மோதிஹரி-அம்லேக்கஞ்ச் (நேபாள்) குழாய் திட்டத்தை பிரதமர் மற்றும் நேபாள பிரதமர் ஒலி கூட்டாக தொடங்கி வைத்தனர்
புதுதில்லி, செப்டம்பர் 10, 2019
இந்தியா – நேபாளம் இடையே அமைக்கப்பட்டுள்ள குழாய் மூலம் பெட்ரோலியப் பொருட்களை எடுத்துச் செல்லும் திட்டத்தை, பிரதமர் மோடி மற்றும் நேபாள பிரதமர் ஒலி ஆகியோர், காணொலி காட்சி மூலம் (10.09.2019) கூட்டாக தொடங்கி வைத்தனர்.
இந்தியாவின் மோதிஹரியிலிருந்து நேபாளத்தின் அம்லேக்கஞ்ச் இடையே அமைக்கப்பட்டுள்ள, நாடுகளுக்கு இடையே, குழாய் மூலம் பெட்ரோலியப் பொருட்கள் எடுத்துச் செல்லும் தெற்காசியாவின் முதலாவது திட்டத்தை பிரதமர் திரு நரேந்திர மோடியும், நேபாள பிரதமர் திரு.கே.பி.சர்மா ஒலியும், காணொ காட்சி வாயிலாக கூட்டாக தொடங்கி வைத்தனர்.
நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் ஒலி, மிக முக்கியமான இந்த இணைப்புத் திட்டத்தை, திட்டமிட்ட காலத்திற்கு மிக முன்னதாகவே நிறைவேற்றி முடித்ததற்கு பாராட்டு தெரிவித்தார்.
மோதிஹரி-அம்லேக்கஞ்ச் இடையேயான 69 கிலோ மீட்டர் தூர குழாய் மூலம், ஆண்டுக்கு 2 மில்லியன் மெட்ரிக் டன் அளவிலான தூய்மையான பெட்ரோலியப் பொருட்களை, குறைந்த விலையில் நேபாள மக்களுக்கு விநியோகிக்க முடியும் என பிரதமர் மோடி தெரிவித்தார். நேபாளத்தில் பெட்ரோலியப் பொருட்களின் விலையை, லிட்டருக்கு 2 ரூபாய் குறைப்பதென்ற பிரதமர் ஒலியின் அறிவிப்பையும் வரவேற்பதாக அவர் கூறினார்.
இந்தியா – நேபாளம் இடையே, அடிக்கடி அரசின் உயர்மட்ட அளவிலான சந்திப்புகளை மேற்கொள்வதன் மூலம், இருதரப்பு நட்புறவை விரிவுபடுத்த வழிவகை ஏற்படுத்தப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்தார். இந்தியா – நேபாளம் இடையேயான இருதரப்பு நட்புறவு, மேலும் வலுப்பெற்று பல்வேறு துறைகளுக்கு விரிவுபடுத்தப்படும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
நேபாளத்திற்கு வருமாறு அந்நாட்டுப் பிரதமர் ஒலி விடுத்த அழைப்பை, பிரதமர் நரேந்திர மோடி ஏற்றுக்கொண்டார்.