நடிகர் அதர்வா முரளி நடித்திருக்கும் ‘அட்ரஸ்’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது.
இந்த ‘அட்ரஸ்’ படத்தில் ஒரு புரட்சிகரமான ‘காளி’ என்கிற ஒரு இளைஞன் வேடத்தில் அதர்வா முரளி நட்புக்காக நடித்திருக்கிறார். இவரது ஜோடியாக பூஜா ஜாவேரி நடித்திருக்கிறார்.
மேலும் இசக்கி பரத், புதுமுகம் தியா, தம்பி ராமையா, தேவதர்ஷினி, ஏ.வெங்கடேஷ், ‘மெட்ராஸ்’ நந்தகுமார், நாகேந்திரன், ‘கோலிசோடா’ முத்து மற்றும் பலர் நடித்துள்ளனர்.
கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இசை அமைத்திருக்கிறார். இவர் ‘மெரீனா’, ‘மூக்குத்தி அம்மன்’, ‘நெற்றிக்கண்’ ஆகிய படங்களுக்கு இசை அமைத்துள்ளார்.
பாடல்கள் – சினேகன், மோகன் ராஜன், ‘கானா’ ஹரி, படத் தொகுப்பு – தியாகு, புகைப்படங்கள் – குமார், சண்டை இயக்கம் – சில்வா, மக்கள் தொடர்பு – ஜான்சன்.
இந்தப் படத்திற்கு இயக்குநர் ராஜாமோகன், கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கியிருக்கிறார். இவர் ஏற்கெனவே ‘குங்கும பூவும் கொஞ்சும் புறாவும்’, ‘வானவராயன் வல்லவராயன்’ ஆகிய படங்களை இயக்கியவர்.
1956-ல் மதராஸ் மாகாணமாக நான்கு மாநிலங்களை உள்ளடக்கியதாக இருந்த தமிழ்நாடு மொழி வாரி மாநிலங்களாக நான்காகப் பிரிக்கப்பட்டது. அப்போது தமிழ்நாட்டுக்கும் கேரளாவுக்கும் நடுவில் சிக்கி கொண்டு தனது ‘அட்ரஸை’ தொலைத்த ஒரு கிராமத்தின் கதைதான் இந்த ‘அட்ரஸ்’ திரைப்படம்.
அந்தக் கிராமத்துக்குக் கடைசியில் ‘அட்ரஸ்’ கிடைத்ததா இல்லையா என்பதே இப்படத்தின் திரைக்கதை. ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவான இந்தப் படத்தின் படப்பிடிப்பு மலை சார்ந்த பகுதிகளில் நடைபெற்றது.
கொடைக்கானலில் இருந்து 8 கிலோ மீட்டர் நடந்து நடந்து சென்று வெள்ளக் கவி என்ற கிராமத்தில் மொத்தப் படப்பிடிப்பையும் நடத்தி முடித்துள்ளார்கள்.
தற்போது படத்தின் இறுதிகட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. விரைவில் இந்தப் படத்தின் இசை மற்றும் டீஸர் வெளியாகும்.