“தியேட்டர்காரர்களின் பிடியில் தமிழ்சினிமா சிக்கியுள்ளது” ; கார்கில் விழாவில் குமுறிய இயக்குனர்..!

“தியேட்டர்காரர்களின் பிடியில் தமிழ்சினிமா சிக்கியுள்ளது” ; கார்கில் விழாவில் குமுறிய இயக்குனர்..!

தமிழ் சினிமாவில் அவ்வப்போது புது முயற்சிகளாக சில வித்தியாசமான படங்கள் வருவதுண்டு,, அப்படி ஒரு படம் தான் சிவானி செந்தில் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘கார்கில்’. ஜிஷ்ணு கதாநாயகனாக நடித்துள்ள இந்தப்படத்தின் இசைவெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. தமிழ் சினிமாவில் மிக வெற்றிகரமான தயாரிப்பாளர் திரு. கலைப்புலி எஸ். தாணு பாடல்களை வெளியிட்டார்.

“கார்கில் என்றாலே கார்கில் போர் தான் நினைவுக்கு வரும்.. காதலும் அப்படி ஒரு போர் மாதிரித்தான் அதனால் தான் கார்கில் என டைட்டில் வைத்துள்ளோம்.. நாயகியுடன் ஊடல் கொண்டுள்ள நாயகனின் சென்னை – பெங்களூர் வரையிலான கார் பயணமும் அதில் நடக்கும் நிகழ்வுகளும் தான் மொத்தப்படமும்.. இதில் முக்கியமாக, தமிழ்சினிமாவில் புதுவிஷயமாக இந்தப்படத்தில் ஒரே ஒருத்தர் தான் நடித்துள்ளார் அவர்தான் நாயகன் ஜிஷ்ணு.. புது முயற்சி என்பதற்காக போராடிக்காமல், முழுக்க முழுக்க பொழுதுபோக்கு படமாகத்தான் இதை உருவாக்கியுள்ளோம்” என்கிறார் படத்தின் இயக்குனர் சிவானி செந்தில்.

இந்த விழாவில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட ‘அய்யனார் வீதி’ பட இயக்குனர் ஜிப்ஸி ராஜ்குமார் இந்த படக்குழுவினரை வாழ்த்தி பேசும்போது சிறிய பட்ஜெட் படங்கள் இன்று தியேட்டர்களில் என்ன பாடுபடுகிறது என்பதை தனது பட அனுபவத்தில் இருந்து மனக்குமுறலாக கொட்டினார்.

“இயக்குனர் சிவானி செந்திலின் மனைவி தான் தயாரிப்பாளராக இறங்கியுள்ளதால் பயப்படுவதாக கூறினார். பத்திரிகையாளர்கள் இருக்கும்வரை அந்த பயம் தேவையில்லாதது.. அவர்கள் நம் படத்தை ரசிகர்களிடம் கொண்டு சேர்ப்பார்கள். என்னுடைய ‘அய்யனார் வீதி’ படத்தை ரிலீஸ் செய்த சமயத்தில் தான் ‘பாகுபலி’ படம் வெளியானது. இருந்தாலும் எனது தயாரிப்பாளர் படத்தை ரிலீஸ் செய்யும் தைரியத்தை எனக்கு அளித்தார். படம் ரிலீசாகி இரண்டாவது வாரம் போஸ்டர்கள் ஓட்ட ஆரம்பித்துவிட்ட நிலையில் தியேட்டர்காரர்கள், காட்சிகளின் எண்ணிக்கையை குறைக்க ஆரம்பித்தார்கள்.. சில பேர் இடம் இல்லை என கூறிவிட்டார்கள்.

இன்றைக்கு தமிழ்சினிமாவில் வாராவாரம் ஐந்து படங்கள் வரை ரிலீசாகி கொண்டு இருக்கின்றன. இதனால் நிறைய தயாரிப்பாளர்கள் தெருவிற்கு வந்துகொண்டிருக்கின்றனர். இதுதான் இன்றைய நிலைமை.. ஆனால் இதுல எல்லாம் தாக்கு பிடிச்சு நிற்கிறவன் தான் ஜெயிக்க முடியும்.. எனக்கு கிடைச்ச அனுபவம் மூலமா இது மாதிரி புது படக்குழுவினருக்கு என்னோட ஆதரவை தர்றதுக்காகத்தான் இந்த விழாவுக்கு வந்தேன்..

இன்னைக்கு தியேட்டர்காரர்கள் தான் எல்லாத்தையும் முடிவு பண்றாங்க.. ரெண்டுநாள் ஓட்டிட்டு மூணாவது நாள் படத்தை தூக்கிடுறாங்க.. அவங்களை யாரு கேட்கிறது யாராலேயும் கேட்க முடியாது.. ஏன்னா அவங்க வலுவா இருக்கிறாங்க.” என கொட்டி தீர்த்துவிட்டார் ஜிப்ஸி ராஜ்குமார்.

இந்தப்படத்தின் அனைத்து போஸ்ட் புரடக்சன் வேலைகளும் நிறைவுபெற்ற நிலையில் திரைக்கு வர தயார் நிலையில் உள்ளது

தொழிநுட்ப கலைஞர்கள் விபரம்:

கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியவர் : சிவானி செந்தில்
ஒளிப்பதிவு : கணேஷ் பரமஹம்ஸா
இசை :விக்னேஷ் பாய்
பாடல்கள்: பாரி இளவழகன் மற்றும் தர்மா
எடிட்டிங் : அபிநாத்
மக்கள் தொடர்பு : செல்வரகு
தயாரிப்பு : சுபா செந்தில் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *