November 30, 2023

விஜய்யின் ‘சர்கார்’ படத்தின் முழுக் கதையும் வெளியானது..!

விஜய்யின் ‘சர்கார்’ படத்தின் முழுக் கதையும் வெளியானது..!

விஜய் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் எழுத்து, இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘சர்கார்’ படத்தின் கதை தன்னுடையது என்று சொல்லி வருண் ராஜேந்திரன் என்னும் இணை இயக்குநர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருக்கிறார்.

அவர் தாக்கல் செய்துள்ள மனுவில் “தான் எழுதிய ‘செங்கோல்’ என்ற கதையும், ‘சர்கார்’ படத்தின் கதையும் ஒன்றுதான் என்றும் நான் அதனை முறைப்படி தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தில் 2007-ம் ஆண்டே பதிவு செய்து வைத்திருப்பதாகவும்” கூறியிருக்கிறார்.

தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தில் இது குறித்து தான் புகார் அளித்துள்ளதாகவும், அந்தப் புகாரின் மேல் நடத்தப்பட்ட விசாரணையில் தன்னுடைய ‘செங்கோல்’ கதையும், ஏ.ஆர்.முருகதாஸ் எழுதியிருக்கும் ‘சர்கார்’ படத்தின் கதையும் ஒன்றுதான் என்று தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கம் அளித்துள்ள சான்றிதழையும் இணைத்துள்ளார்.

இந்த வழக்கு வரும் செவ்வாய்கிழமையன்று விசாரணைக்கு வரவிருக்கிறது. அன்றைக்கு ஏ.ஆர்.முருகதாஸ் மற்றும் தயாரிப்பாளர், தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கம் மூன்று பேரும் தத்தமது தரப்பு கருத்துக்களை சமர்ப்பிக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதற்கிடையில் இதுவரையிலும் அமைதி காத்து வந்த ஏ.ஆர்.முருகதாஸ் திடீரென்று இது குறித்து வெளிப்படையாக மீடியாக்களுக்கு பேட்டியளித்துள்ளார். இந்தப் பேட்டியில் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தின் தலைவரான இயக்குநர் கே.பாக்யராஜ் தன் மீது தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சியோடு செயல்பட்டுள்ளதாக கூறினார்.

a.r.murugadoss-k.bhagyaraj

இதையடுத்து கோபமடைந்த இயக்குநர் கே.பாக்யராஜும் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தில் இது குறித்து நடந்த விசாரணை சம்பவங்களையும், அதில் முருகதாஸ் நடந்து கொண்டவிதம், தன் மீதான குற்றச்சாட்டுக்களை மறுத்தவிதம், சங்கம் எடுத்த முடிவுகள் அனைத்தையும் வெளிப்படையாகச் சொல்லிவிட்டார்.

இதன் மூலம் யாருக்கு லாபமோ.. நஷ்டமோ.. விஜய் ரசிகர்களுக்கும், சினிமா ரசிகர்களுக்கும் வரும் தீபாவளியன்று வெளியாகவிருக்கும் ‘சர்கார்’ படத்தின் கதை என்னவென்று முழுமையாகத் தெரிந்துவிட்டது.

‘சர்கார்’ படத்தின் கதையாக இயக்குநர் கே.பாக்யராஜ் தெரிவித்திருப்பது இதுதான் :

விஜய் அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர். தமிழர். ஒரு பெரிய மல்டி நேஷனல் நிறுவனத்தின் சி.இ.ஓ.வாக இருப்பவர். அப்போது தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடக்கிறது. இந்தத் தேர்தலில் ஓட்டுப் போடுவதற்காக தமிழகம் வருகிறார் விஜய்.

ஆர்வத்துடன் ஓட்டுப் போட வந்த விஜய்க்கு பெரும் ஏமாற்றம். கையில் அடையாள அட்டை வைத்திருந்தும் அவருடைய ஓட்டை அவருக்கு முன்பாகவே யாரோ ஒரு இந்தியனோ, தமிழனோ போட்டுவிட்டு போய்விட்டான். இதனால் கோபப்படுகிறார் விஜய். அதிகாரிகளிடம் சண்டையிடுகிறார். ஆனாலும் ஓட்டளிக்க முடியவில்லை.

இதனால் கோபமடையும் இவர் இது குறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கிறார். போராடுகிறார். அந்தத் தொகுதியின் தேர்தல் ரத்து செய்யப்படுகிறது. மீண்டும் தேர்தல் அறிவிக்கப்படுகிறது. இடையில் அத்தேர்தல் ரத்தானதால் அனைத்து கட்சிகளின் அரசியல்வாதிகளின் வெறுப்பையும் சம்பாதித்துக் கொள்கிறார் விஜய்.

sarkar-movie-poster-4

“தேர்தலில் நிற்பதும், பிரச்சாரம் செய்வதும், செலவு செய்வதும் எத்தனை பெரிய கஷ்டம் தெரியுமா. இப்போ போட்ட காசெல்லாம் போச்சு.. யார் தருவா.. உனக்கு அரசியலை பத்தி என்ன தெரியும்..? என்று அவர்களெல்லாம் விஜய்யின் தன்மானத்தைச் சீண்டிவிட.. இப்போது விஜய் அதே தொகுதியில் துணிச்சலாக சுயேட்சையாக நிற்க முடிவெடுக்கிறார். இதுதான் இடைவேளை போர்ஷன் என்கிறார்கள்.

இதற்குப் பின் அதே தொகுதியில் தேர்தல் பிரச்சாரம். விஜய்யைத் தேர்தலில் நிற்கவிடாமல் தடுக்கும் சூழ்ச்சிகள். எதிர்ப்புகள்.. அடிதடி… கலாட்டா.. இது எல்லாவற்றையும் முறியடித்துவிட்டு களத்தில் நின்று வெற்றியும் பெற்று விடுகிறார் விஜய்.

அதிசயத்திலும் அதிசயமாக தமிழக சட்டமன்றத்தில் அப்போது தொங்கு சட்டசபை உருவாகிவிடுகிறது. ஒரேயொரு உறுப்பினர் ஆதரவு இருந்தால்தான் ஆளும் கட்சியோ, எதிர்க்கட்சியோ ஆட்சியமைக்க முடியும் என்கிற நிலைமை. இப்போது அந்த ஒரேயொரு சுயேட்சை உறுப்பினர் சாட்சாத் நம்ம விஜய்தான்.

விஜய்யிடம் இரு தரப்பினரும் ஆதரவு கேட்கிறார்கள். எப்படியாவது நம்ம கட்சி ஆட்சியில் இருந்தால் போதும் என்று நினைக்கும் இரு கட்சியினருமே விஜய்யையே முதல்வராக்கவும் சம்மதம் கொடுக்கிறார்கள். “விஜய் முதல்வரானால் போதும். நாங்கள் அவருக்குக் கீழ் அமைச்சர்களாக இருந்து கொள்கிறோம்…” என்று இரு கட்சிகளின் தலைவர்களும் சொல்லிவிடுகிறார்கள்.

Sarkar-movie-poster-2

ஆனால் விஜய் கடைசி டிவிஸ்ட்டாக “நான் மக்களுக்கு நல்லது செய்யணும்ன்னு நினைச்சுத்தான் இந்தத் தேர்தலில் நின்றேன். முதலமைச்சராகணும் என்று நினைக்கவில்லை. இப்போது முதல்வராக ஆனேன் என்றால் என்னால் உங்களை வைத்துக் கொண்டு நல்லது செய்ய முடியாது. அதனால் நான் வெளியில் இருந்து ஆதரவு தருகிறேன். அப்போதுதான் இந்த ஆட்சியின் குற்றம், குறைகளைச் சொல்லி திருத்த முடியும். ஆகவே, நல்லதொரு எதிர்க்கட்சி உறுப்பினராக எனது தொகுதி மக்களுக்கு சேவை செய்யப் போகிறேன்…” என்று சொல்லிவிட்டு விடைபெறுகிறார்.

இதுதான் படத்தின் முடிவாம்..!

இணை இயக்குநர் வருண் ராஜேந்திரனின் கதைப்படி இது எல்லாமே கிட்டத்தட்ட ஒரே மாதிரியிருந்தாலும் முடிவில் மட்டுமே மாற்றம் செய்திருக்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ்.

வருணின் கதையில் ஹீரோ சட்டக் கல்லூரி மாணவர். இதேபோல் அவரது ஓட்டையும் ஒரு தேர்தலில் யாரோ போட்டுவிட்டுப் போக ஓட்டுப் போட முடியாமல் தவிக்கும் அவர் நீதிமன்றத்தை நாடி தேர்தலை ரத்து செய்ய வைக்கிறார். பின்பு நடக்கும் இடைத் தேர்தலில் அவரே தேர்தலில் நின்று ஜெயிக்கிறார். அப்போதும் தொங்கு சட்டசபை ஏற்பட, ஹீரோ  தன்னைத் தேடி வரும் முதல்வர் பதவியை ஏற்க மறுத்து வேறொருவருக்கு தனது ஆதரவைக் கொடுத்துவிட்டு திரும்பவும் சட்டக் கல்லூரிக்கே படிப்பதற்காகச் செல்கிறார்.

ஆனால், ஏ.ஆர்.முருகதாஸின் கதைப்படி முதல்வராகாமல் எதிர்க்கட்சி உறுப்பினராகவே நீடித்துக் கொள்ள விரும்புகிறார் ஹீரோ.

இவ்வளவுதான் வித்தியாசமாம்..!

Sarkar-movie-poster-3

எல்லாம் சரிதான். ஆனால் ஒரேயொரு நபருக்குரிய ஓட்டு கள்ள ஓட்டாகப் பதிவு செய்யப்பட்டதால் அத்தொகுதியில் தேர்தல் நிறுத்தப்படும் என்பது தவறானது. அதற்கு இப்போதைய சட்டத்தில் இடமில்லை.

தன்னுடைய வாக்கினை யாரோ ஒருவர் போட்டுவிட்டுச் சென்றாலும், உரிய அடையாள அட்டையோடு வந்திருப்பவர் தேர்தல் அலுவலரிடம் புகார் கொடுத்து அவரும், உண்மையான வாக்காளர் இவர்தான் என்பதனை ஒப்புக் கொண்டால், இதற்கென இருக்கும் தனி படிவத்தை கேட்டு வாங்கி, பூர்த்தி செய்து கொடுத்து அவருடைய வாக்கினை செலுத்தலாம். இதுதான் இப்போதைய நடைமுறை.

ஒரு தொகுதியில் தேர்தலையே ரத்து செய்கிறார்கள் என்றால் அது அரவக்குறிச்சி மற்றும் ஆர்.கே. நகரில் நடைபெற்ற மாபெரும் லஞ்சம் கொடுக்கும் முயற்சியும், இதைத் தொடர்ந்து அடிதடி, வெட்டுக் குத்துக்களும், மாநில அரசும் இதற்கு உடைந்தையாக இருப்பதாகவும் நீதிமன்றத்திற்கோ அல்லது தேர்தல் ஆணையத்திற்கோ தெரிய வேண்டும். அப்போதுதான் தேர்தலையே ரத்து செய்வார்கள்.

இது மாஸ் ஸ்டார் விஜய்யின் படம் என்பதால் கூடுதல் திரைக்கதையில் விஜய்க்கு ஓட்டு இல்லை என்பதோடு கூடுதலாக இது போன்ற சம்பவங்களையும், 2000 ரூபாய் டோக்கன், குக்கர் பரிசு, லஞ்சம்… இது எல்லாவற்றையும் சேர்த்து வைத்து முருகதாஸ் திரைக்கதையை எழுதியிருக்கலாம் என்று தோன்றுகிறது..!

எப்படியோ.. நாம் சமீப காலங்களில் நேரடியாக அனுபவித்த பல அரசியல் சம்பவங்களை வைத்து இயக்குநர் முருகதாஸ், இந்தப் படத்தை உருவாக்கியிருப்பதால் நிச்சயம் படம் பெரும் பரபரப்பாகவே இருக்கும் என்று நம்பலாம்..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *