March 21, 2023

முன்னாள் இந்தியப் பிரதமர் வாஜ்பாய் 16/8/2018இன்று காலமானார்

புதுடில்லி, முன்னாள் இந்தியப் பிரதமர் வாஜ்பாய் இன்று தம்முடைய 93-வது வயதில் காலமானார்.

கடந்த 24 மணி நேரமாக மோசமான நிலையில் கவலைக்கிடமாக இருந்த அவர் இந்திய நேரப்படி இன்று மாலை மணி 5.05-க்கு உயிர் நீத்தார்.

இந்தியாவின் மூத்த தலைவர்களில் ஒருவரான வாஜ்பாயின் துயரச் செய்தியை அறித்து பாஜக தலைவர்கள் பலரும் மருத்துவமனையில் திரண்டனர்.

மூட்டுவலி பிரச்சனையினால் அவதிப்பட்டு வந்த வாஜ்பாய்க்கு கடந்த இருபது ஆண்டுகளில் 10 முறை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. பக்கவாதத்தினால் பாதிக்கப்பட்ட அவரால் சரிவர பேசமுடியாமல் போனதும் தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கினார். 94 வயதாகும் வாஜ்பாய்க்கு வயது மூப்பின் காரணமாக கடந்த சில மாதங்களாக உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டது. நிமோனியா தாக்கம் காரணமாக வாஜ்பாயின் இரண்டு நுரையீரல்களும் பலவீனமானது. சிறுநீரகங்களும் பலவீனமாக இருந்ததால் அவரது உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருந்தது. இன்று வாஜ்பாய் உடல்நிலை மிகவும் மோசமடைந்தது. உயிர் காக்கும் கருவிகள் உதவியுடன் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனாலும் சிகிச்சை பலனின்றி இன்று காலமானார்.

அடல் பிஹாரி வாஜ்பாய் இந்தியாவின் 10வது பிரதமர் ஆவார்.

வாஜ்பாய் முதன்முறையாக 1996ல் மே 16ம் தேதி பிரதமராக பதவியேற்றபோது அவரது பதவிக்காலம் மே 28ம் தேதி வரையில் 13 நாட்கள் மட்டுமே நீடித்தது. இதையடுத்து 1998ல் இரண்டாவது முறையாக பதவியேற்ற வாஜ்பாய், 13 மாதங்கள் மட்டுமே பிரதமராக இருந்தார். இதன் பின்னர் மூன்றாவது முறையாக 1999ல் அக்டோபர் 13ம் தேதி பிரதமராக ஆனார்.

பல்வேறு அரசியல் கட்சிகளை இணைத்து தேசிய ஜனநாயக கூட்டணி அமைத்து வெற்றி பெற்ற அந்த முறைதான் பதவிக்காலம் முழுமையையும் பூர்த்தி செய்தார்.
50 வருட பாராளுமன்ற உறுப்பினரான இவர் மக்களவைக்கு 9 முறையும் மாநிலங்களவைக்கு 2 முறையும் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். 1997ல் மொரார்ஜி தேசாய் அமைச்சரவையில் வெளியுறவுத் துறை அமைச்சராகவும் இவர் அங்கம் வகித்தார்.

மத்திய பிரதேச மாநிலம் குவாலியரில் 25.12.1924ல் நடுத்தரக்குடும்பத்தில் பிறந்தார் வாஜ்பாய். பாரதீய ஜனதா கட்சியைச் சேர்ந்த வாஜ்பாய் திருமணம் செய்து கொள்ளாதவர்.

அரசியல்வாதி தவிர ஒன்னொரு முகமும் உண்டு வாஜ்பாய்க்கு. அவர் கவிஞரும் கூட. பல கவிதை தொகுப்புகளை தந்துள்ளார். 1992ல் இவருக்கு பத்மவிபூஷன் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.

2015ல் நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *