June 1, 2023

எனக்கு கட்அவுட்டெல்லாம் இனிமேல் வேண்டாம்…” – நடிகர் சிம்பு வேண்டுகோள்

“எனக்கு கட்அவுட்டெல்லாம் இனிமேல் வேண்டாம்…” – நடிகர் சிம்பு வேண்டுகோள்..!

அண்மையில் வெளிவந்த ‘உரு’ படத்தின் தயாரிப்பாளரான V.P.விஜி, தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான வையம் மீடியாஸ் மூலம் தயாரித்துள்ள புதிய திரைப்படம்  ‘எழுமின்’.  இந்தப் படத்தை இவரே இயக்கியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

கணேஷ் சந்திரசேகரன் இசையமைக்க, வினோத் குமார் ஒளிப்பதிவையும், கார்த்திக் ராம் படத் தொகுப்பையும் மேற்கொள்கின்றனர்.

தற்காப்பு கலைகளை தங்களது விருப்பமாக தேர்ந்தெடுத்து அதில் சாதிக்க நினைக்கும் ஆறு சிறுவர், சிறுமிகளை பற்றிய கதைதான் இந்த ‘எழுமின்’ திரைப்படம்.

விவேக், தேவயானி மற்றும் பலர் நடித்துள்ள இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா இன்று காலை ஆர்.கே.வி. ஸ்டூடியோவில் நடைபெற்றது. 

விழாவில் நடிகர்கள் விஷால், கார்த்தி, சிம்பு ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு ட்ரெய்லரை வெளியிட்டார்கள்.

elumin-team

இந்த விழாவில் நடிகர் கார்த்தி பேசும்போது, “இந்தப் படத்தின் போஸ்டர்கள் மற்றும் ட்ரெய்லர் பார்க்கும்போது ரொம்ப சந்தோஷமாக இருந்தது. நான் கல்லூரி மற்றும் பள்ளி விழாக்களுக்குச் சென்று வருகிறேன். எல்லாரும் ஒன்றை மட்டுமே நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறார்கள், அது சினிமா. சினிமா பாடல்களைத்தான் பாடுகிறார்கள். சினிமா பாடல்களுக்குத்தான் டான்ஸ் ஆடுகிறார்கள். இன்ஜினீயரிங் கல்லூரிகளுக்குச் சென்றால்கூட எல்லாமே சினிமா மயமாகத்தான் இருக்கிறது.

அப்படி இருக்கும்போது, தற்காப்புக் கலையை அடிப்படையாக வைத்து ஒரு படத்தை எடுத்திருக்கிறார் வி.பி.விஜி. நான் உங்களை மிகவும் பாராட்டுகிறேன். என் மகளை அழைத்துக் கொண்டுபோய் நிச்சயம் இந்தப் படத்தைக் காண்பிப்பேன்.

எவனாவது ஒருத்தன் செயினைப் பிடுங்கினால், ‘ஐயையோ…’ என்று பயந்து நின்றுவிடக் கூடாது. ‘அடிங்க்… என் செயினையா பறிக்கிற?’ என்று ஒரு குத்துவிட வேண்டும். அந்தளவுக்குக் குழந்தைகள் தயாராக வேண்டும்.

தற்காப்புக் கலைதான் அதற்கு உங்களைத் தயார்படுத்தும். அதை கற்றுக் கொண்டால் மட்டும்தான் உங்களால் உடனடியாக எதிர்வினையாற்ற முடியும். அந்தச் செயின் திரும்பக் கிடைக்கிறதோ, இல்லையோ… குறைந்தபட்சம் நாம் தைரியமாகவாவது இருக்க அது உதவும்.

‘அடுத்த முறை அவன் கையை உடைத்து விடுவேன்’ என்று சொல்லும் அளவுக்குத் தைரியம் வரவேண்டும். என் மகளும் டேக்வாண்டோ பயிற்சிக்குச் சென்று கொண்டிருக்கிறார். குழந்தைகளிடம் இருந்த இந்த ஃபயரை பார்த்து சந்தோஷமாக இருக்கிறது.

நமக்கு நேரம் கிடைக்க வேண்டும் என்பதற்காக குழந்தைகளிடம் போன், லேப்டாப்பைக் கொடுத்து விடுகிறோம் அல்லது டிவி பார்க்கச் சொல்லி விடுகிறோம். அப்படி இல்லாமல், மேடையில் தங்கள் திறமையை வெளிக்காட்டிய குழந்தைகளைப் பார்த்து எனக்கு ஊக்கமாக இருந்தது.

என் கையால் ஒரு பள்ளிக்கு நன்கொடை கொடுக்கச் சொன்னார்கள். என் பங்காக 50 ஆயிரம் ரூபாய் தருகிறேன். சிறிய தொகையாக இருந்தாலும், பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறேன்…” என்றார்.

விழாவில் நடிகை தேவயானி பேசும்போது, “படத்தில் சிறுவர்கள் அனைவரும் கடினமான உழைப்பை கொடுத்திருக்கிறார்கள். விவேக் மிக அருமையாக நடித்திருக்கிறார். வருகை தந்துள்ள விஷால், கார்த்தி, சிம்புவிற்கு நன்றி. படக் குழுவினருக்கு அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்…” என்றார்.

நடிகர் உதயா பேசும்போது, “விவேக் அரசியலுக்கு வரவேண்டும். நல்லது பண்ண நினைக்கிறவங்க கண்டிப்பாக அரசியலுக்கு வரணும். விவேக் நல்ல விஷயம் நடக்க வேண்டும் என்று நினைப்பவர். அவர் நடிப்பில் உருவாகி இருக்கும் இப்படம் வெற்றி பெற வேண்டும்…” என்றார்.

vishal-1

நடிகர் விஷால் பேசும்போது, “நான் ஆக்‌ஷன் ஹீரோ என்று சொல்லிக் கொள்ளவே வெட்கப்படுறேன். இந்தப் படத்தில் பசங்க கலக்கி இருக்கிறார்கள். குழந்தைகள் எல்லோரும் தற்காப்பு கலைகள் கற்றுக் கொள்ள வேண்டும். முக்கியமா குட் டச், பேட் டச் எது என்று சொல்லி தர வேண்டும்.

இந்தப் படத்துக்கு கொடி அசைக்க நான் வரக் கூடாது. ஜாக்கிசான்தான் வர வேண்டும். இந்த பசங்க என்ன இன்ஸ்பையர் பண்ணிருக்காங்க…?

மியூசிக் நல்லா வந்திருக்கு. விவேக் எழுதியிருக்கும் பாட்டு ரொம்ப நல்லாருக்கு. அண்ணன் விவேக் உண்மையை தைரியமா பேசுவாரு. எலக்சன்ல நின்னா கண்டிப்பா MLA ஆயிடுவாரு. அவர் அமைச்சராகவும் ஆகலாம். அப்படி அமைச்சராக ஆனால் அவர் நிச்சயம் நேர்மையானவராகவும் இருப்பார்.

பசங்களுக்கு நல்ல எதிர்காலம் இருக்கு. பெற்றோர்கள் குழந்தைகளுக்கு தற்காப்பு கலைகளை கத்துக் கொடுக்கணும்…” என்றார்.

elumin-team-1

நடிகர் விவேக் பேசும்போது, “எனக்கு நல்லது செய்ய வேண்டும்னு விஷால், கார்த்தி, சிம்பு ஆகியோரை கூப்பிட்டேன். ஆனால் எல்லாரும் சேர்ந்து என்னை அரசியல்ல கோர்த்து விடுறாங்க. தமிழ்நாட்டில் இப்போது கொடிதான் பிரச்சினை. பல பேர் கொள்கை இல்லாம இருக்காங்க. இனிமேல்தான் கொள்கைகளை தேடணுமாம்.

இந்தப் படத்தின் தலைப்பான ‘எழுமின்’ வார்த்தை சைனீஷ் மாதிரி இருக்குனு சொல்றாங்க. சிலர் ‘ஏழு மீன்’னு படிக்கிறாங்க. தமிழ் வார்த்தைகூட தெரியாம இருக்காங்க. அண்ணன் விவேகானந்தர் சொன்ன இந்த வார்த்தையை இத்தனை நாளா தமிழ்ச் சினிமாவுலகம் கண்டுக்காமல் இருந்திருக்கேன்னு நினைச்சா ஆச்சரியமா இருக்கு. இந்தத் தலைப்பு நான் நடிக்குற படத்துக்கு கிடைச்சதை நினைத்தால் எனக்கு பெருமையாவும் இருக்கு.

சமூகத்தில் விளையாட்டுல திறமை இருந்தும் பல இளம் சிறார்கள் முன்னேறி வர முடியாம இருக்காங்க. அவங்களுக்கு இந்த படம் சமர்ப்பணம்.

இந்த ட்ரெய்லர் வெளியீட்டு விழாவுக்கு இப்போ தமிழ்ச் சினிமாவில் ட்ரெண்ட்டில் இருக்கும் விஷால், சிம்பு, கார்த்தின்னு மூணு பேருமே வந்திருக்காங்க. விஷாலுக்கு இப்போது பல பிரச்சினைகள் இருக்கு. நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம் என பல பிரச்சினைகளுக்கு மத்தியில் இந்த விழாவுக்காக வந்திருக்காரு. நடிகர் சங்கம் கட்டிடத்திற்கு விஷால், கார்த்தி ரொம்ப கஷ்டப்பட்டு உழைக்கிறாங்க.

நேத்து இந்த நிகழ்ச்சியின் அழைப்பிதழை கொடுப்பதற்காக நான் நடிகர் சங்க வளாகத்துக்கு போன போது அங்கே அந்த வேகாத வெயில்ல விஷால், கார்த்தி, நாசர் மூணு பேருமே நின்றிருந்தாங்க. கட்டிட வேலைகளை பார்த்துக்கிட்டிருந்தாங்க. அந்த அளவுக்கு நடிகர் சங்க வேலைகளை செவ்வனே செஞ்சுக்கிட்டிருக்காங்க. எனக்காக இங்கே வந்த எல்லாருக்கும் நன்றி.

அப்போ இருந்த தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளுடன் எனக்கும் பல பிரச்சினைகள் ஏற்பட்டது. என்னுடைய ‘பாலக்காட்டு மாதவன்’ படத்தை வெளியிட எல்லா வேலைகளும் செய்துவிட்டுக் காத்திருந்தேன். அப்போது பார்த்து ‘பாகுபலி-2’ படத்தோடு மோத விரும்பாத மிகப் பெரிய நடிகரின் படம் திடீரென்று என் படம் வெளியான நாளன்று வெளியாக போட்டிக்கு வந்தது.

நான் இது தொடர்பாக பலரிடமும் பலவிதமாக பேசிப் பார்த்தும் எதுவுமே நடக்கவில்லை. இதனால் 250 தியேட்டர்கள் பேசி வைத்திருந்த நிலையில் என் படத்துக்கு 100 தியேட்டர்கள்தான் கிடைத்தன. மலேசியாவில் 80 தியேட்டர்கள் பேசியிருந்த நிலையில் வெறும் 16 தியேட்டர்கள்தான் கிடைத்தன.

மலையாளம், தெலுங்குக்கு போன பிரதிகளை அப்படியே திருப்பிக் கொடுத்துவிட்டார்கள். இதனால் ஒட்டு மொத்தமாக பாலக்காட்டு மாதவன் படம் மொத்த முதலீட்டையும் இழந்தது. இப்படி செய்தால் நாளைக்கு எந்தத் தயாரிப்பாளர் படம் தயாரிக்க முன் வருவார்..?

ஆனால் இனி அதுபோல் நடக்காது. இப்போது தயாரிப்பாளர் சங்கத் தலைவரான விஷால் திரைப்படங்களை வெளியிடுவது குறித்து ஒரு வரைமுறையைக் கொண்டு வந்திருக்கிறார். அதனை முறைப்படுத்தி வருகிறார்… அவருடைய முயற்சிகள் தொடர வேண்டுமாய் வாழ்த்துகிறேன்..” என்றார்.

simbu-1

நடிகர் சிம்பு பேசும்போது, “நான் பொதுவாக இசை வெளியீட்டு விழாவுக்கெல்லாம் போக மாட்டேன். விவேக் சார் இந்த படத்த பத்தி சொன்னாரு. சின்ன பசங்கள ஹீரோவாக்கி அவங்க பின்னாடி நின்னு இந்த படத்த கொடுத்திருக்கார்.

நானும் விவேக் ஸாரும் ஒரு படத்துல நடிக்கும்போது ஒரு சீன்ல வேறொரு காமெடியனை நடிக்க வைக்க விவேக் ஸார்கிட்டயே கேட்டேன். அவர் உடனே சரின்னு சொன்னார். அன்னிக்கு அவர் அப்படி சொல்லலைன்னா இன்னிக்கு சந்தானம்னு ஒருத்தர் வந்திருக்கவே முடியாது. அவ்வளவு நல்லவர் விவேக் ஸார்.

இந்தப் படத்துல நடிச்ச பசங்க எல்லாரும் அவங்க அப்பா, அம்மா கால்ல விழுந்து ஆசீர்வாதம் வாங்குங்க. அவங்க இல்லனா நீங்க வந்திருக்க மாட்டீங்க. நான் என் குழந்தைய ஸ்கூலுக்கு அனுப்ப மாட்டேன். படிக்க கத்துக்கத்தான் ஸ்கூலுக்கு அனுப்பறோம். ஆனா.. அங்க யாரு மொதல்ல ஆன்சர் பண்றாங்கனுதான் பாக்குறாங்க.

பேரண்ட்ஸ்கிட்ட ஒண்ணு சொல்றேன். பசங்களுக்கு என்ன வருமோ.. அந்த திறமைய வளர்த்து விடுங்க. பொறாமை, போட்டியெல்லாம் வேணாம்.

நடிகர் சங்க தேர்தலின்போது, விஷாலை எதிர்த்து பேசினேன். ஆனால் நடிகர் சங்க கட்டிடம் கட்டும்போது நல்ல மனசோட விஷால் என்னை அழைத்தார். அவருடைய மனிதாபிமானம் எனக்கு மிகவும் பிடித்தது. எல்லாரும் ஒற்றுமையா இருக்கணும்.

உங்க எல்லாருக்குமே தெரியும், என்னுடைய அப்பா, அம்மா, திறமை எல்லாத்தையும் தாண்டி, என்னோட மிகப் பெரிய பலமே என்னுடைய ரசிகர்கள்தான். என்னுடைய ரசிகர் ஒருத்தன் என் மேல இருக்க அன்புல எனக்கு கட் அவுட் வச்சப்போ ஏற்பட்ட தகராறுல இறந்து போயிட்டான். அதைவிட எனக்கு பெரிய வருத்தம் என்னவென்றால் அந்த தகராறு விசயத்துல என்னுடைய ரசிகர்கள் 9 பேர் கைதாகி இருக்காங்க.

ஒரு நாள் எதார்த்தமா அவனுடைய நண்பர்களையெல்லாம் பார்த்தேன். போஸ்டர் ஒட்டிட்டு இருந்தாங்க. என்ன விஷயம்ன்னு கேட்டப்பதான் விஷயத்த சொன்னாங்க. அந்த ரசிகர் எத்தன முறை எனக்காக கட் அவுட் வச்சிருப்பாரு. அதனாலதான் அவனுக்காக போஸ்டர் ஒட்டுனேன்.

அதை நான் பப்ளிசிட்டிக்காக பண்றதா சொல்றாங்க. ஆனா அதுக்காகல்லாம் நான் பண்ணல. எனக்கு கட் அவுட் வச்சி பால் ஊத்தி உங்க அன்பை நிரூபிக்கனும்னு அவசியம் இல்லை. உங்க மனசுல நான் இருக்கேனு எனக்கு தெரியும். இனிமேல் எனக்கு கட் அவுட் வைக்க வேண்டாம்.

நான் எப்பவும் என் இஷ்டப்படிதான் இருப்பேன். அது பல பேருக்கு பிரச்சினையா இருக்கு. இனி அந்த பிரச்சினை வராம பாத்துக்கிறேன். நான் லேட்டா போறதனால எல்லாருக்கும் கஷ்டம்னா நான் இனிமே லேட்டா போக மாட்டேன். தயாரிப்பாளர்களுக்கு பிடித்த கதாநாயகனாக இருப்பேன்..” என்றார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *