April 1, 2023

7th Research & Science Day – Press release – reg

SRMIST ஆராய்ச்சி நாள் விழா 2018
இளம் ஆராய்ச்சியாளர்கள் – பதக்கங்கள் வழங்கிப் பாராட்டப் பெற்றனர்.
SRM அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம், இக்கல்வி நிறுவனத்தில் பயிலும் இளம் ஆராய்ச்சியாளர்களை அவர்களின் ஆராய்ச்சியில் ஊக்குவிக்கும் பொருட்டு 01.03.2018 அன்று ஆராய்ச்சி நாள் விழா நடத்தியது. பல்வேறு ஆராய்ச்சிப் புலங்களில் இளம் மாணவர்கள் தங்களுடைய ஆராய்ச்சிச் சிந்தனைகளை வெளிப்படுத்துகிற சிறப்பான வாய்ப்பினை இந்த ஆராய்ச்சி நாள் வழங்குகின்றது. மாணவர்கள் இப்படிப்பட்ட ஆராய்ச்சிகள் நடத்துவதன் மூலமாக இந்தச் சமூகத்திற்கும் அறிவியல் மற்றும் தொழில்நுட்பப்புலத்திற்கும் பங்களிப்புச் செய்ய இந்த ஆராய்ச்சி நாள் அவர்களை வெகுவாக ஊக்குவிக்கிறது.
01.03.2018 அன்று நடந்த ஆராய்ச்சி நாள் விழாவில், டெல்லி ஐ.ஐ.டி.யின் இயக்குநர் பேராசிரியர் வி. இராம்கோபால்ராவ் தலைமை விருந்தினராகப் பங்கேற்று உரை நிகழ்த்தினார். எஸ்.ஆர்.எம். கல்வி நிறுவனத்தின் நிறுவனர் வேந்தர் டாக்டர் தா.இரா. பாரிவேந்தர் இளம் ஆராய்ச்சியாளர்களுக்கு மிகவும் ஊக்கம் அளிக்கும் வகையில் சிறப்புரை ஆற்றினார். SRM கல்வி நிறுவனத்தின் பொறியியல், அடிப்படை அறிவியல்கள், மானுடவியல், மருத்துவம் மற்றும் மருத்துவ அறிவியல்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த ஏறத்தாழ 2700 மாணவ ஆராய்ச்சியாளர்களும் ஆசிரியப் பெருமக்களும் ஆய்வுக் கட்டுரை வழங்குவதற்குரிய தங்களுடைய ஆய்வுச் சுருக்கங்களை அளித்திருந்தனர். இவற்றுள் 797 ஆய்வுச் சுருக்கங்கள், தேர்வுக்குழுவினரால் ஆய்வுக்கட்டுரைகளாக வழங்கத் தேர்ந்தெடுக்கப்பட்டன.
ஆராய்ச்சி மாணவர்கள் பெருமளவில் திரண்டிருந்த இந்த விழாவில், வேந்தர் அவர்கள், இளம் ஆராய்ச்சியாளர்கள் கல்வி ஆராய்ச்சியிலும் தொழில்துறை ஆராய்ச்சியிலும் விரிவான பங்களிப்பை அளிக்க முடியும் என்று நம்பிக்கையூட்டினார். இளம் மாணவர்கள், ஆராய்ச்சிச் சூழ்நிலைக்கு உட்படுத்தப்பட்டால் அவர்களுடைய புதிய சிந்தனைகள், புதிய கண்டுபிடிப்புகளுக்கு அடிப்படையாக அமையும் என்றும் இது தொழில்நுட்ப வளர்ச்சிக்குப் பங்களிக்கும் என்றும் விளக்கியுரைத்தார்.
ஒவ்வொரு துறையிலும் தேசிய அளவிலும் பன்னாட்டு அளவிலும் ஆராய்ச்சிப் பட்டறிவு மிக்க பேராசிரியர்களைக் கொண்டு மாணவர்களுடைய ஆராய்ச்சித் திறனையும் பி.டெக். நிலையிலிருந்தே அவர்களின் ஆராய்ச்சி ஆர்வத்தையும் வளர்க்கும் வகையில் SRM கல்வி நிறுவனம் செயல்படுகிறது என்று அவர் எடுத்துரைத்தார். டாக்டர் தா. இரா. பாரிவேந்தர் அவர்கள் இளம் மாணவர்கள் எப்பொழுதுமே புதியதாகச் சிந்திப்பதற்கும் புதியதாகச் செய்வதற்கும் முயற்சி செய்கிறார்கள் என்றும் இதுவே கல்வி ஆராய்ச்சிக்குப் பின்னணியாக அமைகிறது என்றும் தெரிவித்தார். மாணவர்கள் இளமையிலேயே ஆராய்ச்சிப் பண்பை அடைவதற்கும் தங்களுடைய சிந்தனைகளை வெளிப்படுத்துவதற்கும் வளர்த்துக் கொள்வதற்கும் ஆராய்ச்சி நாள் வழி அமைத்துக்கொடுக்கிறது என்றார்.
இந்த ஆராய்ச்சிக் கட்டுரைப் போட்டியில் வெற்றிபெற்ற ஆராய்ச்சியாளர்களுக்கு 65 தங்கப்பதக்கங்களையும், 48 வெள்ளிப் பதக்கங்களையும் சான்றிதழ்களையும் அவர் வழங்கிச் சிறப்பித்தார். இது அவர்களுடைய ஆராய்ச்சி ஆர்வத்தை வளர்த்துக்கொள்ளவும் அதை மேலும் மேலும் தொடரவும் வழிவகுக்கும் என்றும் இத்தகைய ஆராய்ச்சிச் சூழ்நிலையை அவர்களுடைய கல்வித் திட்டத்திலும் ஏற்படுத்தித் தருவதிலும் மேலும் கூடுதலான ஆராய்ச்சி அடிப்படையிலான செயற்பாடுகளுக்குத் துணையாக நிற்பதிலும் எஸ்.ஆர்.எம். வெகுவாக மகிழ்ச்சி அடைகிறது என்று கூறித் தம் உரையை முடித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *