‘நடிகையர் திலகம்’ என் பார்வையில்….
சாவித்ரிம்மாவை எனக்கு மிகவும் பிடிக்கும், அவர், என் அம்மாவின் பேரபிமான நடிகை என்பதால் ! “எவ்ளோ அழகு.. என்னா talent.. அந்தப் பாவிகிட்ட (ஜெமினி கணேசன்) ஏமாறாம இருந்திருந்தா கடைசி வரை மஹாராணி போல வாழ்ந்திருக்க வேண்டியவ…” என்று என் அம்மா சொல்லக் கேட்டிருக்கிறேன். சாவித்ரிம்மாவின் ரசிகை / ரசிகர்களாக இருந்த / இருக்கும் பலரது ஆதங்கமும் இதுதான்.
ஜெமினி குடும்பத்தின் எதிர்ப்புக்கு அஞ்சி அந்த உண்மைகளைப் படத்தில் இருட்டடிப்பு செய்திருப்பார்கள் என நான் நினைத்ததற்கு மாறாக, சில உண்மைகளை வெளிப்படக் காட்டிய நேர்மைக்காக டைரக்டர் நாக் அஷ்வினை கைகுலுக்கிப் பாராட்டினேன்.
சிறுமிப் பருவத்திலிருந்து இறுதிக் காலத்தில் கோமா நோயாளியாகும் வரையிலான சாவித்ரிம்மாவின் வாழ்க்கை வரலாற்றைச் சித்திரிப்பதில், அவரது வெகுளித்தனம், தயாளக் குணம், அசாத்திய திறமைகள், பிடிவாதம் என பலவற்றையும் நம் கண்முன் கொண்டுவந்து கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் நம் கவனத்தைக் கட்டிப் போட்ட கீர்த்தி சுரேஷ் கிடைத்த வரத்தைக் கச்சிதமாகப் பயன்படுத்தியிருக்கிறார் ! இந்தப் படத்துக்காக கீர்த்திக்கு சிறப்பான விருதுகள் கிடைப்பது நிச்சயம் !
ஒரு பிரபலமான நடிகை அனைவரையும் எப்படி நம்பி ஏமாறுகிறார் என்பதும், எப்படி மது பழக்கத்திற்கு அடிமையாகி உடல்நலத்தையும் கெடுத்துக் கொள்கிறார் என்பதையும் நேர்த்தியாக சொல்லப்பட்டுள்ள படம் இது.
ஏற்கனவே இரண்டு திருமணங்கள் செய்தவரை மணந்து கொள்ளவதும், சில பிடிவாத குணங்களும் எவ்வளவு திறமைகள் இருந்தாலும் எப்படிப்பட்ட சூழலை உருவாகும் என்பதே இப்படம்.
சாவித்திரி அம்மா அவர்களைப் பற்றிய பலவிதமான பொய் கதைகள், சம்பவங்கள் இதுநாள் வரையில் பரப்பி வந்தவர்களுக்கு இப்படம் ஒரு சாட்டையடியாக விளங்கும்.
கடைசி காலங்களில் சாவித்திரி அவர்களுக்கு உதவியர்களும், அவருக்கு அதிக துரோகம் செய்தவர்களும் இதில் மிஸ்ஸிங்
படத்தின் மற்றொரு ப்ளஸ், ஒளிப்பதிவாளர் டேனி ஸா – லோ ! 1980 களில் வாணி (சமந்தா) கதாபாத்திரத்தின் வாயிலாக விவரிக்கப்படும் கதை, அதற்கு முந்தைய முப்பதாண்டுகளுக்கும் 1980 களுக்குமாக ஊடாடும்போது கால மாற்றங்களைக் கச்சிதமாகச் சித்திரிக்கிறது !
சாவித்ரி என்ற தேவதையின் சிறகுகளை முறித்துப் போட்ட வில்லனாக (சில விஷயங்கள் மறைக்கப்பட்ட பின்னரும்) வெளிப்படும் ஜெமினி கதாபாத்திரம்… இன்றைய நடிகைகளுக்கு மட்டுமல்ல ; எல்லா பெண்களுக்கும் ஒரு முன்னுதாரணப் படிப்பினை.
தெலுங்கில் மகாநதி என்ற பெயரில் வெளியாகி அனைவரையும் கவர்ந்துள்ளது.
தமிழில் மாபெரும் வெற்றி பெற வாழ்த்துக்கள்.
#நடிகையர் திலகம் என்றால் அது சாவித்திரி அம்மா மட்டுமே.