உள்ள தூரத்து உறவினரான தன் மாமா வீட்டிற்கு அழைத்து வரப்படுகிறான்.

அங்கு அவரது மாமா இடம் , நிலம் சம்மந்தப்பட்ட ஒரு பெரிய பிரச்சினையில் சிக்கியிருப்பதை உணர்ந்து, 

அந்தப் பிரச்சினையை தனது சண்டைத் திறமையால் தீர்த்துவைத்துவிட்டு ஊருக்குத் திரும்புகிறான். இதுதான் இந்தப் படத்தின் கதை.

கதையின் நாயகனாக சான் இருந்தாலும், எனக்கு நினைவில் இருந்ததெல்லாம் நான் நேசிக்கும் புரூஸ்லீதான்.

அவர் நடை, உடை, பாவனை.. அவர் உணர்வுகளை வெளிப்படுத்தும்விதம்.. அனைத்தையும் நான் ரசிக்கும் அளவுக்கு சானிடம் இருந்து வெளிக்கொணர்ந்திருக்கிறேன்.

குறிப்பாக சண்டை காட்சிகளில் புரூஸ்லீ வெளிப்படுத்திய ஓர் ஒழுங்குக்கு உட்பட்ட வீரத்தை இந்தப் படத்தில் கொண்டு வந்திருக்கிறேன். .

என் எண்ணத்தை முழுமையாகப் புரிந்து கொண்ட சண்டை பயிற்சியாளர் ‘த்ரில்’ சேகர் மிகச் சிறப்பாக ஐந்து சண்டைக் காட்சிகளை அமைத்துக் கொடுத்திருக்கிறார்.

சண்டை காட்சிகளை பார்க்கும்போது நிச்சயமாக உங்களது மனக்கண்ணில் புரூஸ்லீ தோன்றுவார் என்பது மட்டும் உண்மை.

புரூஸ்லீயாக ஒருவரைக் காட்டும்போது அவருடன் மோதும் வில்லன் மற்றும் சண்டை வீரர்கள் எப்படியிருக்க வேண்டும் என்பதை யோசித்து மிகவும் கவனமாக ஆட்களைத் தேர்வு செய்துள்ளோம்.அந்த வகையில் வில்லனாக சுரேஷ் நரங் என்பவர் சர்வதேச கிரிமினல் பிஸினஸ்மேனாக நடித்திருக்கிறார்.

படத்தின் கிளைமாக்ஸ் சண்டை காட்சிக்காக ஜிதேந்திர ஹூடா என்பவரை மும்பையிலிருந்து வரவழைத்து நடிக்க வைத்திருக்கிறோம்.

அனைவருமே சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.

இந்தப் படம் கண்டிப்பாக புரூஸ்லீ ரசிகர்களுக்கு பெரும் ஆக்ஷன் விருந்தாக அமையும் 

படத்தில் மூன்று பாடல்கள் இருக்கின்றன. மூன்றுமே இசை ரசிகர்களையும், சினிமா ரசிகர்களையுமே கவரும் வகையில் அருமையான இசையில் உருவாக்கப்பட்டிருக்கின்றன.

மொத்தத்தில் இந்த ‘புதிய புரூஸ்லீ’ திரைப்படம் கண்டிப்பாக புரூஸ்லீயின் ரசிகர்களுக்கு ஒரு ஆச்சரியமான ஆக்சன் விருந்தாக அமையும்…” என்றார் .

புரூஸ் ஷான் தனது பேச்சில் , ” மிக ஏழைக் குடும்பத்தில் பிறந்தவன் நான் . எனக்கு கராத்தே கற்றுக் கொள்ள ஆசை வந்த போது, எனக்கு வசதி இல்லை . மாதம் நூறு ரூபாய் ஃபீஸ் கொடுக்க முடியவில்லை. 

அப்போது  வேலை செய்து கொண்டு இருந்தேன் . பிறகு கஷ்டப்பட்டு நூறு ரூபாய் மிச்சம் பிடித்து கராத்தே கிளாஸ் போனேன் . 

அப்படி கஷ்டப்பட்டு கற்றதன் பலனாக எனக்கு இப்போது இந்தப் படம் கிடைத்துள்ளது . 

படப்பிடிப்பின் முதல் நாள் அன்று புரூஸ் லீயை வணங்கி நடிக்க ஆரம்பித்தேன்” என்றார் .

வெல்லட்டும் புதிய புரூஸ்லீ !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *