
பொங்கல் திருநாளை முன்னிட்டு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
காஞ்சிபுரம் மாவட்டம் வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக பூங்கா நிர்வாகம் கூறியுள்ளது. வண்டலூர் உயிரியல் பூங்காவில் வரும் பொங்கலை முன்னிட்டு 14.01.2018 முதல் 16.01.2018 வரை வரும் பூங்காவிற்க்கு வந்து பார்வையிடும் பொதுமக்களுக்கு வசதிகள் மற்றும் முன்னேற்பாடுகள் குறித்து பிற துறை அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் பூங்கா இயக்குனர் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் காஞ்சிபுரம் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர், மாவட்ட வருவாய்த்துறை அலுவலர், தீயணைப்புத்துறை கோட்ட அலுவலர், மின்துறை, போக்குவரத்துத்துறை,குடிநீர் வாரியம், சுகாதாரத்துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.கூட்டத்தில் பூங்காவிற்க்கு வரும் பார்வையாளர்களுக்கான பாதுகாப்பு வசதிகள் ,போக்குவரத்து வசதிகள்,அவசர கால உதவிகள் ஆகிய வசதிகள் மேற்கொள்ள முடிவுகள் எடுக்கப்பட்டன.
பின்னர் இது குறித்து பூங்கா நிர்வாகத்தின் சார்பில் செய்தியாளர் சந்திப்பில் பூங்கா இணை இயக்குனர் சுதா கூறுகையில் வரும் 2018 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவிற்க்கு வரும் பார்வையாளர்களுக்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்ப்பட்டுள்ளன.போக்குவரத்துத்துறை உதவியுடன் சிறப்பு பேருந்துகள் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. காவல் துறை உதவியுடன் பொதுமக்களுக்கு பாதுகாப்பு வசதிகள் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
பூங்கா பார்க்கிங் மட்டுமின்றி வெளி வாகனங்கள் விட கூடுதல் பார்க்கிங் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. வரும் மக்களுக்கு குடிநீர் வசதி கழிப்பறை வசதி நெருக்கடி இல்லாமல் அனுமதி சீட்டு வாங்கி செல்ல புதிய டிக்கெட் கவுண்டர்கள் திறக்கப்படவுள்ளது. பொதுமக்கள் பாதுகாப்பு வசதிக்காக சிசிடிவி பொருத்தப்படவுள்ளன. எனவே பார்வையாளர்கள் எந்த ஒரு கஷ்டமின்றி பூங்காவை பார்வையிடலாம் என கூறினார்.மேலும் அவர் கூறுகையில் இங்கு மொத்தம் 2378 விலங்குகள் உள்ளது. இந்த ஆண்டு நெருப்பு கோழி, கருகுமான், ஓநாய் ,காட்டுப்பூனை, சிங்கம், காட்டெருமை, சாம்பல் நிற மலை அணில்,நீலமான்,காட்டுபன்றி,நீர்யானை, ஆகிய இருபது வகையான விலங்குகள் சுகாதாரமான இடம், நல்ல மருத்துவ வசதி, வாழ்விட பராமரிப்பு, சத்தான உணவு, இயற்கை ஒட்டிய சூழல் பராமரிப்பு மூலம் இந்த ஆண்டு விலங்குகள் இனப்பெருக்கம் அதிகரித்துள்ளன மற்றும் இந்த பூங்கா இயற்கை சூழலோடு அமைந்துள்ளதால் விலங்குகள் இயற்கை சூழலளில் உள்ளன என்றார்.மேலும் பொதுமக்கள் பார்வையிட அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன என இவ்வாறு கூறினார்.உடன் பூங்கா மக்கள் தொடர்பு அலுவலர் சண்முகம்,இந்திய வன சேவை ரேஞ்சர் லஷ்மணன் ஆகியோர் உடன் இருந்தனர்.