ஆபாசப்படங்களை பார்த்த குற்றத்தினால் அமெரிக்காவில் வாடிகன் தூதராக பணியாற்றி வந்த பாதிரியாருக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் உள்ள வாடிகன் தூதரகத்தின் தலைமை தூதராக பணியாற்றி வந்தவர், பாதிரியார் கர்லோ அல்பெர்ட்டோ பகேபிலா(51). இவர் இந்தியா, ஹாங்காங் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் தூதராக பணியாற்றியவர். கடந்த 2016-ம் ஆண்டு ஜூலை மாதம், தடை செய்யப்பட்ட குழந்தைகள் ஆபாசப்படங்களை பார்த்ததாக இவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது.
இதனையடுத்து அவரை பதவி நீக்கம் செய்த வாடிகன் சங்கம், அவர் மீது சுமத்தப்பட்ட குற்றம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தது. இதுதொடர்பான வழக்கு நீண்ட நாட்களாக வாட்டிகன் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், மனஅழுத்தத்தின் காரணமாகவே தான் அந்த தவறை செய்ததாக பாதிரியார் ஒப்புக்கொண்டார்.
அதனையடுத்து அவருக்கு 5 ஆண்டுகள் 9 மாதம் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதோடு, 5,000 யூரோ அபராதமாக விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. முன்னதாக வாட்டிகன் நீதிமன்றத்தில் 30 அதிகாரிகளின் மீது பாலியல் குற்றங்கள் நிலுவையில் இருப்பதும், அவற்றில் தற்போது தான் முதன்முறையாக தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.