தெலுங்கிலும் அறிமுகமாகும் ‘மீசைய முறுக்(கு)’கிய நடிகர்

‘மீசைய முறுக்கு ’ என்ற படத்தின் மூலமாக அறிமுகமாகியிருக்கிறார் நடிகர் ஆனந்த்ராம். படத்தில் ஆதியின் தம்பியாக நடித்த இவரின் நடிப்பைக் கண்டு அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

இவர் பேசுகையில்,‘ நடிகனாகவேண்டும் என்று சிறுவயதிலேயே ஆசைப்பட்டேன். லயோலாவில் விஸ்காம் படித்து முடிக்கும் போது கூத்துப்பட்டறை, அல்கமி, லண்டன் டிரினிட்டி நடிப்பு பயிற்சி பள்ளி ஆகிய இடங்களில் பயிற்சிப் பெற்று என்னுடைய திறமைகளை வளர்த்துக் கொண்டு, கடந்த நான்காண்டுகளுக்கும் மேலாக நல்லதொரு வாய்ப்பிற்கான தேடலில் இருந்தேன்.

பிறகு நண்பர்களின் உதவியுடன் ‘மீசைய முறுக்கு’ படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இப்படத்தில் ஆதியின் தம்பியாக நடித்தேன். படபிடிப்பு முழுவதும் இளைஞர் பட்டாளம் என்பதால் ஜாலியாக இருந்தது. சீனியரான விவேக் அவர்கள் பல இடங்களில் எங்களுக்கு பேருதவி செய்திருக்கிறார். இயக்குநர் சொன்னதற்காக பாக்ஸிங் கூட கற்றுக்கொண்டேன். இந்த படத்தை தியேட்டரில் ரசிகர்களுடன் பார்த்தேன். ஒரு அறிமுக நடிகர் என்றில்லாமல் ரசிகர்கள் நான் வரும் காட்சிகளில் கைத்தட்டி விசில் அடித்த அனுபவம் எனக்குள் சிலிர்ப்பை தந்தது. அந்த தருணத்தில் ஆனந்தக் கண்ணீருடன் ஆதியைப் பார்த்து நன்றி சொன்னேன். அவரோ இது தொடக்கம் தான். உன்னுடைய வளர்ச்சியை காண ஆசைப்படுகிறேன் என்றபோது, அவரின் கைப்பிடித்து நிச்சயமாக உங்களைப் போன்ற நல்லவர்களின் ஆதரவுடன் முன்னேறுவேன் என்றேன்.

‘மீசைய முறுக்கு ’படத்தின் மூலம் ஒரு நல்ல நட்பு வட்டாரம் கிடைத்திருக்கிறது. இதனை தக்கவைத்துக் கொண்டே தொடர்ந்து திரையுலகில் நல்ல கதாப்பாத்திரங்களில் நடித்து குணசித்திர நடிகராகவும், வில்லன் நடிகராகவும், ஹீரோவாகவும் சாதிக்கவேண்டும் என்ற எண்ணமுமிருக்கிறது..எல்லா வகையான சவாலான கேரக்டர்களிலும் நடிக்கும் சிறந்த நடிகராகவே இருக்க விரும்புகிறேன்.‘ என்றார் ஆனந்த்ராம்.

நடிகர் ஆனந்த்ராமிற்கு தமிழைத் தொடர்ந்து தெலுங்கிலும் முன்னணி இயக்குநர் ஒருவரின் பெயரிடப்படாதப் படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்து அறிமுகமாகவிருக்கிறார் என்பதை தெரிந்ததும் அவருக்கு வாழ்த்து தெரிவித்தோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *