காவேரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானத்தை தமிழக எம்.பி க்கள் ஆதரிக்க வேண்டும்! – லோக் ஆயுக்தா நீதிமன்றத்தை தமிழக அரசு உடனே அமைக்க வேண்டும்: எஸ்.டி.பி.ஐ கட்சி கோரிக்கை!
எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைமையகத்தில் நடைப்பெற்ற பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம். தெஹ்லான் பாகவி பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். இந்த சந்திப்பின் போது எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில பொதுச்செயலாளர் நிஜாம் முகைதீன், மாநில துணைத்தலைவர் அம்ஜத் பாஷா, மாநில செயலாளர்கள் அச.உமர் ஃபாரூக், மாநில செயற்குழு உறுப்பினர் ஏ.கே.கரீம் ஆகியோர் உடனிருந்தனர்.
பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம்.தெஹ்லான் பாகவி கூறியதாவது:-
1. காவேரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானத்தை தமிழக எம்.பி க்கள் ஆதரிக்க வேண்டும்:
காவேரி மேலாண்மை வாரியம் அமைக்கவேண்டும் என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பின் கெடு முடிய இன்னும் சில நாட்களே எஞ்சி இருக்கக் கூடிய இந்த நிலையில், காவேரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கான எந்த உறுதியான நடவடிக்கையினையும் மத்திய அரசு எடுக்காதது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
ஆனால் மார்ச் 31 தேதிக்கு முன்னால் காவேரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும் என்று தமிழக பாஜக தலைவர்கள் பேசி வருவது என்பது தமிழக மக்களை ஏமாற்றும் செயலாகும்.
தொடர்ந்து காவேரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும் என்று பேசுகிற தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்தராஜன் அவர்களுக்கு நாங்கள் கேட்டுக்கொள்வது, ஒருவேளை காவேரி மேலாண்மை வாரியம் உச்சநீதிமன்றத்தின் கெடு காலத்திற்குள் அமைக்கப்படவில்லை என்று சொன்னால் தங்களது பதவியினை ராஜிநாமா செய்து அரசியலில் இருந்து முற்றும் விலகுவதற்கு தயாராக இருக்கிறாரா? என்று சவாலாக நாங்கள் கேள்வி எழுப்புகிறோம்.
இதுவரை மத்திய அமைச்சர்களோ மத்திய அரசின் எந்த பிரதி நிதிகளோ காவிரி மேளாண்மை வாரியத்தை அமைப்போம் என்பதே பகிரங்கமாக சொல்லவில்லை மாறாக உச்ச நீதி மன்ற கெடுவிற்குள் அமைக்க முடியாது என்றே சொல்லி வருகின்றனர். எனவே தமிழிசை பச்சை பொய்யை தான் சொல்லி வருகிறார்.
இந்த விவகாரத்தில் தமிழக அரசினுடைய செயல்பாடுகள் ஏற்றுக்கொள்ளும் படியாக இல்லை. காவிரி மேலாண்மை வாரியத்தை அமைப்பதை உறுதி செய்யும் எத்தகையை நடவடிக்கைகளையும் எடுக்காமல், காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு இன்னும் நாட்கள் இருக்கின்றது என்று ஒருபுறம் பேசிவிட்டு, அதேநேரத்தில் மறுபுறம் நாடாளுமன்றத்தை முடக்கக் கூடிய விதத்தில் அங்கே போராட்டங்களை நடத்துவது என்பது தமிழக அரசினுடைய இரட்டை நடவடிக்கையாகவே அதைப் பார்க்கிறோம்.
அதிமுகவின் இந்த நாடாளுமன்ற முடக்க நடவடிக்கை என்பது பாரதிய ஜனதாவிற்கு ஆதரவாகவும், அரசின் மீது கொண்டு வந்திருக்கின்ற நம்பிக்கை இல்லா தீர்மானத்தை திசை திருப்பவுமே என்ற இந்தியாவில் உள்ள பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் முன்வைக்கும் குற்றச்சாட்டு ஏற்றுக்கொள்ளும்படியாக இருக்கிறது. எனவே தமிழக அரசு பாரதிய ஜனதாவுக்கு ஆதரவான போக்கை கைவிட வேண்டும். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க நடவடிக்கை எடுக்காத மத்திய அரசுக்கு எதிராக, நம்பிக்கை இல்லா தீர்மானத்தை நிறைவேற்றுவதற்கு ஆதரவை தந்து மத்திய அரசுக்கு இந்த விவகாரத்தில் நெருக்கடியை ஏற்படுத்த வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம்.
2. லோக் ஆயுக்தா நீதிமன்றத்தை தமிழக அரசு உடனே அமைக்க வேண்டும்:
லோக்பால் சட்டம் அமைக்கப்பட்டு 4 ஆண்டுகள் கடந்த பிறகும் தமிழகத்தில் லோக் ஆயுக்தா அமைக்கப்படாதது கண்டிக்கத்தக்கது. தற்போது உச்ச நீதி மன்றம் இது பற்றி கேள்வி எழுப்பியுள்ளது. மடியில் கனமில்லை எனில் வழியில் ஏன் பயம்? எனவே உடனடியாக லோக் ஆயுக்தா நீதி மன்றத்தை தமிழகத்தில் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எஸ்.டி.பி.ஐ கட்சி 2014 ல் தமிழகம் தழிவிய போராட்டத்தை நடத்தியது. சட்டமன்ற முற்றுக்கை போராட்டத்தையும் நடத்தினோம். உடனே தமிழக அரசு லோக் ஆயுக்தாவை அமைக்கவில்லை எனில் எஸ்.டி.பி.ஐ கட்சி தமிழகம் தழுவிய போராட்டத்தை அறிவிக்கும்.
3. விதிமுறைகளை மீறி சட்டத்திற்கு புறம்பாக ராமராஜிய ரத யாத்திரை நடத்தியவர்கள் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும்:
தமிழ்நாட்டின் அமைதியை சீர்குலைக்கும் வி.ஹெச்.பி.யின் ராம ராஜிய ரத யாத்திரையை அனுமதிக்கக் கூடாது என்று பல்வேறு அமைப்புகள், கட்சிகள், இயக்கங்கள் மற்றும் மதச்சார்பற்ற சக்திகளும் ஒன்று சேர்ந்து போராட்டத்தை அறிவித்திருந்தார்கள். ஆனால் காவல்துறை ரதயாத்திரை நடத்தக் கூடியவர்களைத் தடுத்து நிறுத்தி தமிழகத்தின் சட்டம் ஒழுங்கை, அமைதியை பாதுகாப்பதற்குப் பதிலாக ரதயாத்திரையை அனுமதித்துவிட்டு, போராட்டம் நடத்தியவர்கள் மீது கடுமையான நெருக்கடியைத் தமிழக காவல்துறை பிரயோகித்திருக்கிறது. தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தியவர்கள் மீது வழக்குகள் பதியப்பட்டு இருக்கின்றது. வாகனங்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன.
அதேவேளையில் ரத யாத்திரை வாகனத்தின் பதிவு எண் (நம்பர் பிளேட்) முற்றிலுமாக மறைக்கப்பட்டு அந்த வாகனம் மோட்டார் வாகனச் சட்டத்திற்கு புறம்பாக வடிவமைக்கப்பட்டு அந்த ரதயாத்திரை நடந்த நிலையில், காவல் துறை அந்த வாகனத்தைப் பறிமுதல் செய்து இருக்க வேண்டும். ஆனால் சட்டப்படி அவ்வாறு நடக்காமல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் வாகனங்கள் மீது வழக்குப் பதிவு செய்து வாகனத்தைக் கைப்பற்றுவது, போராடியவர்கள் மீது கடுமையான வழக்குப் பதிவு செய்வது எனத் தமிழக காவல்துறையின் ஒருதலைப்பட்ச போக்கு தொடர்ந்து கொண்டிருக்கிறது. காவல்துறையின் இந்த அராஜக நடவடிக்கையை எஸ்.டி.பி.ஐ கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.
ரத யாத்திரைக்கு எதிராக போராடியவர்கள் மீது பதியப்பட்டிருக்கின்ற வழக்குகளை உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என்று தமிழக காவல் துறையை வலியுறுத்துவதோடு, மோட்டார் வாகன சட்டத்திற்குப் புறம்பாக வடிவமைக்கப்பட்டு, விதிமுறைகளை மீறி பயணித்த ரதயாத்திரை வாகனத்தின் மீதும், உடந்தையாக இருந்தவர்கள் மீதும் உடனடியாக வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.
4. மாநில நிர்வாகம் மற்றும் சட்டம்-ஒழுங்கு நடவடிக்கைகளில் தலையிடும் ஆளுநர் – தமிழக அரசு அனுமதிக்கக் கூடாது:
அம்பேத்கர் சட்ட பல்கலைக் கழக துணை வேந்தர் பதவிக்காக நியமிக்கப்பட்ட ஜெகதீசன் கமிஷன் பரிந்துரைத்த தமிழக பேராசிரியர்களை எல்லாம் புறக்கணித்து விட்டு, அந்த கமிஷன் பரிந்துரைக்காத ஆர்.எஸ்.எஸ். அனுதாபியான சூரிய நாராயண சாஸ்திரி என்பவரை சட்டப் பல்கலைக் கழக துணை வேந்தராக ஆளுநர் நியமித்து ஆணை பிறப்பித்து இருப்பது ஏற்கத்தக்கது அல்ல. இது முற்றிலும் ஆளுநர் மத்திய அரசினுடைய கைப்பாவையாக, ஆர்.எஸ்.எஸ் கைப்பாவையாக செயல்பட்டு கொண்டிருக்கிறார் என்பதையே நிருபிக்கிறது.
தமிழக அரசு தொடர்ந்து ஆளுநருடைய சட்ட விரோத போக்கை வேடிக்கை பார்ப்பது என்பது ஏற்றுக்கொள்ள இயலாது. ஆளுநருடைய இந்த விதிமீறல் நடவடிக்கைக்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்து, ஜெகதீசன் கமிஷன் பரிந்துரைத்த நபர்களில் ஒருவரை சட்டப் பல்கலைக் கழக துணைவேந்தராக நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் கேட்டுக்கொள்கிறோம்.
தமிழ்நாட்டினுடைய நிர்வாகத்தில் ஆளுநர் தொடர்ந்து தனது வரம்பை மீறி அவர் செயல்படுகிறார் என்பதை பல்வேறு நிகழ்வுகள் நிரூபித்துக்கொண்டு இருக்கிறன. கடந்த சில மாதங்களுக்கு முன்பு கோவையில் அவர் ஆய்வு செய்வதற்காக சென்ற போது அங்கு இருக்கிற அதிகாரிகளை அவர் அழைத்துப் பேசிய மறுநாளே சி.பி.சி.ஐ.டி. விசாரணையில் இருந்த கோவை சசிகுமார் வழக்கு என்.ஐ.ஏ.வுக்கு மாற்றப்பட்டுள்ளது என்பதை இந்நேரத்தில் நாங்கள் கவனத்திற்கு கொண்டுவர விரும்புகிறோம்.
இவ்வழக்கில் சி.பி.சி.ஐ.டி போலீசார் சிலரை கைது செய்து அந்த வழக்கு என்பது ஹக்கீம் என்ற நபரின் கொலைக்கு பகரமாக நடந்த கொலை என்று தங்களது விசாரணையை கொண்டு சென்ற நிலையில், ஆளுநர் தலையிட்டு பயங்கரவாத வழக்குகளை விசாரிக்கக் கூடிய என்.ஐ.ஏ விடம் வழக்கை மாற்றி இருப்பது என்பது ஏற்றுக்கொள்ள முடியாதது.
பயங்கரவாதா வழக்குகளை விசாரிக்கும் எம்.ஐ.ஏ வசம் சசிகுமார் கொலை வழக்கு ஒப்படைக்கப்பட்டிருப்பது ஒரு உள்நோக்க நடவடிக்கையே.
தமிழ்நாட்டினுடைய சட்டம் ஒழுங்கு பிரச்சனையில், நிர்வாக பிரச்சனையில் ஆளுநருடைய தலையீட்டையே இதுபோன்ற நடவடிக்கைகள் காட்டுகின்றன. எனவே தமிழக அரசு தலையிட்டு, என்.ஐ.ஏ.வின் விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்று நான் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.
5. போலியான தாக்குதல்கள் மூலம் வன்முறை அரசியலை முன்னெடுக்கும் பாஜக தலைவர்கள் – தமிழக அரசு சிறப்பு விசாரணைக் குழுவை அமைக்க வேண்டும்:
தமிழ்நாட்டில் தொடர்ந்து வன்முறை அரசியலை முன்னெடுப்பதற்கு தமிழக பாரதிய ஜனதா தலைவர்கள் முயன்று வருகிறார்கள். அவ்வப்போது ஆங்காங்கே பாரதிய ஜனதாவினுடைய தலைவர்களின் வீடுகள் தாக்கப்படுவதும் வெடிகுண்டுகள் வீசப்படுவதும் தொடர்ந்து நிகழ்ந்து வருவதும், உடனடியாக எவ்வித விசாரணையுமின்றி பிற இயக்கங்கள் மீதும், முஸ்லிம் அமைப்புகள் மீதும் குற்றச்சாட்டுகள் கூறுவதும், பிறகு புலன் விசாரணையில் அது அவர்களாலேயே அரசியல் விளம்பரத்திற்காகவும், வன்முறையை தூண்டுவதற்காகவும் நடத்தப்பட்டவை என்கிற செய்தி வெளியாவதும் வாடிக்கையாக இருந்து வருகிறது.
இந்நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்பு கோவை மாவட்ட பாரதிய ஜனதாவினுடைய தலைவர் வீட்டில் வெடிகுண்டு வீசப்பட்டது. உடனடியாக தமிழக பாரதிய ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன் அவர்கள் உடனடியாக கோவைக்கு சென்று அங்கு ஒருவிதமான பதற்றத்தை ஏற்படுத்த முயற்சி செய்தார். ஆனால் இப்போது புலன் விசாரணையில் அது அவர் தனக்கு தானே வீசிய வெடிகுண்டு என்ற தகவல் வெளிவந்து இருக்கின்றது.
எனவே இப்படிப்பட்ட வன்முறையில் பாரதிய ஜனதா தலைவர்கள் ஈடுபடுவதற்கு அதன் பின்னணியில் பாரதிய ஜனதாவின் தலைமையும், ஆர்.எஸ்.எஸ். அமைப்பும் திட்டமிட்டு செயல்படுகின்றனவா என்பதை விசாரிப்பதற்காக ஒரு விசாரணைக் குழுவினை உடனடியாக தமிழக அரசு அமைத்திட வேண்டும் என்று நான் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.
இது மட்டுமின்றி நேற்று தமிழிசை சவுந்தர்ராஜன் பா.ஜ.க வினர் தாக்கப்பட்டால் அவர்களின் கை இருக்காது என்று பேசியுள்ளார். தமிழ்நாட்டில் வன்முறையை தூண்டுபவர் யார் என்பது தெளிவாகிறது. எச்.ராஜாவை விட தமிழிசை ஒருபடி மேல் சென்றுள்ளார். ராம ராஜிய ரத யாத்திரையை முகநூலில் விமர்சித்த அருப்புகோட்டையை சேர்ந்த நபர் கைது செய்யப்பட்டிருக்கிறார். ஆனால் வன்முறையை தூண்டும் விதமாக பேசி வருகின்ற எச்.ராஜா, தமிழிசை போன்றவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை. இப்படி வன்முறையை தூண்டுவோர் மீது ஏன் நடவடிக்கை எடுப்பதில்லை என்ற கேள்விக்கு காவல்துறை பதிலளிக்க வேண்டும்.