December 5, 2023

வைபவ், நந்திதா ஸ்வேதா நடிக்கும் புதிய திரைப்படம் ‘டாணா

வைபவ், நந்திதா ஸ்வேதா நடிக்கும் புதிய திரைப்படம் ‘டாணா’

நோபல் மூவிஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் எம்.சி.கலைமாமணி தயாரிக்கும் புதிய திரைப்படம் ‘டாணா’.

இந்தப் படத்தில் வைபவ் கதையின் நாயகனாகவும், நந்திதா ஸ்வேதா நாயகியாகவும் நடிக்கின்றனர்.

இணை தயாரிப்பு – எச்.எஸ்.கான், தயாரிப்பு நிர்வாகம் – வி.சுதந்திரமணி, இசை – விஷால் சந்திரசேகர், ஒளிப்பதிவு – சிவா.ஜி.ஆர்.என். படத் தொகுப்பு – ஜி.கே.பிரசன்னா, நடன இயக்கம் – சதீஷ் கிருஷ்ணன், கலை இயக்கம் – பசர் என்.கே.ராகுல், சண்டை பயிற்சி – கூட்டி, ஆடை வடிவமைப்பு – கீர்த்தி வாசன், விளம்பர வடிவமைப்பு – 24 AM, மக்கள் தொடர்பு – சுரேஷ் சந்திரா, ரேகா.

இந்தப் படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் புதுமுக இயக்குநரான யுவராஜ் சுப்ரமணி.

படம் பற்றி யுவராஜ் சுப்ரமணி பேசுகையில், “என்னதான் காமெடி கலந்த பேய் படங்கள் வந்து கொண்டே இருந்தாலும் ரசிகர்களுக்கு அதை பார்த்து சலிப்பே ஏற்படுவதில்லை. இயற்கையாகவே, ரசிகர்கள் பேய்க்கு பயந்து நடுங்கும் அடுத்த நொடியே, விழுந்து விழுந்து சிரிக்க வைக்கும் காமெடியை விரும்புகிறார்கள். இந்த கலவைதான் காமெடி பேய் படங்களின் சீசனை இன்னும் உயிர்ப்புடனேயே வைத்திருக்கிறது. ஆனால் அதை சரிவிகிதத்தில் கலந்து கொடுப்பதுதான் சவாலான வேலை. அந்த வேலையை அர்ப்பணிப்பு தன்மையுடன் இத்திரைப்படத்தில் செயயவிருக்கிறேன்..” என்கிறார். 

படம் பற்றியும் கதைத் தேர்வு பற்றியும் தயாரிப்பாளர் கலைமாமணி பேசும்போது, “இந்த சூப்பர் நேச்சுரல் காமெடி படங்களின் வெற்றியே, நடுங்க வைக்கும் காட்சியாக இருந்தாலும் நம் உதடுகளில் சிறு புன்னகையையும், முதுகு தண்டில் சின்ன பயத்தையும் உண்டாக்குவதில்தான் அமைந்திருக்கிறது. இயக்குநர் யுவராஜ் சுப்ரமணி அதன் அடிப்படையை புரிந்து கொண்டு, தான் எழுதிய ஒரு கதையை எனக்கு சொன்னார். எனக்கு இது முற்றிலும் ஒரு புதிய அனுபவத்தை அளித்தது, கதையை ரொம்பவே ரசித்தேன். இந்தக் கதை அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் என்ற நம்பிக்கை எனக்குள் உருவான பின்புதான் படமே துவங்கியது.

‘ஹலோ நான் பேய் பேசுறேன்’ போன்ற திரைப்படங்கள் மூலம் இந்த வகை காமெடி பேய் படங்களில் தன்னை நிரூபித்தவர் நடிகர் வைபவ். எந்தவொரு சூழ்நிலையிலும் தன்னிச்சையான உணர்வை வெளிப்படுத்தக் கூடிய நடிகை நந்திதா ஸ்வேதா. இவர்கள் இருவருமே ஹீரோ, ஹீரோயினாக நடிக்கவுள்ளனர்.

முக்கிய நடிகர்களான யோகிபாபு மற்றும் பாண்டியராஜன் இருவரும் இயக்குநரின் தேர்வு என்றாலும் அவர்களது கதாபாத்திரத்திற்கு சரியாக அமைந்திருக்கிறது. குறிப்பாக, யோகிபாபு ஒரு வழக்கமான கதாபாத்திரமாக இல்லாமல், வேறொரு கேரக்டர் ஸ்கெட்ச்சில் படம் முழுவதும் பயணிப்பார். அவரது கதாபாத்திரம், பார்வையாளர்களால் மிகவும் ரசிக்கப்படும்…” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *