December 5, 2023

தடுப்பூசி போட்டுக்கொண்டு ஹீரோவாக நடித்த தினேஷ் மாஸ்டர்

‘பிரபுதேவா’ நடித்த மனதை திருடிவிட்டாய் படம் மூலம் டான்ஸ் மாஸ்டர் ஆனவர் தினேஷ்.. பல படங்களுக்கு நடன அமைப்பாளராக பணிபுரிந்து,
 
தேசிய விருதையும் வென்ற இவர் தற்போது ‘ஒரு குப்பைக் கதை’ தம மூலம் கதாநாயகனாக அறிமுகமாகியுள்ளார். .
 
 இதில் கதாநாயகியாக வழக்கு எண் புகழ் மனிஷா நடித்துள்ளார். இயக்குநர் அஸ்லம் தயாரித்திருக்கும் இந்தப்படத்தை அவரிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த காளி ரங்கசாமி என்பவர் இயக்கியுள்ளார்.
 
தனது ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனத்தின் மூலம் இந்தப்படத்தை வெளியிடுகிறார் உதயநிதி ஸ்டாலின்.
 
 நடனத்தில் இருந்து நடிப்புக்கு மாறிய அனுபவம் குறித்து பகிர்ந்துகொண்டார் தினேஷ் மாஸ்டர்
 
 “சின்னவயதிலேயே எனக்குள் இருந்த நடனத் திறமையை கண்டுபிடித்தது என் சகோதரர்கள் தான். என் அப்பாவும் எனக்கு ஊக்கம் கொடுக்கும் விதமாக என்னை சைக்கிளில் ஏற்றிக்கொண்டு பல இயக்குனர்களிடம் வாய்ப்பு கேட்க அலைந்தவர்தான்.
 
என் சகோதரர்களின் நண்பர்கள் மூலமாக எனக்கு பிரபுதேவா மாஸ்டரின் தம்பியான நாகேந்திர பிரசாத்தின் நட்பு கிடைத்தது.. அது படிப்படியாக வளர்ந்து ராஜூ சுந்தரம், பிரபுதேவா மாஸ்டர்களின் அறிமுகம் கிடைத்தது.அப்படியே கூட்டத்தில் ஒருவனாக ஆடிக்கொண்டிருந்த என்னை ஒரு கட்டத்தில் ‘மனதைtத்  திருடி விட்டாய்’ மூலம் நடன இயக்குனராக அறிமுகப்படுத்தினார் பிரபுதேவா. அதன்பின் விஜய்யின் ‘ஆள் தோட்ட பூபதி’ பாடல் என் வாழ்வில் விளக்கேற்றியது.
 
இறைவன் அருளால் நடன இயக்குனராக இத்தனை வருடம் சீராகப் போய்க் கொண்டிருக்கும் எனது பயணத்தில் இப்போது நடிகராக ஒரு புது தளத்தில் அடியெடுத்து வைத்திருக்கிறேன்.
 
 ஒருமுறை இயக்குனர் அமீரை சந்திக்க அவரது அலுவலகம் சென்றபோது அங்கே இயக்குனரும் ‘ஒரு குப்பை கதை’ படத்தின் தயாரிப்பாளருமான அஸ்லம் வந்திருந்தார். அவர்தான் இந்தக்கதைக்கு நீங்கள் பொருத்தமாக இருப்பீர்கள் என கூறினார்..
 
இத்தனைக்கும் அது இயக்குனர் அமீருக்கு சொல்லப்பட்டு அவர் நடிக்க மறுத்த கதை.. அதனால் ஆரம்பத்தில் தயங்கினாலும் பின் என் மனைவியின் ஆலோசனைப்படி இந்தப்படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்தேன்..
 
அதுவும் கூட, இது வழக்கமான ஹீரோ படம் என்றால் நடிக்கும் எண்ணத்தை மூட்டைகட்டி வைத்திருப்பேன். ஆனால் இந்த கதை என்னை நடிக்க ஒப்புக்கொள்ள வைத்துவிட்டது.இயக்குனர் காளி ரங்கசாமியும் எனது எளிமையான தோற்றத்தை பார்த்து இந்தக்கதைக்கு நான் பொருந்துவேன் என நம்பினார். நான் பணியாற்றிய படங்களின் பாடல்களில் கூட கதையைவிட்டு வெளியே செல்லாமல்தான் நடனம் அமைப்பேன்..
 
அதனால் இதிலும் நடிக்கிறேன் என தெரியக்கூடாது என்பதில் கவனமாக இருந்தேன். அதனால் இயக்குனர் என்ன சொல்லிக்கொடுத்தாரோ அதை மட்டும் செய்துள்ளேன்.
 
இந்தப்படம் வெளியானபின் பலரிடம் நிச்சயம் தாக்கத்தை ஏற்படுத்தும்.. இந்தப்படத்தை பார்த்து பலர் திருந்தினாலும் திருந்தலாம்.
 
 இந்தப்படத்தில் குப்பை அள்ளுபவராக நடித்துள்ளேன். இந்தப்படத்திற்காக குப்பை வண்டியுடன் சுற்றினேன்.. நிஜமாகவே குப்பைகளையும் அள்ளினேன்.
 
ஒரு குப்பையில் என்னவெல்லாம் இருக்கும் என நீங்கள் நினைப்பீர்களோ அதையெல்லாம் தாண்டி நினைக்காதது எல்லாம் அதில் இருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தேன்.
 
குப்பை அள்ளுபவர்களில் சிலர் அவற்றை சகித்துக்கொண்டு வேலை செய்வதற்காகவே குடிக்கிறார்கள் என்பதும் இன்னும் சிலர் குடிக்காமலேயே இந்த வேலையை செய்கிறார்கள் என நேரில் கண்டபோதுதான்,
குப்பை அள்ளுபவர்களின் வாழ்வின் உண்மையான சிரமங்களும் அவர்கள் எப்படி போற்றி வணங்கப்படவேண்டியவர்கள் என்பதையும் அறிந்துகொண்டேன்.
 
 அப்போதிருந்து குப்பை அள்ளுபவர்கள் எதிர்ப்பட்டால் சில நிமிடங்கள் அவர்களுடன் நின்று பேசிவிட்டுத்தான் போகிறேன். குப்பை வண்டிகள் கடந்து சென்றால் மூக்கை பொத்திக்கொள்வார்கள்.. நான் அப்படி செய்வதில்லை.
 
ரோட்டில் குப்பை கிடந்தாலோ, அல்லது யாரவது குப்பையை நடுரோட்டில் வீசினாலோ உடனே அதை எடுத்து அப்புறப்படுத்த மனசு துடித்தது. பொதுவாக குப்பை அள்ளுபவர்கள் தங்களின் பாதுகாப்பிற்காக மாதம் இரண்டுமுறை தடுப்பூசி போட்டுக்கொள்வார்கள்.
 
நானும் அப்படி ஊசி போட்டுக்கொண்டுதான் இந்தப்படத்தில் நடித்தேன்.
 
 இந்தப்படத்தில் எனது உயரத்திற்கு கதாநாயகி கிடைப்பது சிரமமாக இருந்தது. அப்படியே து வந்தாலும் கதாநாயகியின் கேரக்டரை கேட்டுவிட்டு,
 
அதில் நடிக்க தயக்கம் காட்டினார்கள். ஒரு வழியாக வழக்கு எண் மனிஷா எனக்கு ஜோடியாக கிடைத்தார்.
 
அவரும் என்னைவிட இரண்டு இன்ச் அதிகம் தான். இந்தப்படத்திலும் பாடல்கள் உண்டு.. நான் தான் நடனத்தை வடிவமைத்துள்ளேன்.ஆனால் அதுகூட, நான் ஹீரோ என்பதற்காக இல்லாமல் கதாபாத்திரத்தின் தன்மையறிந்து யதார்த்தம் மீறாமல் தான் நடனக்காட்சிகளை வடிவமைத்துள்ளேன்.
 
 நடிகனாக ஆகிவிட்டதால் நடனத்தை குறைத்துக்கொண்டு விடுவீர்களா என கேட்கிறார்கள்.. நடனம் எனது குலசாமி போல.. அதை எந்தநாளும் மறக்க முடியாது.
 
நடிப்பு என்பது பழனி முருகன் தரிசனம் போல.. எப்போது அழைக்கிறாரோ அப்போது மட்டும் போய் பார்த்துவிட்டு வரவேண்டியதுதான். 
 
எப்போதும் பழசை மறந்துவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருப்பவன் நான். வெற்றிகளையும் பாராட்டுக்களையும் தலைக்கு ஏற்றிக்கொள்ளவும் விரும்பமாட்டேன்.
 
. அதனால் தான் இதுவரை எனக்கு கிடைத்த விருதுகளை கூட வரவேற்பறையில் வைக்காமல் தனியாக ஒரு அறையில் போட்டு பூட்டி வைத்துவிட்டேன்” என்கிறார் தினேஷ் மாஸ்டர் வெள்ளந்தியாக .


படத்தின் இயக்குனர் காளி ரங்கசாமி , “சத்தியமங்கலம் பக்கத்தில் வீரப்பனூர் தான் என் சொந்த ஊர்.. கல்லூரி படிப்பை முடித்துவிட்டு சினிமாவுக்கு வந்தவன், அப்படி இப்படி என போராடி இயக்குனர் எழிலிடம் உதவியாளராக சேர்ந்து பணியாற்றினேன்..

பின்னர் இயக்குனர் அஸ்லமிடம் இணை இயக்குனராக சேர்ந்து ‘பாகன்’ படத்தில் வேலை பார்த்தேன்.. இதோ இப்போது ‘ஒரு குப்பை கதை’ படம் மூலம் இயக்குனராகியுள்ளேன்..
 
 இயக்குனர் அஸ்லம் எனது நீண்டகால நண்பர், உறவினர்.. அவர் ‘பாகன்’ படம் இயக்கியபிறகு, அவரைப்போல என்னையும் ஒரு இயக்குனராக்கி அழகு பார்க்க விரும்பினார்.. எனக்காக பல தயாரிப்பாளர்களிடம் சிபாரிசு செய்தார்.
 
ஒருகட்டத்தில் தனது பட வேலைகளை எல்லாம் தள்ளிவைத்து விட்டு நானே படத்தை தயாரிக்கிறேன் என கூறி இந்தப்படத்தை ஆரம்பித்து என்னை இயக்குனராக்கினார்.
 
அவருடன் நண்பர்கள் ராமதாஸ், என்.அரவிந்தன் ஆகியோரும் பின்னர் தயாரிப்பில் இணைந்துகொண்டனர்.
 
 எனக்கு சின்னவயதில் இருந்தே கமர்ஷியல் படங்களை விட, நம்மிடம் தாக்கத்தை ஏற்படுத்தும் கொஞ்சம் சீரியசான படங்கள் தான் பிடிக்கும்.. கமர்ஷியல் படங்களை அந்த நேரத்தில் ரசித்துவிட்டு மறந்துவிடுவோம்..
 
ஆனால் முள்ளும் மலரும், உதிரிப்பூக்கள் போன்ற படங்கள் நீண்ட நாட்கள் நம் மனதில் நிற்கும். பின்னாளில் நாம் படம் இயக்கினால் அப்படி ஒரு படத்தை தான் இயக்கவேண்டும் என அப்போதே முடிவுசெய்து விட்டேன்.அதேசமயம் இந்தப்படத்தை தயாரிப்பதாக இயக்குனர் அஸ்லம் சொன்னபோது, நான் தயக்கத்துடன், முதல் படம் தயாரிக்கும் நீங்கள் கமர்ஷியலாக படம் தயாரிக்கலாமே, இது ரிஸ்க் இல்லையா என கேட்டேன்..
 
அதற்கு அஸ்லம் இந்தப்படத்திலும் கமர்ஷியல் இருக்கிறது.. இது நல்ல கதை.. நல்ல கதை தான் கமர்ஷியலாக வெற்றிபெறும்.. மைனா, ஜோக்கர் என நம் கண் முன்னே உதாரணங்கள் இருக்கின்றன என தைரியமூட்டினார்.
 
 நம் தினசரி வாழ்க்கையில் தவிர்க்கமுடியாமல், ஏதோ ஒரு விதத்தில் நாம் சந்திக்கும் கதாபாத்திரம் தான் குப்பை அள்ளும் மனிதர்கள்.. அவர்களை பார்க்கும்போதெல்லாம் இவர்களின் கதாபாத்திரத்தை படத்தில் கொண்டுவரவேண்டும் என நினைப்பதுண்டு..
 
அதேசமயம் குப்பை அள்ளுபவர்களின் வாழ்க்கையை, அவர்களது பிரச்சனைகளை மையப்படுத்தி இந்தப்படத்தை எடுக்கவில்லை.
 
குப்பை அள்ளும் மனிதனின் ஒருவனின் வாழ்க்கை, அவனது குடும்பம், அதில் ஏற்படும் பிரச்சனை என்றுதான் கதை சொல்லியிருக்கிறேன்.
 
 இந்தக் கதையில் அப்பாவியான கணவன் கதாபாத்திரத்திற்கு ஏற்ற ஒரு நபரை தேடவேண்டும் என நினைத்தபோது கொஞ்சம் புதிய முகமாக இருந்தால் நன்றாக இருக்கும் என்பதில் உறுதியாக இருந்தேன்.
அதற்கேற்றவாறு டான்ஸ் மாஸ்டர் தினேஷை அழைத்து வந்தார் தயாரிப்பாளர் அஸ்லம். அவரும் நான் உருவாக்கி வைத்திருந்த கதாபாத்திரத்திற்கு இயல்பாக உயிர்கொடுத்திருக்கிறார்.
 
 அவரை கதாநாயகன் ஆக்கியபிறகு அவரது உயரத்திற்கு ஹீரோயின் தேடுவதில் கொஞ்சம் சிரமம் இருந்தது. அதேசமயம் மனப்பொருத்தம் இல்லாமல் வாழும் கணவன்-மனைவி பற்றிய கதை என்பதால், 
 
நாயகி, நாயகனை விட கொஞ்சம் உயரமாக இருந்தாலும், அது கதைக்கான லாஜிக்காகவே இருக்கும் என்பதால் அந்த கோணத்தில் நாயகியை தேடினோம்..
 
 ஆனால் தினேஷ் மாஸ்டர் ஹீரோவா என ஆர்வமாக நடிக்க வந்த சில கதாநாயகிகள் கூட, கதாநாயகி கேரக்டரை பற்றி கேட்டதும்  இதில் நடிக்க தயங்கினார்கள்.. காரணம் கதைப்படி ஒரு குழந்தைக்கு அம்மாவாக நடிக்க வேண்டி இருந்தது.
 
ஆனால் இந்த கதையை கேட்டதும் உடனே சம்மதம் சொல்லிவிட்டார் ‘வழக்கு எண்’ மனிஷா. நாயகனுக்கு சமமான கதாபாத்திரம், கதையை தனது தோளில் சுமந்து செல்லக்கூடிய கதாபாத்திரம்.. அதை சரியாக செய்திருக்கிறார் மனிஷா.
குடும்ப கதை என்பதே கத்தி மேல் நடப்பது மாதிரியான விஷயம்.. கொஞ்சம் அசந்தால் சீரியல் மாதிரி ஆகிவிடும் அபாயம் இருக்கிறது.
 
அதனால் படம் ரசிகர்களுக்கு போராடிக்க கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன்.. அந்த வேலையை யோகிபாபு படம் முழுக்க கச்சிதமாக செய்திருக்கிறார்.    
 
நம் சமுதாயத்தில் குடும்ப அமைப்பு என்பது மிக முக்கியமானது.. அதை எக்காரணம் கொண்டும் சிதைய விடக்கூடாது..
 
கணவன் மனைவிக்குள் ஏற்படும் சின்னச்சின்ன கருத்து வேறுபாடுகளை ஊதி பெரிதாக்காமல் விட்டுக்கொடுத்து போய்விடுவது நல்லது, அப்படி இல்லாவிட்டால் குடும்பத்தை அது எப்படி பாதிக்கும் என்பதை அழுத்தமாக சொல்லியிருக்கிறேன்.
 
​தயாரிப்பாளராக மாறிய இயக்குனர் அஸ்லம் இந்தப்படத்தை எடுத்து முடிக்க ரொம்பவும் பக்கபலமாக இருந்தார்.. கண்ணம்மாபேட்டை சுடுகாட்டில் படப்பிடிப்பு நடத்தியபோது சிலர் குடித்துவிட்டு, பணம் கேட்டு படப்பிடிப்பை நடத்தவிடாமல் தகராறு செய்தார்கள்.
 
உடனே தயாரிப்பாளர் அஸ்லம் அவர்கள் முன்னே வந்து ஒரு மிகப்பெரிய வி.ஐ.பிக்கு போன் செய்வது போல பாவ்லா செய்தார்.உடனே பயந்துபோன அவர்கள், ஏன் சார் அவருக்கு போன் போட்டீங்க.. இது அவரு படமா என கேட்டு, அப்படியே சுபாவம் மாறி, எங்களுக்கு உதவிகள் செய்ய ஆரம்பித்து விட்டார்கள்..
 
இப்படி படம் இறுதிக்கட்டத்தை எட்டும் வரை பல சிக்கல்களை திறமையாக கையாண்டார் அஸ்லம். இறுதியாக இந்தப்படம் உதயநிதி சாரின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் கைகளுக்கு போன பிறகு, 
 
இந்தப்படத்தின் வெற்றி என்பது கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது என்றே சொல்லலாம்” என்கிறார் இயக்குனர் காளி ரங்கசாமி. ​

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *