“வில்லனாக நடிக்கவே விருப்பம்” ; களத்தூர் கிராமம் மிதுன்குமார் ஓபன் டாக்..!

 
 
வில்லனாக நடிக்கவே விருப்பம்” ; களத்தூர் கிராமம் மிதுன்குமார் ஓபன் டாக்..!
 
சமுத்திரக்கனியின் உதவியாளர் டைரக்சனில் நடிக்கிறார் களத்தூர் கிராமம் மிதுன்குமார்..!
 
 
களத்தூர் கிராமம் படத்தில் கிஷோரின் மகனாக நடித்தவர் நடிகர் மிதுன்குமார்.. பிரபல தயாரிப்பாளரான எஸ்.ஏ.ராஜ்கண்ணுவின் மகனான இவருக்கு ‘களத்தூர் கிராமம்’ படம் நல்லதொரு அடையாளத்தை கொடுத்துள்ளது. திரைப்பட கல்லூரியில் நடிப்பு பயிற்சி பெற்றதுடன் இரண்டு படங்களில் உதவி இயக்குனராகவும் பணியாற்றியுள்ளார். 
 
களத்தூர் கிராமத்தில் இவர் நடித்த வேடம் நல்லவரா கெட்டவரா என்று கேட்டால் தெரியலையே பாஸ் என்கிறார்.உதவி  இயக்குனராக இருந்த நான் இந்த படத்தில் நடிக்க இயக்குனர் மகிழ் திருமேனி அவர்களே காரணம். படம் பார்த்துவிட்டு வந்த இவரது தந்தை கூட நெகடிவாக எதுவும் சொல்லவில்லை என சந்தோஷப்படுகிறார். அடுத்ததாக இவரை வைத்து இவரது தந்தையே படம் தயாரிக்கவும் இருக்கிறாராம்.
 
தொடர்ந்து ஹீரோவாக நடிக்க ஆசை என்றாலும் கூட, இவரது விருப்பம் என பார்த்தால் வில்லனாக நடிப்பதற்குத்தான் என்கிறார் மிதுன்குமார்.. காரணம் நாடகங்களில் நடித்தபோது கூட இவரது கண்கள், சிரிப்பு ஆகியவற்றுக்காக பெரும்பாலும் வில்லன் வேடங்களே நிறைய தேடிவருமாம். தமிழ் மட்டுமல்லாது தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் நடிக்கவேண்டும் என்பது இவரது இன்னொரு ஆசை.
 
அடுத்ததாக ‘கடமை’ என்கிற குறும்படத்திற்காக தேசிய விருது வாங்கிய, இயக்குனர் ரத்தினசிவாவின் உதவியாளரான கவுதம் இயக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார் மிதுன்குமார். களத்தூர் கிராமம் படத்தில் நடித்த ரஜினி மஹாதேவையாவே இதிலும் ஜோடியாக நடிக்கிறாராம். இதுதவிர சமுத்திரக்கனியின் உதவியாளர் ரடான் ராஜா இயக்கும் படத்திலும் நடிக்க இருக்கிறார் மிதுன்குமார்.
 
சமீப நாட்களாக மெர்சல் படத்தில் மருத்துவமனை பற்றி விஜய் பேசும் வசனங்கள் சர்ச்சையை கிளப்பியுள்ளன. 
 
ஆனால் விஜய் சார் சொன்னது நிஜம்தான் என்கிறார் மிதுன்குமார் ஆம் அவரது நிஜ வாழ்க்கையில் இத்தகைய சம்பவம் நடந்ததாம்.
 
இது பற்றி மிதுன்குமார் என்ன சொல்கிறார் என கேட்டால், இதன் பின்னணியில் அவரது சொந்தக்கதை சோகக்கதை ஒன்றும் ஒளிந்துள்ளது..
 
ஒன்றரை வருடத்துக்கு முன்பு நான் இறந்து விட்டதாக எல்லாம் செய்தி வந்தது எத்தனை பேருக்கு தெரியும் என்று எனக்கு தெரியவில்லை. 
 
நான் “மதுரையில் இருந்து வாடிப்பட்டி செல்வதற்காக காரில் வந்துகொண்டிருந்தேன்.. அப்போது வாடிப்பட்டி ரயில்வே கிராசில் வேகமாக வந்து திரும்பிய அரசு   பஸ் மீது எங்கள் கார் மோதி மிகப்பெரிய விபத்தை சந்தித்தது.  நாங்கள் ‘சீட் பெல்ட்’ அணிந்திருந்தும் ‘ஏர் பேக்’ ஓபன் ஆகாததால் என்னுடன் பயணித்த  ஒருவர் சம்பவ இடத்திலேயே இறந்தார் . 108க்கு தகவல் சொல்லப்பட்டு அருகில் இருந்த அரசு மருத்துவமனைக்கு என்னை கொண்டு சென்றார்கள். 
 
அங்கே   டூட்டியில் இருந்த டாக்டருக்கு தகவல் சொல்லப்பட்டும் கூட அவர் வராமல், அவருக்கு கீழ் பணிபுரியும் ஒரு பயிற்சி நர்ஸை அனுப்பி என்னவென்று பார்க்க சொல்லியுள்ளார். அந்த நர்ஸ், என்னை ஸ்டெதாஸ்கோப் கூட வைத்து பார்க்காமல், கழுத்துக்கும் இதயத்துக்கும் செல்லும் முக்கியமான நரம்பு கட்டாகி விட்டது  என்றும் இவர் சற்று நேரத்தில்  இறந்துவிடுவார்  எனவும்  கூசாமல் சொன்னார். அதுமட்டுமல்ல என்னை அருகில் இருந்த பிளாட்பார்மில் ஒரு பிணத்தோடு  கிடத்தியும் விட்டார்கள் பின் தகவல் தெரிந்துவந்த எனது நண்பர், வேறு மருத்துவமனையில் கொண்டுபோய் சேர்த்ததால் உயிர் பிழைத்தேன்..
 
இந்த மீடியா முன் நான் இன்னொரு விஷயத்தை சொல்ல விரும்புகின்றேன்.. நாம் ஏடிஎம் கார்டு வைத்திருக்கிறோம் அல்லவா…? கார்டு வைத்திருக்கும் அதாவது பேங்கில் கணக்கு வைத்திருக்கும் ஒவ்வொருவருக்கும் நாம் பயன்படுத்தும் கார்டை பொறுத்து  15 முதல் 25 லட்ச ரூபாய் விபத்து காப்பீடு இலவசம். ஆனால் இது எத்தனை பேருக்கு தெரியும்.. சம்பந்தப்பட்ட வங்கிகளில் கேட்டால் கூட இல்லை என்பார்கள்.முதலில் இன்சூரன்ஸ் இருக்கு என சொல்லிவிட்டு பின்னர் இறந்தால்தான் என ‘ஐ சி ஐ சி ஐ’  பேங்க் என்னை ஏமாற்றி விட்டனர்.  ஆனால் இதனை குறிவைத்து சில மருத்துவமனைகள் வங்கியுடன் கூட்டு சேர்ந்து கொள்ளை அடிக்கின்றன. சொல்லப்போனால் 2ஜி ஊழலை விட இதுதான் மிகப்பெரிய ஊழல். 
 
மெர்சல் படத்தில் சொல்லப்பட்டது 200 சதவீதம் உண்மை. சீமான் அவர்கள்  கூட இதை அடிக்கடி சொல்வார். அரசு மருத்துவமனைகளில் சரியான வசதிகள் இல்லை என்பது ஒருபுறம் இருக்கட்டும். அவர்கள் நோயாளிகளை கவனிப்பதில் காட்டும் அலட்சியத்தை கண்கூடாக பார்த்தேன். விபத்தில் சிக்கிய ஒருவரை ஒரு பயிற்சி நர்ஸை விட்டு ஆய்வு செய்ய அனுப்பிய மருத்துவரை என்னவென்று சொல்வது.. மெர்சல் படத்தில் விஜய் சொன்னதில் தப்பே இல்லை. அப்படி சொன்னது தவறு என தமிழிசை சவுந்திரராஜன் ஆத்திரப்படுவது தான் தப்பு.. தப்பை தப்பென்று தானே சொல்லவேண்டும்.. இந்த விஷயத்தில் சீமான், விஜய் இருவரையும் நான் ஆதரிக்கிறேன் என்றார்.



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *