May 31, 2023

sai dhanshika picture

தெலுங்கில் அறிமுகமாகும் தன்ஷிகா
 
‘சினம்’ என்ற குறும்படத்தில் நடித்திருந்தார் நடிகை சாய் தன்ஷிகா. இந்த குறும்படம் கொல்கத்தாவில் நடைபெற்றகல்ட் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. அப்போது சிறந்த நடிகைக்கான விருது உள்பட எட்டு விருதுகள் ‘சினம் ’ குறும்படத்திற்கு கிடைத்தது. மேலும் நார்வே திரைப்படவிழாக்களிலும் சிறந்த நடிகைக்கான விருதையும், கலிஃபோர்னியாவில் நடைபெற்ற சர்வதேச திரைப்படவிழாவிலும் திரையிடப்பட்டு விருதினை வென்றிருக்கிறது ‘சினம்’. சிறந்த நடிகைக்கான விருதினை வென்றிருந்த மகிழ்ச்சியில் இருந்த நடிகை சாய்தன்ஷிகாவை  சந்தித்து வாழ்த்து சொல்லிவிட்டு உரையாடத் தொடங்கினோம்.
 
‘நான் தற்போது மகிழ்ச்சியாக இருக்கிறேன். ஒரு கதாசிரியர்கள் தங்களின் மனதில் ஒரு நடிகையை வைத்து திரைக்கதையை உருவாக்குகிறார்களோ அந்த தருணம் தான் அனைத்து நடிகைகளுக்கும் சந்தோஷமான தருணம். எனக்கு அப்படி ஒரு அனுபவம் அண்மையில் ஏற்பட்டது.
 
தெலுங்கு திரையுலகில் பிரபலமான கதாசிரியர் கிரண். அவர் என்னைச் சந்தித்து, உங்களை மனதில் வைத்து மேளா என்ற ஒரு திரைக்கதையை உருவாக்கியிருக்கிறேன் என்றார். இந்த கதையின் மூலமாகத்தான் தான் இயக்குநராக அறிமுகமாகிறேன். இது கதையின் நாயகியை மையப்படுத்திய திரைக்கதை. உண்மை சம்பவங்களின் அடிப்படையில் இதனை உருவாக்கியிருக்கிறேன் என்று சொல்லிவிட்டு முழு கதையையும் சொன்னார். அதை கேட்டுவிட்டு நான் பிரமிப்பில் ஆழ்ந்துவிட்டேன். அந்தளவிற்கு அந்த கதை என்னை கவர்ந்தது. உடனே நடிக்க ஒப்புக்கொண்டேன்.’என்றார்.
 
இந்த படத்தில் நீங்கள் இரட்டை வேடத்தில் நடிப்பதாக செய்திகள் வெளியானதே உண்மையா? என கேட்டபோது, அது முழு உண்மையல்ல. ஆனால் ரசிகர்களுக்கு இரட்டை வேடமாகத்தான் தெரியும். இதைப் பற்றி மேலும் விவரமாக சொல்லக்கூடாது. படத்தில் நான் இரண்டு பரிமாணங்களில் நடிக்கிறேன். அதில் ஒரு கேரக்டரில் பேயாக நடிக்கிறேன்.
 
இந்த படத்தில் எனக்கு ஜோடி என்று யாருமில்லை. ஆனால் தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் பிரபலமான நட்சத்திரங்கள் இதில் நடித்திருக்கிறார்கள். தெலுங்கு நடிகர் சூர்யா தேஜ் நாயகனாக நடித்திருக்கிறார். ஆலி, பரத்ரெட்டி, முனிஸ்காந்த், ஜாங்கிரி மதுமிதா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.’ என்றார்.
 
இந்த படத்தில் நீங்கள் சண்டை காட்சிகளில் நடித்து அசத்தியிருக்கிறீர்களாமே..? என கேட்டபோது, படத்தின் கதையை கேட்டபோதே நான் சண்டை காட்சிகளில் டூப் போடாமல் நடிக்கிறேன் என்று சொல்லிவிட்டேன். பொதுவாக நான் நடிக்கும் படங்களில் ஆக்சன் காட்சிகளில் நடிக்கவேண்டும் என்றால் நான் டூப் போடாமல் நடிப்பதைத்தான் விரும்புவேன். அதனால் இந்த படத்திலும் சண்டை காட்சிகளில் டூப் போடாமல் ரோப் ஷாட் மற்றும் உயரத்திலிருந்து குதிப்பது போன்ற காட்சிகளில் நிஜமாகவே நடித்து இயக்குனரின் பாராட்டை பெற்றேன்.
 
இந்த படத்தில் இடம்பெறும் அழகான பாடல் காட்சிகளிலும், நடன இயக்குநர் சந்திர கிரண் அவர்களின் நடன அமைப்பிற்கு ஏற்ப ஐம்பது முறைக்கு மேல் ஒத்திகை பார்த்து ஆடியிருக்கிறேன்.
 
‘மேளா’ நான் தெலுங்கில் அறிமுகமாகும் முதல் படம். தமிழ் மற்றும் தெலுங்கிலும் இந்த படம் ஒரே சமயத்தில் வெளியாகவிருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *