November 29, 2023

வெற்றிகரமாக 25 வருடங்களைக் கடந்த TRIDENT ARTS நிறுவனம்..!

வெற்றிகரமாக 25 வருடங்களைக் கடந்த TRIDENT ARTS நிறுவனம்..!

 

வெற்றிகரமாக 25 வருடங்களைக் கடந்த TRIDENT ARTS நிறுவனம்..!

தமிழ்ச் சினிமாவில் சமீப காலமாக ‘TRIDENT ARTS’ நிறுவனத்தின் பெயர் சகல இடங்களிலும் உச்சரிக்கப்பட்டு வருகிறது. பெரிய பட்ஜெட் படங்களை விநியோகம் செய்வதில் இந்த விநியோக நிறுவனம்தான் தற்போது முன்னணியில் உள்ளது. அத்துடன் சில பெரிய பட்ஜெட் படங்களையும் இந்த நிறுவனமே தயாரித்தும் வருகிறது என்பதால் தமிழ்த் திரையுலகில் அனைவரின் கண் பார்வையும் இந்த நிறுவனத்தின் மீது விழுந்தது.

அதே சமயம் இந்த நிறுவனம் நேற்று முளைத்த காளான் அல்ல. இந்த நிறுவனம் தமிழ்த் திரையுலகில் காலடி எடுத்து வைத்து 25 ஆண்டுகள் ஆகின்றன. முதலில் சிறிய படங்களை வாங்கி விநியோகம் செய்ய துவங்கிய இந்த நிறுவனம் இந்த 25 ஆண்டு கால பயணத்திற்குப் பிறகே இப்படியொரு உச்ச நிலையை எட்டியிருக்கிறது.

தன்னுடைய 25-வது ஆண்டு தினத்தையொட்டி இந்த நிறுவனத்தின் தலைவரான ரவீந்திரன் நேற்று மதியம் பிரசாத் லேப் தியேட்டரில் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது இந்த நிறுவனத்தைதான் தான் துவக்கிய விதம், இந்த 25 வருடங்களில் தான் கடந்து வந்த பாதை ஆகியவைகளை பத்திரிகையாளர்களிடத்தில் பகிர்ந்து கொண்டார்.

இந்த நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் ரவீந்திரன் பேசும்போது, “ஆரம்பத்தில் நானும் என் நண்பர் லத்தீப்பும் சில நண்பர்களுடன் சேர்ந்து குழுவாக படங்களை வாங்கி விநியோகம் செய்தோம். ‘ஆண் பாவம்’, ‘விடிஞ்சா கல்யாணம்’, ‘எங்க ஊரு பாட்டுக்காரன்’, ‘உள்ளே வெளியே’, ‘உள்ளத்தை அள்ளித்தா’-ன்னு நிறைய படங்களுக்கு மக்கள் நல்ல ஆதரவு கொடுத்தாங்க.

அதன் பின்பு லத்தீப்பும் நானும் இணைந்து தனியாக ‘பொற்காலம்’ படத்தை விநியோகம் செய்தோம். அந்த படத்தைப் பாராட்டி எழுதாத பத்திரிக்கைகளே கிடையாது. நிறைய லாபமும் கிடைத்தது.

IMG_8870

தொடர்ந்து ‘ரோஜா கம்பைன்ஸ்’ நிறுவனத்தின் தயாரிப்பாளர்களான காஜா மொய்தீன், ஞானவேல், ஜெயப்பிரகாஷ் மூன்று பேருமே எங்களுக்கு ஆதரவு கொடுத்து கை தூக்கிவிட்டார்கள். ரோஜா கம்பைன்ஸ் நிறுவனம் தயாரித்த அனைத்து படங்களின் விநியோக உரிமையையும் எங்களுக்கே கொடுத்து உதவினார்கள். அவர்களுக்கு எனது மிகப் பெரிய நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இதையடுத்து பல பெரிய படங்களை தமிழ்நாட்டின் பெரிய ஏரியானு சொல்ற NSC பகுதியில் வெளியிட்டோம். அஜித்தின் ‘வாலி’, ‘வில்லன்’, ‘முகவரி’, ‘ஆரம்பம்’-னு நிறைய வெற்றி படங்களை விநியோகம் செய்தோம்.

விஜய்-கூட ‘சச்சின்’, ‘திருப்பாச்சி’, ‘கத்தி’, ‘மெர்சல்’ன்னு பிரமிக்கிற வெற்றி படங்களை விநியோகம் செய்தோம்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் ‘காலா’, கமல் சாரோட ‘உன்னைபோல் ஒருவன்’ – இப்படி தமிழ் சினிமாவோட அடையாளமா இருந்த படங்களை வெளியிட்டதில் எங்களுக்கு பெருமை.

கேப்டன் விஜயகாந்த் அவர்களின் ‘கள்ளழகர்’, முரளியின் ‘பூந்தோட்டம்’, பார்த்திபன் அவர்களின் ‘வெற்றிக் கொடி கட்டு’, ‘அழகி’, விஷாலின் ‘பாண்டிய நாடு’, ‘பூஜை’, ‘ஆம்பள’, தனுஷின் ‘அது ஒரு கனாகாலம்’, ‘தேவதையை கண்டேன்’, ‘கொடி’, ‘விசாரணை’, விக்ரமின் ‘பீமா’, சிம்புவோட ‘குத்து’, ‘சரவணா’, ‘அச்சம் என்பது மடமையடா’, சிவகார்த்திகேயனின் ‘ரஜினி முருகன்’, விஜய்சேதுபதியோட ‘நானும் ரவுடிதான்’, ஜீவாவின் ‘ராம்’, சசிகுமாரின் ‘சுப்ரமணியபுரம்’, ‘சுந்தரபாண்டியன்’, சமுத்திரக்கனியின் ‘அப்பா’, இப்படி கிட்டதட்ட மூன்று தலைமுறை நடிகர்களின் படங்களை நாங்கள் வெளியிட்டுள்ளோம்.

விநியோகத் துறையில் எங்களுக்கு கிடைத்த வெற்றிக்கு பிறகுதான் நாங்கள் நேரடி தயாரிப்பில் இறங்கினோம். சசிகுமார் நடித்த ‘வெற்றிவேல்’ படம் எங்களது முதல் தயாரிப்பு, அதன் பிறகு ‘சிவலிங்கா’ படத்தை தயாரிச்சோம்.

மற்ற தயாரிப்பாளர்களுடன் இணைந்து ‘விக்ரம் வேதா’, ‘அவள்’, ‘லஷ்மி’, ‘தமிழ் படம் 2’, ‘அறம்’, ‘ராட்சசன்’-னு இந்த வருஷமும், போன வருஷமும் வெளியான முக்கியமான படங்களை தயாரிச்சிருக்கோம்.

இப்போது மற்ற தயாரிப்பாளர்களுடன் இணைந்து ‘சீதக்காதி’, ‘ஆயிரா’, ‘தேவி-2’, ‘தில்லுக்கு துட்டு-2’, கமல் சாரோட இணைந்து விக்ரம் நடிக்கிற படங்களையும் தயாரிச்சுகிட்டு இருக்கோம்.

இது மட்டுமில்லாம இன்னும் சில படங்களும் தயாரிப்பில் இருக்கு. அந்த அறிவிப்புகளை கூடிய சீக்கிரம் வெளியிடுவோம். நாங்கள் விநியோகத் தொழிலில் இறங்கி 25 வருஷம் ஆயிருச்சு. இதுவரைக்கும் 550 படங்களுக்கும் மேல் வெளியிட்டு இருக்கிறோம்.

இந்த நவீன காலத்துக்கு ஏற்ப Digital-லயும் Trident Arts களம் இறங்கியிருக்கு. தற்போது Web Series-லேயும் களம் இறங்கியுள்ளோம். முதல் படைப்பாக ஆட்டோ சங்கரின் வாழ்க்கை வரலாற்றை வெப் சீரிஸாக தயாரித்துள்ளோம்.

இந்த வெற்றிகள் அனைத்திற்கும் பத்திரிகையாளர்களாகிய உங்களுடைய ஆதரவும் ஒரு காரணம்.  எவ்வளவு பெரிய ஏரியாவுல நாங்க நல்ல படங்களை ரிலீஸ் பண்ணாலும், அந்தப் படத்தை மக்களிடம் கொண்டு போனது பத்திரிகையாளர்களாகிய நீங்கள்தான்,

நல்ல படம்னு தியேட்டருக்கு போய் பார்த்த பிறகுதான் ஆடியன்ஸ்க்கு தெரியும். ஆனால் இது நல்ல படம். நீங்க போய் பாக்கலாம்னு ஆடியன்ஸை தியேட்டருக்கு Pull பண்றது Media-தான். நாங்கள் விநியோகம் செய்த படங்களுக்கு நீங்க கொடுத்த ஆதரவை நாங்கள் தயாரித்த படங்களுக்கும் கொடுத்திருக்கிங்க.

இப்படி 25 வருடங்களாக எங்களுடைய எல்லாத் தளங்களிலும் உங்களுடைய ஆதரவு எங்களுக்குக் கிடைத்திருக்கு. அதற்காக எங்களது நிறுவனத்தின் சார்பாக மிகப் பெரிய நன்றியை ஒட்டு மொத்த பத்திரிகையாளர்கள் அனைவருக்கும் தெரிவித்துக் கொள்கிறேன்..” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *