March 31, 2023

முதுமையின் அருமை- பெருமை- வலிமை சொல்லும் ‘நரை’

K7 ஸ்டுடியோஸ் சார்பில் P.கேசவன் தயாரிக்க, 

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு நன்கு பரீட்சயமான சங்கிலி முருகன், சந்தானபாரதி, “ஜூனியர்” பாலையா, நளினிகாந்த், ஞானவேல், அழகு,

விஜய்கிருஷ்ணராஜ், மகாநதி சங்கர், துரை சுதாகர்,  மற்றும் அனுப் ஆகியோருடன், 

ரோஹித் என்னும் புதுமுக நாயகனும், லீமா மற்றும் ஈடன் ஆகிய இரண்டு கதாநாயகிகளும் நடிக்க, 

அறிமுக இயக்குனர்  விவி. எழுதி இயக்கி இருக்கும் படம் ‘நரை’

இந்த படத்தின் ஒளிப்பதிவாளர் சினு சித்தார்த் சமீபத்தில் கண் சிமிட்டல் மூலம் வைரலான, 

 பிரியா வாரியர் நடித்துள்ள “ஒரு அடார் லவ்”படத்தின் ஒளிப்பதிவாளர் என்பது குறிப்பிடத்தக்கது. 

இப்படத்தின் டீசர் வெளியீட்டு விழாவில்  படக்குழுவினருடன்,சிறப்பு விருந்தினர்களாக ‘அம்மா கிரியேசன்ஸ்’ சிவா, 

மற்றும் தயாரிப்பாளரும், நடிகருமான ஆர் கே சுரேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.  நிகழ்ச்சியில் திரையிடப்பட்ட முன்னோட்டம் ஈர்ப்பாக இருந்தது . பாடல்கள் இனிமையாக இருந்தன. 

நிகழ்ச்சியில் பேசிய இயக்குனர் வி வி “வெவ்வேறு காரணங்களுக்காக குடும்பத்தினரால் ஒதுக்கப்பட்ட ஏழு முதியவர்கள், ஆதரவற்றோர் இல்லத்தில் வாழ்ந்து வருகிறார்கள்.

அங்கே, மகிழ்ச்சியாக கழிந்து கொண்டிருக்கும் இவர்களது வாழ்க்கையை ஒரு அதிர்ச்சியான சம்பவம் தலைகீழாக மாற்றிப் போடுகிறது.

அந்த சம்பவத்திற்கும், முதியவர்களுக்கும் என்ன தொடர்பு?

அந்த சம்பவம் யாரால் நிகழ்த்தப்படுகிறது?

அவர்களை இந்த முதியவர்கள் என்ன செய்தார்கள்? என்பதுதான் படத்தின் கதை. 

வழக்கமாக இளம் கதாநயகர்கள் வில்லன்களிடம் மோதுவதையே பார்த்துப் பழகிப்போன தமிழ் ரசிகர்களுக்கு,

வயதான முதியவர்கள் வில்லன்களிடம் மோதுவது நிச்சயம் புதுமையான அனுபவமாக இருக்கும்.

அதே சமயத்தில் நெஞ்சை நெகிழ வைக்கும் உருக்கமான காட்சிகளுடன் இத்திரைப்படம் உருவாகியுள்ளது.” என்றார் 

ஆர்.கே.சுரேஷ் தனது பேச்சில்,   “நான் தயாரிப்பாளராக சினிமாவிற்கு அறிமுகமாகி 7 வருடங்கள் ஆகியிருக்கிறது.

அன்று நான் தயாரித்த ‘6 மெழுகுவர்த்திகள்’ ஜெயிக்காமல் போயிருந்தால் நான் இங்கிருந்திருப்பேனா? என்பது சந்தேகம் தான்.

எனது பெரியப்பா ‘சங்கிலி முருகன்’ இப்படத்தில் நடித்திருக்கிறார். அதுவே இப்படத்தின் வெற்றியை உறுதி செய்திருக்கிறது.

இப்போதிருக்கிற சூழலில் சிறிய பட்ஜெட் படங்களை எடுத்து வெளியிடுவது என்பது சாதாரணமானது இல்லை.அந்த வகையில் இப்படி ஒரு வித்தியாசமான படத்தை துணிந்து தயாரித்திருக்கிற தயாரிப்பாளர்களுக்கு எனது வாழ்த்துகள்.

“நரை” திரைப்படம் ஜெயிக்க வேண்டும், இயக்குநர் விவி-க்கு எனது வாழ்த்துகள்” என்றார் . 

‘சங்கிலி’முருகன் பேசிய போது, “அந்தக் காலத்தில் திரைப்படம் பார்க்கப் போவதெல்லாம் திருவிழாவிற்குப் போவது மாதிரி. இப்போது எல்லாம் அப்படியே மாறிப் போயிருக்கிறது.

பல படங்கள் ரசிகனுக்குப் புரிவதே இல்லை. சமீபத்தில் கூட ஒரு படம் வந்தது, ரசிகனை இருட்டு அறையில் குருட்டு குத்து குத்திக் கொண்டிருக்கிறார்கள்.அப்படி இருக்கும் காலகட்டத்தில் “நரை” போன்ற படம் வருவது நல்ல விசயம் தான். இயக்குநர் விவி நிச்சயம் பெரிய இயக்குநராக வருவார்.

அவர் கதை சொல்லும் போதே, அவ்வளவு அருமையாக நடித்துக் காட்டுவார். ஒரு வேளை நாமும் இப்படித்தான் நடிக்க வேண்டுமோ? என்று குழம்பியிருக்கிறேன் நிறைய முறை.இவர்கள் பயன்படுத்திய ஒளிப்பதிவு டெக்னிக். நிறைய செலவு இல்லாமல், மிகக் குறைந்த பொருட்செலவில் அவர்கள் செய்த லைட்டிங் அவ்வளவு பிரமிப்பை ஏற்படுத்தியது.

ஒளிப்பதிவாளர் சினு சித்தார்த்திற்கும் இயக்குநர் விவிக்கும் தயாரிப்பாளர்களுக்கும் எனது வாழ்த்துகள். “நரை” சந்தேகமேயின்றி வெற்றி  பெறும்” என்று பேசினார்

சிறப்பு விருந்தினராக வந்திருந்த ‘அம்மா கிரியேசன்ஸ்’சிவா  தன் பேச்சில் ,“எல்லோரும் பேசும்போது ஒளிப்பதிவாளர் சினு சித்தார்த் பயன்படுத்திய லைட்டிங் டெக்னிக்கைப் பற்றி பாராட்டி சொன்னார்கள்.

அது போல புதுமையான, சிக்கனமான முயற்சிகள் தான் தற்போதைய தமிழ் சினிமாவிற்குத் தேவை.

இப்போது நான் தயாரித்துக் கொண்டிருக்கும் படத்தின் இயக்குநர் ‘மூடர் கூடம்’ நவீனும் கூட, 

 இப்படியான நிறைய புதுமையான விசயங்களால் செலவுகளைக் குறைக்க முடியும் என சொல்லி இருக்கிறார். அது தான் ஒரு தயாரிப்பாளரை காப்பாற்றும்.ரசிகர்கள் தமிழ் சினிமாவிற்கு பெருமையைத் தரும் வகையிலான படங்களை மட்டும் ஏற்றுக்கொண்டு,

சிறுமைப்படுத்தும் படங்களை விமர்சனத்திற்கு கூட எடுத்துக்கொள்ளாமல் புறக்கணிக்க வேண்டும்.

நல்ல கதையம்சத்துடன் வந்து வெற்றி பெற்ற தீரன், அறம், அருவி போன்ற தரமான படங்களின் வரிசையில் நரையும் இடம்பெறும் என நம்புகிறேன்.

படக்குழுவினருக்கு என் வாழ்த்துகள்,” என்று பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *