சு.கணேஷ்குமார் எழுதிய வடகிறுக்குப் பருவமழை கவிதைத் தொகுப்பை அவ்வளவு எளிதாக கடந்துபோய்விட முடியாது.
வாழ்க்கையின் இனிய தருணங்களை பதிவு செய்யும் பொருட்டோ, இல்லாத அனுபவத்தைச் சுவைக்க வைக்கும் பொருட்டோ அவற்றுக்குள் முதலை போல் நம்மை இழுத்துச் சென்றுவிடுகிறார்.
வடகிறுக்குப் பருவமழைக் காலத்தில் உதடுகளின் உஷ்ணத்தைக் குறைக்க முடியுமா என்ன? “நில்-கவனி-சட்டென முத்தமிடு, மருத்துவ முத்த ஆராய்ச்சி, உணவில் அசைவமும் உணர்வில் சைவமும் பிடிக்காதெனக்கு, உன் அக்கவுண்டில் நிறைய கடன் சேர்கிறது; ஜாக்கிரதை நான் பத்து முத்தம் தந்தால் நீ ஒன்றிரண்டோடு முடித்துக் கொள்கிறாய்’ என முத்தங்களுக்குக் குறைவில்லாமல் மொத்த மழையிலும் முத்தத் துளிகள் ஏராளம்.
வார்த்தைப் பிழைகளுடன் எழுதுபவர்களுக்கு மத்தியில் `மனம்குளிர் நன்றிகள்` போன்ற வார்த்தைப் பிள்ளைகளைப் பெற்றுப் போட்டிருக்கிறார். அவற்றில் பல வடகிறுக்குப் பருவமழை தொகுதியிலும் மையம் கொண்டுள்ளன.
“வடகிறுக்குப் பருவமழை, (உன்னைக்) காணும் பொங்கல், வெல்ல நிவாரணம், வாய்`மை`யே கொல்லும், (உன் பாதம் நனைக்க) `அலை` பாய்ந்த கடல், ஆன்லைன் – உன்லைன், இதழியல், விதைப்பந்துகள்” என்று புதிய வார்த்தைகள் பொழிகின்றன.
கவிதைக்காரனின் கருவறை கவிதை. “செடிகள் எழுதிய அழகுக் கவிதை பூக்கள் பூக்களாலேயே எழுதப்பட்ட அழகுக் கவிதை நீ, சேர்ந்து நனைவோம் கவிதை எழுதி நாளாயிற்று” என வடகிறுக்குப் பருவமழைத் துளிகளைக் கோர்த்து கவிதைக்கு மாலை சூட்டுகிறார் கவிஞர் கணேஷ்குமார்.
மாலைநேரத்து மழைக்கு பதில் மழைநேரத்து மாலை, கசடதபற வல்லினம் உன் பெயர் எனக்கு மெல்லினம் என்று இலக்கியச் சுவையூறும் தூறல்கள் வடகிறுக்குப் பருவமழையில்!
பனித்துளிகளும், பூக்களும், கோலங்களும் கொஞ்சி விளையாடும் இம்மழைத் தொகுப்பில் மழை எப்படி இருக்கிறது?
“வடகிறுக்குப் பருவமழை, கன்னக்குழி நிரப்பாமல் நனைக்கும் மழை, அடர்மேக வானம் தயாராகும் மழை, துப்பட்டாவுக்குள் இழுத்தாலும் மனதை நனைக்கும் மழை, மனசுக்குள் பொழியும் மழை, கையிலேந்தினால் சிலிர்க்க வைக்கும் மழை, கோடை மழை, சூடான காபியும் முறுகலான ரவா தோசையும் அனுபவிக்கத் தேவையான மழை, கூந்தல்விழுந்து அமிர்தமாகும் மழை, மச்சம் கரைக்கும் மழை” என்று எத்தனை வகையாய் பொழிகிறது வடகிறுக்குப் பருவமழை.!
இதய அலைபேசியில் சிம்கர்டாய் நீ, மற்றும் மார்க், பேஸ்புக், லைக்ஸ், வாட்சாப், ஆன்லைன் என டெக்னாலஜியிலும் காதல் மழை கலக்குகிறது. “செல்போன் டவரில் பூ பூக்கிறதா என பார்க்க வேண்டும்’’ என்பது உச்சகட்டம்.
ஆதார் கார்டு, பத்ம விருது, ஏ சான்றிதழ், தேசிய ஜோடி என்று மத்திய அரசை வம்பிழுத்தவர், “சட்டப்பேரவையின் முதல்வர் உரையாய் உன் பேச்சு ஆளுங்கட்சி எம்.எல்.ஏக்களின் மேஜைத் தட்டலாய் மனசு முழுக்க ஆரவாரம்” என்று எழுதி அரசியல் வியூகங்களும் அபாரத்தைக் காட்டியுள்ளார்.
எளிய நடை, தேர்ந்த மொழி, யாவருக்கும் நெருக்கமான தருணங்கள், சுவையான வாசிப்பனுபவம் தரும் இளம் சிந்தனைகள் எல்லாமேதான் கணேஷ்குமாரின் அம்சங்கள்.
அவ்வத்தனை அம்சங்களும் `நிறைய`ப் பெற்ற கவிதைத் தொகுப்பு வடகிறுக்குப் பருவமழை. கவிஓவியா வெளியீட்டில் வந்துள்ள மனம் விரும்பும் படைப்புத் தொகுப்பாக இருக்கும் வடகிறுக்குப் பருவமழையை வாசித்து முடித்த பின்பு, கையில் காபியோடு சாரல் பொழியும் சன்னலோரம் அமர்ந்திருக்கும் அந்த அழகிய அனுபவம் நம்மைத் தொற்றிக்கொள்கிறது!