பாக்ஸ் ஆபிஸ் வசூல் கணக்கு மற்றும் விமர்சகர்களின் தரவரிசைகளுக்கும்  அப்பால் உள்ள மிகப்பெரிய வெற்றி என்பது மிகப்பெரிய மனிதர்களின் மனதிலிருந்து வரும் பாராட்டுகள் தான். பிரபுதேவாவின் லக்‌ஷ்மி படத்தின் மொத்த குழுவும், இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் பாராட்டு மழையில் நனைந்து இன்ப அதிர்ச்சி அடைந்திருக்கிறது. இது வெறும் ஒரு வாய்மொழி குறிப்பு இல்லை. சென்னை பிரிவியூ திரையரங்கில் பாரதிராஜா ‘லக்ஷ்மி’ திரைப்படத்தை பார்த்து கண்ணீர் விட்டு மகிழ்ந்தபோது மொத்த குழுவும் உணர்ச்சிவயப்பட்டு இருந்தது.
 
படத்தின் கடைசி டைட்டில் கிரெடிட்ஸ் முடிவடையும் முன்பே எழுந்து நின்று, இயக்குனர் விஜய் மற்றும் பேபி தித்யா பாண்டே தோள்களை தட்டி கொடுத்து ஆச்சரியப்பட்டார். “நீங்கள் இந்தியாவின் பெருமை” என்று கூறியதோடு, இந்த படத்தில் நடித்த அத்தனை குழந்தைகளையும் பாராட்டினார். “இந்த குழந்தைகள் வேறும் நடனத்தில் மட்டுமல்லாமல், அவர்களது ஆழ்ந்த நடிப்பாலும் அபாரமான திறமை உடையவர்கள் என்று நிரூபித்திருக்கிறார்கள். சின்ன சின்ன முக பாவனைகளில் கூட நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்” என்றார்.
 
இயக்குனர் விஜய் மற்றும் பேபி தித்யா ஆகிய இருவருக்கும் பொன்னாடை போர்த்தி கௌரவித்தார் இயக்குனர் இமயம் பாரதிராஜா. பின்னர் தொலைபேசி அழைப்பில் பிரபுதேவாவிடம் பேசிய அவர் மேலும் உணர்ச்சிபூர்வமாக பேசினார்.  “வார்த்தைகளை கோர்த்து எவ்வாறு உங்களை பாராட்டுவது என்பது எனக்குத் தெரியவில்லை, நீ இந்தியாவின் பொக்கிஷம்” என்றார்.
 
நேற்று (ஆகஸ்ட் 24) உலகம் முழுவதும் வெளியாகிய லக்‌ஷ்மி பார்வையாளர்களிடமிருந்தும் விமர்சகர்களிடமிருந்தும் நல்ல வரவேற்பைப் பெற்றது. ட்ரைடெண்ட் ஆர்ட்ஸ் ரவீந்திரன் உடன் இணைந்து ப்ரதீக் சக்ரவர்த்தி மற்றும் ஸ்ருதி நல்லப்பா ஆகியோர் ப்ரமோத் பிலிம்ஸ் சார்பில் இந்த படத்தை தயாரித்திருக்கிறார்கள். விஜய் எழுதி இயக்கியிருக்கும் இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், சல்மான் யூசுப் கான், ஆர்.ஜே. பாலாஜி மற்றும் கோவை சரளா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சாம் சிஎஸ் (இசை) மற்றும் நிரவ் ஷா (ஒளிப்பதிவு) ஆகியோர் படத்தின் மிகவும் வலுவான தூண்கள்.