இயக்குனர் பா ரஞ்சித் துவக்கி வைத்த “நானும் ஒரு குழந்தை ” புகைப்படக்கண்காட்சி
புகைப்படகண்காட்சியை துவக்கி வைத்து பேசிய இயக்குனர் பா. ரஞ்சித் ….
“நானும் ஒரு குழந்தைதான்” என்கிற இந்த தலைப்பே ஒரு நம்மை ஒரு கேள்விக்கு உட்படுத்துகிறது .
வழக்கமான புகைப்படக்கண்காட்சியைப்போல் அல்லாமல் புகைப்படக்கலைஞர் பழனிக்குமார் மலமள்ளும் தொழிலாளர்களின் வலியை சொல்லும் புகைப்படத்தொகுப்பை பார்வைக்கு வைத்திருந்தது புதுமையாக இருந்தது .
புகைப்படங்கள் மூலமாக இந்த சமூகத்தில் இருக்கும் ஒரு மக்களின் வாழ்க்கையின் வலிகளை பல கேள்விகளாக நம் முன்னே வைக்கிறார் . கண் முன்னே நடக்கும் அவலத்தை தனது புகைப்படகலை மூலமாக காட்சிபடுத்தியிருப்பது பொழுது போக்குக்காக அல்லாமல் இந்த சாதிய சமூகத்தின் தற்போதைய உண்மையின் நிலையை காட்டுகிறது .
மலமள்ளும் தொழிலாளர்களின் அன்றாட பயணங்கள், அவர்கள் உண்ணும் கடைகளில் மீந்துபோகும் உணவு, அவர்களுக்கு கழிவுக் கடல்களில் கைகொடுக்கும் பாய்கள், அவர்கள் வசிக்கும் தரையற்ற வீடுகள், தாகம்கொண்ட அவர்கள் வீட்டு குடங்கள், படிக்க ஒதுங்கும் திண்ணைகள், படிக்காத குழந்தைகள் கூட்டம், மயிரிழையில் நிற்கும் மரணம், கணவர்களை இழந்து கண்ணீரில் கரையும் மனைவிகள், மரணக் கூடத்திலும் தொட மறுக்கும் சாதி , அதன் கசடுகளென நிறைந்து வழியும் குப்பைத் தொட்டிகள், விஷவாயு கொண்டு போய்விட்ட அப்பாவுக்காக, அண்ணனுக்காக, மகனுக்காக, கணவனுக்காக, காதலனுக்காக, நண்பனுக்காக காத்திருக்கும் மனிதர்களும் செல்லப் பிராணிகளும் என பழனியின் புகைப்படங்கள் நம்மை அவர்களின் வாழ்வுக்குள் ஆழமாய் அழுத்தமாய் இட்டுச்செல்கின்றன.
இந்த புகைப்படக்கண்காட்சி நவம்பர் 9 முதல் 14ம் வரை லலித் கலா அகாடமி , கிரீம்ஸ் ரோடு ,சென்னை . நடைபெறுகிறது .