நடிகை ஸ்ருதிஹாசனும் தயாரிப்பாளராகிவிட்டாராம். ‘இஸிட்ரோ மீடியா’ என்று தனது தயாரிப்பு நிறுவனத்திற்கு பெயர் வைத்திருக்கிறார் ஸ்ருதி.
இந்த நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கப்படும் முதல் படத்தை ‘லென்ஸ்’ பட புகழ் இயக்குநர் ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணன் இயக்கவிருக்கிறார். படத்தின் பெயர் ‘த மஸ்கிட்டோ பிலாஸபி.’
‘லென்ஸ்’ படத்தின் மூலம் சர்வதேச அளவில் ஏராளமான பார்வையாளர்களின் கவனம் ஈர்த்தவர் ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணன், அத்துடன் இவரது படத்தைப் பார்த்த அனைவரும் இவரின் கதை சொல்லும் பாணியை வெகுவாக ரசித்து பாராட்டினர்.
அதிலும் குறைவான கதாப்பாத்திரங்களை வைத்துக் கொண்டு, தேவையான கருவிகளின் உதவியை மட்டும் பயன்படுத்திக் கொண்டு, எளிமையான பாணியில் கதையை சொல்வதில் தேர்ச்சிப் பெற்றவர் ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணன்.
இவரின் அடுத்த படம் குறித்த எதிர்பார்ப்பு திரை ஆர்வலர்களிடத்திலும், ரசிகர்களிடத்திலும் ஏற்பட்டிருந்தது. இந்த படத்திலும் ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணன், குறைவான கதாப்பாத்திரங்களைக் கொண்டு உச்சபட்ச எளிமையான கதை சொல்லும் பாணியைத்தான் தேர்ந்தெடுத்திருக்கிறாராம்.
இந்த படத்தின் கதை தமிழில் சொல்லப்பட்டிருந்தாலும் உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களால் புரிந்து கொள்ளப்பட்டு ஏற்றுக் கொள்ளப்படும் வகையிலேயே இது படமாக்கப்படவிருக்கிறது.
படத்தைப் பற்றி இயக்குநர் ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணன் பேசும்போது, “உலகம் முழுவதிலுமுள்ள திரைப்பட தயாரிப்பாளர்கள், தாங்கள் உருவாக்கும் கலை படைப்பை முடிந்தவரை பார்வையாளர்களுக்கு உண்மைக்கு மிக அருகில் இருக்கும்வகையில் உருவாக்குவதற்காகத்தான் கடினமாக போராடிக் கொண்டிருக்கிறார்கள்.
அந்த வகையில் இந்த ‘த மஸ்கிட்டோ பிலாஸபி’ திரைப்படம், உண்மையான வாழ்க்கை மற்றும் அதன் உண்மையான நேர விவரத்துடன் கூடிய விவரிப்பாக தயாராகவிருக்கிறது.
இதில் நான்கு நண்பர்களின் கதையின் மூலம் இந்த சமூகம் எப்படி பழங்கால மரபுகளின் வீழ்ச்சியையும், நவீனத்தின் எழுச்சியையும் எதிர்கொள்கிறது என்பதை தங்களுக்குள்ளேயே ஒரு விசாரணையின் மூலம் விவாதித்துக் கொள்கிறது.
அதாவது திரைக்கதை, வசனங்கள் இல்லாமல் சிறிய வழி உரையாடலுடன் கூடிய அடிப்படை யோசனையைப் பற்றிய படமாக படமாக்கப்பட்டிருக்கிறது.
இந்த படத்தின் தயாரிப்பின்போது, ஒரு படைப்பாளியின் சுதந்திரமான தன்னிச்சையான அதிகாரத்தை உணர முடிந்தது. இதனால் சிறிய தருணங்கள்கூட உண்மையுடன் கூடிய உயிர்ப்புள்ளதாக்கியது…” என்றார்.
ஸ்ருதி ஹாசனுடன் இணைந்தது பற்றி பேசும்போது, “இது எப்படி நடந்தது என்று நினைத்துப் பார்க்கும்போது எனக்கே கனவாகத்தான் தெரிகிறது. நான் சரிகா மேடத்துடன் ஒரு நிமிடம்தான் பேசினேன். அவர்கள் என்னுடைய திறமையை உணர்ந்து கொண்டு இந்த நிறுவனத்தில் உடனடியாக வாய்ப்பளித்தார்கள்.
என்னுடைய திறமை மற்றும் சினிமா பற்றிய என்னுடைய கோணத்தின் தன்மையை நம்பும் ஒரு குழுவுடன் இணைந்து பணியாற்றுவதை பெருமையாக கருதுகிறேன். உலக சினிமாவின் மொழியில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் இந்த படைப்பில் நானும் ஒரு பகுதியாக இருப்பதில் பெருமிதமும் கொள்கிறேன்.
உலகம் முழுவதும் ‘த மஸ்கிட்டோ பிலாஸபி’யை நல்லவிதமாக வரவேற்பார்கள் என்பதை ஆவலுடன் எதிர்நோக்கியிருக்கிறோம். உலக முழுவதும் உள்ள பார்வையாளர்களுடன் எமது பயணத்தை பகிர்ந்து கொள்ளவும் காத்திருக்கிறோம்…” என்றார் நம்பிக்கையுடன்..!
இந்தப் படத்தைப் பற்றி தயாரிப்பாளரான நடிகை ஸ்ருதிஹாசன் பேசுகையில், “எங்கள் நிறுவனமான இஸிட்ரோ, எப்போதும் புதுமையான சுவராசியமான உள்ளடக்கங்களைத்தான் நம்புகிறது. இது பல்வேறு ஆக்கப்பூர்வமான வடிவங்களைக் கொண்டதாக இருக்கிறது. அத்துடன் உலகத் தரத்திலான கதை சொல்லலையும் இது கொண்டிருக்கிறது.
நாங்கள் ‘த மஸ்கிட்டோ பிலாஸபி’ கதையை கேட்டதும், இயக்குநரை பாராட்டினோம். அத்துடன் அவரின் முந்தைய படைப்பான லென்ஸை பார்த்து வியந்தோம். எளிய கதைகளை ஆக்கப்பூர்வமாக வெளிப்படுத்துவதில் அவரின் பார்வையைக் கண்டு ஆச்சரியமடைந்தோம்.
இந்த வழக்கமான சிந்தனை பணிபுரியும்போது சவாலை கொடுக்கும் என்பதால் அவருடன் இணைந்து பணியாற்ற ஆவலாக இருக்கிறோம். இதனை இசிட்ரோ மூலம் வழங்குவதில் பெருமையடைகிறோம். அவருடன் தொழில் முறையிலான உறவு நீடிக்கும் என்றும் நம்புகிறோம்…” என்றார்.