ஒரு படம் ‘மாஸ்டர் பீஸ்’, ‘ஆர்ட் ஃபிலிம்’ அல்லது ‘பிலிம் ஃபெஸ்டிவல் திரைப்படம்’ என்று மட்டுமே சொல்லப்பட்ட காலங்கள் வழக்கொழிந்து போய்விட்டன.
சமகால பார்வையாளர்கள் ‘ஆண் தேவதை’ போன்ற யதார்த்தமான திரைப்படங்களை திறந்த மனதுடன் வரவேற்கிறார்கள். இந்த படத்தின் ப்ரோமோ வீடியோக்களே பெரும் பாராட்டுக்களை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
சமுத்திரக்கனி, ரம்யா பாண்டியன் முக்கிய வேடங்களில் நடித்திருக்கும் இந்தப் படத்தில், மேலும் சில முக்கிய நடிகர், நடிகைகளும் நடித்துள்ளனர். உணர்வுப்பூர்வமான இசையை வழங்குவதில் பிரபலமான இசையமைப்பாளர் ஜிப்ரான், இந்தப் படத்துக்கு இசையமைத்திருக்கிறார். இயக்குநர் மற்றும் ஒளிப்பதிவாளரான விஜய் மில்டன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.
இப்போது ‘ஆண் தேவதை’ படத்தின் தமிழ்நாடு திரையரங்க உரிமையை புகழ் பெற்ற நிறுவனம் ஒன்று கைப்பற்றியிருப்பது கூடுதல் மகிழ்ச்சி ஏற்படுத்தியிருக்கிறது.
“வழக்கமான கமர்சியல் விஷயங்கள் இன்றி நல்ல தரமான திரைப்படங்களை தயாரிப்பது அல்லது வெளியிடுவது என்பது வெறும் சுய திருப்திக்காக செய்த காலங்கள் உண்டு.
ஆனால், தற்போது காலம் மாறி விட்டது. ரசிகர்கள் இந்த மாதிரி படங்களுக்கு வரவேற்பு கொடுப்பதோடு, பாக்ஸ் ஆபிஸிலும் வெற்றி பெறச் செய்கிறார்கள்” என்கிறார் “ஆண் தேவதை” தமிழ்நாடு உரிமையை வாங்கியுள்ள New RSM ஃபிலிம் புரொடக்ஷன்ஸ் எம். மாரிமுத்து.
அவர் மேலும் கூறும்போது, “ஒரு இயக்குநராக, தயாரிப்பாளராக, அல்லது நல்ல சமூக கருத்துக்களை பேசும் படங்களில் பங்கு பெறுவது என சமுத்திரக்கனியின் முயற்சிகளை பார்த்து எப்போதும் வியப்புடன் இருக்கிறேன். ஒவ்வொரு படத்திலும் அவர் வெளிப்படுத்தும் ‘நல்ல குடும்பத்தின் வெளிப்பாடுதான் நல்ல சமூகம்’ என்ற அவருடைய குறிக்கோளை நான் பாராட்டுகிறேன்.
வருங்கால தலைமுறை எவ்வாறு வளர வேண்டும் என அவர் வெளிப்படுத்தும் விஷயங்கள்தான் இன்றைய முக்கிய தேவை. ‘ஆண் தேவதை’ படத்தில் இயக்குநர் தாமிரா உருவாக்கிய நல்ல கருத்து, சமுத்திரக்கனியின் சிறப்பான நடிப்பால் கொண்டு சேர்க்கப்படும் என நான் உறுதியாக நம்புகிறேன்…” என்றார்.
மேலும் அவர் சிகரம் சினிமாஸ், தயாரிப்பாளர் பக்ருதீனை முழு மனதுடன் பாராட்டுகிறார். “புகழ் பெற்ற இயக்குநரான கே.பாலசந்தர் சாரின் உருவப் படத்துடன் உள்ள ‘சிகரம்’ ஸ்டுடியோ, வலுவான ஒரு திரைப்படத்தை உருவாக்குவதைவிட மிகச் சிறந்த மரியாதையை அவருக்கு தர முடியாது…” என முடிக்கிறார் மாரிமுத்து.
சென்னை நகர உரிமையை SPI சினிமாஸ் நிறுவனம் கைப்பற்றியிருக்கிறது. படத்தின் அதிகாரப்பூர்வ வெளியீட்டு தேதி மிக விரைவில் அறிவிக்கப்படும்.