சென்னை பெருநகர காவல்துறையில் பணிபுரியும் ஆண் மற்றும் பெண் காவல் ஆளிநர்களின் ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டும், பணியின் காரணமாக மன உளைச்சலுக்கு ஆளாகாமல் தடுத்து, மன அழுத்தத்தை குறைப்பதற்கும் சென்னை பெருநகர காவல் ஆணையர் முனைவர் அ.கா.விசுவநாதன்,இ.கா.ப., அவர்கள் உத்தரவின்பேரில், காவல் ஆளிநர்களுக்கு வாராந்தோறும் யோகாசன வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.
அதன்பேரில், காலை சென்னை பெருநகர காவல்துறைக்குட்பட்ட 14 இடங்களில், காவல் துணை ஆணையாளர்கள் தலைமையில் காவல் ஆளிநர்களுக்கு இன்று (31.3.2018) காலை யோகாசன வகுப்புகள் நடத்தப்பட்டது. இவ்வகுப்பில் காவல் ஆளிநர்களுக்கு சூரிய நமஸ்காரம், மூச்சுப் பயிற்சி, தியானம் மற்றும் பல யோகாசன வகுப்புகள் நடத்தப்பட்டது.
சென்னை பெருநகர காவல் ஆணையர் திரு.அ.கா.விசுவநாதன்,இ.கா.ப., அவர்கள் இன்று (31.3.2018) காலை அரும்பாக்கம் டி.ஜி.வைஷ்ணவா கல்லூரி மைதானத்தில் யோகா நிபுணர் திரு.ஆசன ஆண்டியப்பன் தலைமையிலான குழுவினர் மூலம் அண்ணாநகர் காவல் மாவட்ட காவல் ஆளிநர்களுக்கு நடைபெற்ற யோகாசன வகுப்பை, பார்வையிட்டார். பின்னர் காவல் ஆணையாளர் அவர்கள், மன அழுத்தத்தை குறைப்பதற்கும், உடல்நலத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதற்கும் யோகாசனம் பெரிதும் உதவுவதாகவும், காவலர்கள் தவறாமல் இப்பயிற்சியை செய்து உடல்நலத்தை காத்து கொள்ள வேண்டும் எனவும் பல அறிவுரைகள் மற்றும் ஆலோசனைகள் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், சென்னை பெருநகர காவல் கூடுதல் ஆணையாளர் திரு.எச்.எம்.ஜெயராம்,இ.கா.ப., (வடக்கு), வடக்கு மண்டல இணை ஆணையாளர் திரு.பிரேம் ஆனந்த் சின்ஹா, இ.கா.ப., நுண்ணறிவுப்பிரிவு துணை ஆணையாளர் திரு. ஆர்.திருநாவுக்கரசு,இ.கா.ப., அண்ணாநகர் காவல் துணை ஆணையாளர் மருத்துவர் எம்.சுதாகர், உதவி ஆணையாளர்கள் மற்றும் காவல் ஆளிநர்கள் கலந்து கொண்டனர்.
இன்று நடைபெற்ற யோகாசன வகுப்பில், சுமார் 10,000 காவல் ஆளிநர்கள் கலந்து கொண்டனர். குறிப்பாக ராஜரத்தினம் விளையாட்டு மைதானத்தில் 2,500 காவல் ஆளிநர்களும், புனித தோமையர் மலை ஆயுதப்படை மைதானத்தில் சுமார் 1,800 காவல் ஆளிநர்களும் கலந்து கொண்டனர். ராஜரத்தினம் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற யோகாசன வகுப்பில் கூடுதல் ஆணையாளர் (தெற்கு) திரு.எம்.சி. சாரங்கன்,இ.கா.ப., கிழக்கு மண்டல இணை ஆணையாளர் திரு.டி.எஸ்.அன்பு,இ.கா.ப., காவல் துணை ஆணையாளர்கள் திரு.பிரவேஷ்குமார்,இ.கா.ப., (திருவல்லிக்கேணி), திரு.எஸ்.சரவணன் (தலைமையிடம்), திரு.சௌந்தராஜன் (ஆயுதப்படை) கலந்து கொண்டனர்.